வியாஸருடைய பிறந்த தினத்தை ஸ்ரீ குரு பூஜையாக நாம் கொண்டாடுகிறோம். மாதா, பிதாவிற்கு அடுத்த இடத்தில் குரு இருக்கிறார். உலகம் முழுவதையும் காகிதமாக்கி, கடல் நீரை மையாக்கி, அத்தனை மரங்களையும் எழுதுகோலாக்கி குருவின் மகிமையைப் பற்றி எழுதினாலும், அது முடியாத காரியம். குருவின் மகிமை அத்தனை சிறப்பு வாய்ந்தது. உலகிற்கு குருவாக பாரத நாடு உள்ளது. வேதத்தை வகுத்த ஸ்ரீ வியாசர், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ சமர்த்த ராமதாசர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பல மகான்கள் அவதரித்த பூமி, இந்த பாரத நாடு. இன்னும் பல மகான்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். நமது அக, புற இருளை நீக்குபவர் தான் குரு. அவர் இறைவனுக்கு சமம். எந்தவித பாகுபாடும் இல்லாமல், நமது உள்ளுணர்வை
புரிந்து கொண்டு நமக்கு வழி காட்டுபவர் தான் குரு.
நாம் நம்மை அறிந்து கொள்ள குருவின் துணை அவசியம் என்று கூறுகிறது, ‘முண்டக உபநிஷத்’. நமக்கு இறைவனைக் காட்டிக் கொடுப்பவர் குரு தான். குரு – சிஷ்ய உரையாடல்கள் மூலம் நமக்கு பல நூல்கள் கிடைத்துள்ளன. ஒரு சீடன் கல்வியில் கால் பகுதியை குருவின் மூலமும், அடுத்த கால் பகுதியை சுயமுயற்சி மூலமும், நண்பர்களிடமிருந்து கால் பகுதியையும், மீதி கால் பகுதியை சுய அனுபவத்தின் மூலமும் கற்றுக்கொள்கிறான். இன்றைய சமூகம், காலநிலையை அனுசரித்து நாம்,
சங்கத்தில் மௌன குருவாகத் திகழும் தஷிணாமூர்த்தி போல் காவிக்கொடியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறைகள் அற்றவர் என்ற அடிப்படையில், காவிக்கொடியை ஏற்றுக்கொண்டுள்ளோம், அதிகாலையில் தோன்றும் சூரியனின் தீப்பிழம்பு போன்ற வண்ணத்தைக் கொண்டது, இருளை நீக்கி பிரகாசம் அளிக்கும் அந்த வண்ணக் காவிக்கொடி தான், நமக்கு குரு. சன்யாச ஆஸ்ரமத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தியாகம், சமர்ப்பணத்தின் அடையாளமாக இந்தக் காவி நிற உடையைத்தான் அணிந்து கொள்கிறார்கள். உலகில் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்பவர்கள் அவதார புருஷர்கள். சத்ரபதி சிவாஜி, ஹிந்து சாம்ராஜ்யம் நிறுவி நமது சனாதான பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவைகளை காப்பாற்ற இந்தக் காவிக் கொடியைத்தான், தனது ராஜ்ஜியத்தில் ஏற்றி வைத்தார்.
ஆதிசங்கரரின் குரு கோவிந்த பகவத்பாதர் முதலில் குருவைக் காண நர்மதை நதிக்கு வரும்போது, அதில் கடும் வெள்ளம். மக்கள் செய்வதறியாது திகைத்து கோவிந்தரின் குடிலுக்கு வந்து முறையிட்டனர், அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அங்கு வந்த ஆதிசங்கரர், கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை தனது கமண்டலத்தில் ஏந்திக் கொண்டார். வெள்ளம் அடங்கியது. ஆதிசங்கரரின் மகிமையை கோவிந்த பகவத்பாதர் உணர்ந்து ஆச்சரியம் அடைந்தார். ஒருமுறை ஆதிசங்கரர், தனது சீடர்களுக்கு பிரம்மசூத்திரம் பற்றி பாடம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார், புதிய சீடன் ஒருவரும் அதில் இருந்தார். அவர் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மற்ற மாணவர்களுக்கு இடையூறாகவும் இருந்தது. அப்போது பத்மபாதர் என்ற ஆதிசங்கரரின் சீடர், அந்தச் சிறுவனான சீடரைப் பற்றிக் கேட்டார். நல்ல விஷயம் தெரிந்து இருக்கின்றது உனக்கு என்றார். அப்போது அந்த சிறுவன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் தான் வியாச பகவான். எல்லோருக்கும் ஆச்சரியம். ஆதிசங்கரர் அவரது காலில் விழுந்து வணங்கி அவரை புகழ்ந்து பாடினார். பிரம்மசூத்திரத்திற்கு மேலும் விளக்கங்கள் வேண்டும் என்ற கருத்தில் தான், ஸ்ரீ வியாசர் சீடனாக வந்து கேள்விகள் கேட்டார். விரிவான உரை கிடைக்கப் பெற்றது. அப்போது ஆதிசங்கரருக்கு வயது 16.
மேலும் 16 ஆண்டுகள் ஆதிசங்கரர் வாழ ஆசி வழங்கினார் வியாசர்.
சர் சிவி. ராமன் புகழ் பெற்ற விஞ்ஞானி. அவருக்கு பாரத அரசு ‘பாரத ரத்னா’ விருது கொடுக்க ஏற்பாடு செய்தது. அப்போது ஜனாதிபதியாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்தார். ஜனாதிபதி மாளிகையிலிருந்து விசேஷ அழைப்பு வந்தது. தன்னால் நேரில் வந்து பெற்றுக் கொள்ள முடியாது என்று பதில் அனுப்பி விட்டார். அதற்கான காரணம் கேட்கப்பட்டது. அதற்கு ராமன் அவர்கள் என்னுடைய மாணவர் ஒரு ஆராய்ச்சியில் இருக்கிறார். கால அவகாசமும் மிகக் குறைவாக உள்ளது. அந்த மாணவருக்கு நான் உதவி செய்ய வேண்டும். நான் அங்கு வருவதன் மூலம், அந்த மாணவருக்கு எந்தவித பாதிப்பும் இருக்கக்கூடாது. அதனால் வர இயலாது என்று கூறிவிட்டார். தனது மாணவருக்காக ஜனாதிபதி கையால் விருது வாங்கும் வாய்ப்பையும் தியாகம் செய்தார். குரு-சீடர் உறவு ஆத்மார்த்தமானது. அதில் மாணவர், சீடர் நலத்திற்கு மட்டுமே முக்கியம் கொடுக்கவேண்டும். இந்த சம்பவத்தை டாக்டர் அப்துல் கலாம் தனது அக்னிச் சிறகுகள் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பிரபல எழுத்தாளர் கல்கி முதலில் திரு.வி.க நடத்திய ‘நவசக்தி’ என்ற பத்திரிகையில் வேலை செய்தார். கிட்டத்தட்ட திரு.வி.க. தான் அவருக்கு குரு. திரு.வி.க. எழுத்தாளர், தேச பக்தர், சுதந்திரப் போராட்ட வீரர். தூய தமிழில் பேசுவதில் வல்லவர். கல்கி கூற்றுப்படி அவரது எழுத்தில், பேச்சில் ஸனாதன தர்மத்தின் சாயல் மையம் கொண்டிருக்கும். கல்கி, திரு.வி.கவால் உருவாக்கப்பட்டவர். தியாகராஜர் பாடியதுபோல் பல மகான்கள் அவதரித்த பூமி, இந்த பாரத பூமி. தொடர்ந்து குரு-சீடர்கள், இந்த பூமியில் அவதரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் காவிக்கொடியை ஏற்றுக்கொண்டிருப்பது போல், சீக்கியர்கள் அவர்களது புனித நூலான ‘குருகிர்ந்த ஸாஹேப்’ தான் அவர்களது குரு. இந்த பவித்ரமான குருபூஜை நாளில் நமக்கும், நாட்டிற்கும் என்ன செய்ய வேண்டும், என்ன முடியும் என்பதை உறுதி எடுத்துக் கொள்வோம்.
காந்தாமணி நாராயணன்