வெப்ப அலையில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க நடவடிக்கை

மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களை வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் வெப்ப அலையின் பாதிப்பு இல்லாமல், வாக்களிக்க வசதியாக உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளை வாக்குச் சாவடிகளில் கட்டாயம் ஏற்படுத்தி தர வேண்டும்.

வயதான மற்றும் மாற்றுத் திறன் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை சிரமமின்றி செலுத்த ஏதுவாக, தரைதளத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும். இதுமட்டுமின்றி, குடிநீர், உட்கார்வதற்கான நாற்காலி, பெஞ்ச், தடையில்லாத மின்சாரம், முறையான வழிகாட்டு பலகைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்த வேண்டும். நிழலுக்கான கூடார ஏற்பாடுகள், குழந்தைகளுக்கான காப்பகம் மற்றும் வாக்காளர் உதவி மையம் ஆகியவற்றை அமைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 18-வது மக்களவையின் 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவு ஜூன் 4-ம் தேதி வெளியிடப்படுகிறது.