சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த பாரத தேசத்தவர்களுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர், “பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் பாரதத்தை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்க மாட்டோம். பாரதம் அனைவருடனும் சுமூகமான உறவைப் பேணவே விரும்புகிறது. ஆனால் அதற்காக, மன்னித்துக் கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வெறுமனே வேடிக்கை பார்ப்பது என்பது இதற்கு பொருள் அல்ல. இதில் பாரதத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நிச்சயமாக நமது சில எல்லைப் பகுதிகளில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. கொரோனா காலக்கட்டத்தில் அது சிறிது அதிகரித்துவிட்டது. சீனா, தன்னிச்சையாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டை மாற்றி அமைப்பதற்கு பாரதம் உடன்படவில்லை. இதனால் சிக்கல் உருவாகியுள்ளது. சமாதானத்தை விரும்பும் நாடாக பாரதம் உள்ளது. பாரதம் தற்போது சுதந்திரமான, பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது. பாரதம் தற்போது சைபரஸ் நாட்டுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புநடவடிக்கைகள், மக்கள் புலம்பெயர்வதை எளிதாக்கும் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு என 3 ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தபோது வெளிநாடுகளில் வாழும் பாரத நாட்டினர் தங்களின் தாய்நாட்டிற்கான முக்கியமான பலம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். 3.3 கோடி பாரத மக்கள், பாரத வம்சாவளியினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவ்வளவு அதிகமான அளவில் அவர்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் நமது நாட்டுக்கான பலன் பலவழிகளில் வெளிப்படையாக தெரிகிறது. வெளிநாடுவாழ் பாரத தேசத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பாரதத்தின் கடமை, வெளிநாட்டில் இருக்கும் நம்நாட்டு மக்களை அனைத்து வழிமுறைகளிலும் பாதுகாப்பது. குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களுடன் நிற்பது. கடந்த எட்டு வருடங்களில் எப்போதெல்லாம் வெளிநாட்டுவாழ் பாரத தேசத்தவருக்கு சிக்கல் எழுந்ததோ அப்போதெல்லாம் மத்திய அரசு அவர்களுடன் துணை நின்றதை நீங்கள் அறிவீர்கள்” என கூறினார்.