சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான். ஒருநாள் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தான். இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனின் தாத்தா குழந்தைகள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என நினைத்தார். கீழிறங்கி வாருங்கள் என்று சத்தம் போட்டார். அவர்கள் வந்ததும், ”இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. மரத்தில் ஏறி விளையாடினால் அது அடித்துக் கொன்றுவிடும். மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார். இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டனர். நமது சுட்டிப் பையனும் சரி சரி என தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏறினான். நண்பர்கள், “ஏறாதே, பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார், சரிதான். ஆனால் அப்படி பேய் இருந்திருந்தால் இந்நேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.” என்றான். அதற்கு மற்ற சிறுவர்கள், ‘உன் தாத்தா சொன்ன போது…சரி என்று தலையை ஆட்டினாயே, அது ஏன்?’ என்று கேட்டதற்கு, ‘எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்’ என்றான் சிறுவன்.
மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா? எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான்!!!