கதாதரனுக்கு ஒன்பது வயது. அந்தண பாலகனான அவனுக்கு உபநயனம் நடத்த முடிவு செய்தார்கள். உபநயன சடங்கின் முப்புரிநூல் அணிந்தவன் முதலில் தன் தாயிடம் சென்று பிக்ஷை வாங்கவேண்டும். இது பற்றிய விபரங்களை கதாதரனுக்கு அவனது அண்ணன் ராம்குமார் விவரித்தார்.
அதற்கு கதாதரனோ ‘‘அண்ணா, உபநயனம் முடிந்த பிறகு நான் முதலில் தனியம்மாவிடமிருந்தே பிக்ஷை பெற்றுக் கொள்வேன்’’ என்று தெரிவித்தான். இதைக் கேட்டதும் ராம்குமார் பதறிவிட்டார். காரணம் கதாதரன் சொல்கிற அந்த தனியம்மா பட்டியலினத்தைச் சேர்ந்தவள். அவள் மீது சிறுவன் கதாதரனுக்கு அன்பும் பாசமும் இருந்தது.
இப்படி நடந்தால் உறவினர்கள், என்ன சொல்வார்களோ என்ற பயம் அவருக்கு இருந்தது. ஆனால் கதாதரன் தனது முடிவை மாற்றிக்கொள்ள மறுத்துவிட்டான்.
உபநயனம் நடைபெறும் நாளன்று உறவினர்கள், கிராம மக்கள் என அனைவருமே வருகை தந்தனர். ஹோமம் வளர்த்து கதாதரனுக்கு காயத்ரி மந்திரம் உபதேசிக்கப்பட்டது. தாய் சந்திரமணி தேவியும் மற்றும் உறவினர்களும் கதாதரனுக்கு பிக்ஷையிடத் தயாராக இருந்தார்கள். ஆனால் கதாதரன் தூரத்தில் தயங்கி நின்று கொண்டிருந்த தனியம்மாவை விழுந்து வணங்கினான். பிறகு எழுந்து கைகூப்பி நின்றான். கணீரென்ற குரலில் ‘‘பவதி பிக்ஷாம் தேஹி’’ என்றான். அந்த அம்மா பயந்து நடுநடுங்கியபடி தான் கொண்டுவந்திருந்த அரிசி, பழங்கள், புஷ்பங்கள், புதிய துணிகள், ஆகியவற்றை கதாதரன் பையில் பிக்ஷையிட்டாள். அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.
இப்படி எல்லோரையும் வியக்க வைத்த அந்தச் சிறுவன் கதாதரன்தான் பின்னாளில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணராக ஆகிறார்.