கோடை காலம் தொடங்கி உள்ளது. இந்த வருடத்தின் கோடைகாலத்தில் தேர்தல் ஜுரம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் வெயிலின் தாக்கம் வழக்கம் போல அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நேரத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், அன்றாட வாழ்வில் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மருத்துவர் சுபா சொல்கிறார் பார்ப்போமா ?
“சீதா, ஓரமா நிழல்ல அந்த தர்பூசணி அண்ணா கடைக்கிட்ட நிறுத்துமா.”
“வெயில் பின்னியெடுக்குது. அப்படியே சூரிய பகவான் ஸ்ட்ரா (Straw) போட்டு எல்லா தண்ணீரையும் உடம்பிலிருந்து உறிஞ்சிடுவார் போல.”
“ஆமாம் சீதா, இந்த வெயில் காலத்துல எப்படி சமாளிக்கிறிங்க?”
அதாவது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பராமரிப்பு முறைகள் (Maintenance Tips) கிட்டத்தட்ட ஒன்றுதான்.
இந்த வெயில் காலத்தில், வெப்பத்தால் வியர்வை அதிகமாக வரும். பருத்தியாலான மென்மையான தளர்வான ஆடைகளை (Cotton Clothes) அணிந்தால், அது வியர்வையை உறிஞ்ச உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கூடவே, துணிகளின் சுவாசிக்கக்கூடிய தன்மை காற்றோட்டத்தை அனுமதிப்பதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
அடுத்து, வெளிர் நிற (Light Colour) உடைகள் சூரியனின் ஒளியை சுமார் 90% வரை எதிரொளிப்பதால், வெப்பம் உடலுக்குள் அதிகமாக வருவதைத் தடுக்கின்றன.
மிகவும் முக்கியமானது — ஆண்களும், பெண்களும் பருத்தி போன்ற இயற்கையான உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். அதோடு, துணிகளை நன்றாக துவைத்து நன்கு உலர்த்தவும் வேண்டும்.
கால்களை குளிர்ச்சியாக வைத்திருக்க கேன்வாஸ் மற்றும் மென்மையான தோல் போன்ற சுவாசிக்கக்கூடிய பொருட்களால் செய்யப்பட்ட காலணிகள், அல்லது ஃப்ளிப்-ஃப்ளாப் (Flip Flop) செருப்புகள் பயன்படுத்தலாம். வெப்பமான காலநிலைக்கு ஏற்ற சாக்ஸ்களை அணியலாம். சாக்ஸ்களை தினமும் துவைத்து உலர்த்த வேண்டும்.
இப்போது நாம் பைக்கில் வந்திருக்கோம். தொடர்ந்து வாகனத்தில் (Bike / Scooter) நகர்ந்து கொண்டே இருந்தால், காற்றோட்டத்தால் வெப்பத்தின் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும்.
வெயிலில், வியர்வையை நினைத்து ஹெல்மெட் போடாமல் இருக்க வேண்டாம். வெளிர் நிற, காற்றோட்ட வசதி (Vents) உள்ள ஹெல்மெட்டுகளை வாங்குங்கள். வாகனத்தை நிழலில் நிறுத்துங்கள், ஹெல்மெட்டையும் நிழலில் வைத்துக்கொள்ளுங்கள். வாகனத்தை ஓட்டும் போது வழியில் நிற்கும் நேரங்களில் ஹெல்மெட்டின் விசர் (Visor)-ஐ சிறிது திறந்து வைத்தால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
வியர்வையை உறிஞ்சுவதற்கு பருத்தியாலான கைக்குட்டையை தலையில் கட்டிக்கொள்ளலாம். இது ஹெல்மெட் லைனரை சுத்தமாக வைத்திருப்பதோடு, தலையையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். நல்ல தரமான ஹெல்மெட்டுகளின் உட்புற அகற்றக்கூடிய மெத்தையை (Liner) மென்மையான சோப்பால் துவைத்து, நிழலில் நன்கு உலர்த்த வேண்டும்.
ஹெல்மெட் கூலர்கள் – ஹெல்மெட்டின் முன்பகுதியில் பொருத்தப்படும் பேட்டரி விசிறி போல இருக்கும். இது சிறிய ஏ.சி போல செயல்பட்டு, தண்ணீர் தொட்டியில் உள்ள நீரைப் பயன்படுத்தி குளிர்ந்த காற்றை ஹெல்மெட்டிற்குள் செலுத்தும்.
ஈரமான கைக்குட்டையை கழுத்தைச் சுற்றி அணிவது, உடல் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்கும்.
சரும பாதுகாப்பை எப்படி செய்வது?
வெயிலால் ஏற்படும் மிலியாரியா (வேர்க்குரு), முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். சருமத்தின் துளைகள் எண்ணெய் (Sebum) மூலம் அடைக்கப்பட்டால், முகப்பரு உருவாகிறது மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் தடுக்க அடிக்கடி தண்ணீர் வைத்து முகம், கை, கால்களை கழுவ வேண்டும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். சுத்தமான ஆடை மற்றும் உள்ளாடைகள் அணிய வேண்டும்.
கடுமையான சூரிய ஒளியால் சரும நிற மாற்றம் (Hyperpigmentation), சரும வறட்சி (Dry Skin) போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க ஜெல் அடிப்படையிலான SPF 30+ சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம். ரசாயனங்கள் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், குடை பயன்படுத்துவது நல்ல மாற்று வழி.
பாரம்பரியமான வீட்டு வைத்தியம் சிறந்தது..
கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துங்கள். சந்தனத் தூள், கஸ்தூரி மஞ்சள் மற்றும் பன்னீர் கலந்து தடவுவது, தோல் அரிப்பைக் குறைக்க உதவும். நடந்து செல்லும் போதும் சரி, வாகனத்தில் செல்லும் போதும் சரி, கண்களை பாதுகாக்க UVA மற்றும் UVB கதிர்களை 100% தடுக்கும் கண்ணாடிகளை (UV400) அணிய வேண்டும். இவை கண்களை முழுமையாக மூடும் வகை (Wrap-around sunglasses) கண்ணாடிகளாக இருந்தால் நல்லது.
சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க நடந்து செல்லும் போது, அகலமான விளிம்பு கொண்ட தொப்பிகளை (Wide-brimmed hats) அணிவது நல்லது. முகத்தை மறைக்க ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டாக்களைப் பயன்படுத்தலாம்.
காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை சூரியனின் கதிர்கள் உச்சத்தில் இருக்கும் பொழுது முடிந்தவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
“கோடைகாலத்தில் உணவு எப்படி இருக்க வேண்டும்?”
நம் பாரம்பரிய உணவுகள் சத்தானவை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் காலநிலைக்கு ஏற்ற உணவு ஆகும்.
கடுமையான வெப்பம் இருப்பதால், குளிர்ச்சி மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். இது நம்ம பாரம்பரிய உணவு வகைகளான பழங்கஞ்சி, கம்பு கூழ், மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி, நுங்கு மற்றும் கிர்ணிப் பழம் ஆகியவை இதில் சிறந்தவை. உடல் வெப்பத்தைக் குறைக்க சுரைக்காய், பூசணிக்காய், கீரைகள் மற்றும் தயிர் சேர்த்த உணவுகள் உதவும்.சில உணவுகளை தவிர்க்கலாம் அல்லது அவற்றின் அளவை குறைத்து சாப்பிடுவது நல்லது. காரமான உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள், காஃபின் மற்றும் மது அருந்துதல், மிகவும் சூடான உணவுகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றை குறைப்பது நல்லது.
சூரிய கதிர்வீச்சினால் வீட்டின் கூரை, சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் வழியாக வெப்பம் உள்ளே ஊடுருவுகிறது. இதனால் வீட்டில் இருப்பதே கடினமாகிறது.
மாடித் தோட்டம் இருந்தால் வெப்பத்தை குறைக்க உதவும். அதிக வெயிலிலிருந்து செடிகளைப் பாதுகாக்க பசுமை நிழல் வலை (Green Shade Net) போட்டிருந்தால் வெப்பத்தை நன்றாக தணிக்கும்.
மொட்டை மாடியை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு, வெப்பத் தடுப்புப் பூச்சுகள் அல்லது கூரை டைல்ஸ் பயன்படுத்தலாம். தண்ணீர் தொட்டியின் மீது வெள்ளை வண்ணம் பூசுவது அல்லது வெப்பத்தை பிரதிபலிக்கும் ‘கூலிங் பெயிண்ட்’ (Cooling paint) பூசுவது தண்ணீரை குளிர்ச்சியாக வைக்க உதவும். தண்ணீர் தொட்டிக்கு மேல் ஒரு சிறிய நிழல் அமைப்பது (shade) அல்லது தொட்டியைச் சுற்றி செடிகள் வளர்ப்பது நேரடி சூரிய ஒளியைத் தடுக்கும்.
ஜன்னல்களை அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், வெயில் குறைவாக இருக்கும் போது திறந்து வைத்து, மதிய நேரத்தில் மூடி வைப்பது வெப்பத்தைச் சற்று தணிக்கும். பாரம்பரியமான வெட்டிவேர் ஜன்னல் திரைகள் அல்லது துணித் திரைகள் மீது தண்ணீர் தெளித்துவிட்டால், இயற்கை குளிர்ச்சியூட்டியாக உள்ளே வரும் காற்றின் வெப்பத்தை நன்றாக குறைக்க உதவும்.
படுக்கையில் இலவம் பஞ்சு, தென்னை நார் மெத்தைகள் மற்றும் தலையணைகள் காற்றுச் சுழற்சியை அனுமதிக்கின்றன. அதனால் வெப்பமான, ஈரப்பதமான காலநிலைக்கு இவை பயனுள்ளதாக கருதப்படுகின்றன. பருத்தி, கைத்தறி அல்லது மூங்கிலால் செய்யப்பட்ட வெளிர் நிற விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
தரையில் கோரைப் பாயை போட்டு படுக்கலாம். படுக்கைக்கு முன் ஈரத் துணியால் தரையைத் துடைத்துவிட்டு படுப்பதும் குளிர்ச்சியை தரும். வீட்டில் தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்வதும் நல்லது.
கோடைக்காலத்தில் ஏ.சி.யை 24°C முதல் 26°C வரை வைத்திருப்பது இரண்டு விதத்தில் நல்லது: உடலுக்கும் ஆரோக்கியம், மின்சாரக் கட்டணமும் குறைவாக இருக்கும். வீட்டுக்குள் உள்ள வெப்பநிலையும் வீட்டிற்கு வெளியே உள்ள வெப்பநிலையும் 10°C-க்குள் தான் வித்தியாசம் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதிக வெப்பநிலையிலிருந்து திடீரெனக் குளிர்ந்த அறைக்குள் நுழையும்போது, இரத்த நாளங்கள் திடீரெனச் சுருங்கி, தலைவலி மற்றும் மயக்கத்தை உண்டாக்கும்.
சில எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், நம் கோடை பாதுகாப்பாகவும், இனிமையாகவும், சுகமானதாகவும் இருப்பதை உறுதிசெய்யலாம். வெளியே சென்று இந்த வெயில் நாட்களை ஆண்டின் சிறந்த நாட்களாக மாற்றலாம்!”
வீட்டில் இருக்கும் குட்டீஸ்களை ஆக்கப்பூர்வமாக ஈடுபடுத்த எளிய வழிகள்…
பண்பாட்டு வகுப்புகளுக்கு அனுப்பலாம்
தேசபக்தி பாடல்கள், நாட்டின் பாரம்பரியம், நம் நாட்டில் உள்ள மலைகள், நதிகள், சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகத்தான தலைவர்கள் போன்ற பல நல்ல விஷயங்களை குழந்தைகள் அறிந்து கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு. நம்ம சேவா பாரதி சார்பாக பண்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. அதில் நம் பிள்ளைகளை அனுப்பி வைத்து, அவர்களுக்கு நல்ல மதிப்புகள் மற்றும் அறிவை வளர்க்கலாம்.
கேட்ஜெட் நேரத்தை குறைக்கவும்
பசங்களுக்கு மொபைல், டேப் போன்றவற்றை எப்போதும் கையில் கொடுக்காமல், சில நேரம் அவற்றை விலக்கி வையுங்கள். அப்போது அவர்கள் வேறு செயல்களில் ஈடுபட நேரம் கிடைக்கும்.
காலையில் வெளியில் அழைத்துச் செல்லுங்கள்
பீச்சுக்கு அல்லது அருகிலுள்ள பூங்காவுக்கு அழைத்துச் சென்று, சூரிய உதயத்தை பார்க்கச் செய்யுங்கள். சூரிய ஒளி கிடைப்பதால், உடலுக்கு தேவையான வைட்டமின் – டி கிடைக்கும்.
ஆரோக்கியமான சம்மர் உணவுகள் கொடுங்கள்
பழங்கள், ராகி கஞ்சி, களி, வெஜிடபிள் சூப், பச்சை மாங்காய், இளநீர் போன்ற ஆரோக்கியமான உணவுகள் உடலை குளிர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். பழங்கள், ஜூஸ், வீட்டில் செய்த நொறுக்குத் தீனிகள் கொடுக்கலாம். வளரும் வயதில் பசங்களுக்கு அதிக பசி இருக்கும்.
இயல்பான குளியல் பழக்கம்
வீட்டுக்கு வந்த பிறகு சாதாரண வெப்பநிலையிலுள்ள தண்ணீரில் குளிக்கச் செய்யுங்கள். கோடை காலத்தில் ஹீட்டர் தேவையில்லை.
வாசிப்பு பழக்கம் வளர்த்திடுங்கள்
கதை புத்தகங்கள் வாங்கித் தரலாம். அல்லது அருகிலுள்ள நூலகத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளலாம்.
விளையாட்டில்
சேர்த்திடுங்கள்
அரங்கம் அல்லது மைதானங்களிலோ விளையாடும் விளையாட்டு எதுவாக இருந்தாலும், ஒரு விளையாட்டில் சேர்ப்பது நல்லது. காலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் அவுட்டோர் விளையாட்டு செய்ய வேண்டும்.
குடும்ப நேரத்தை அதிகரிக்கவும்
குடும்பத்துடன் பேசி, பழகி சிரிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும். நண்பர்களின் வீட்டுக்கு அழைத்து செல்லலாம்; அவர்களையும் வீட்டுக்கு அழைக்கலாம். இரவில் அன்று நடந்த நல்ல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே தூங்கலாம். சில சமயங்களில் மொட்டை மாடியில் நட்சத்திரங்களை பார்த்து மகிழவும் செய்யலாம்.
கட்டுரையாளர்: மருத்துவர்