தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார், 1975ல், ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உட்பட, பல பொறுப்புகளில் பணியாற்றினார். இவரது தலைமையிலான அதிரடிப்படை தான், சந்தனக் கடத்தல் வீரப்பனை, 2004ல், ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொன்றது. சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக பணியாற்றி, 2012ல் ஓய்வு பெற்றார். ஓய்வுபெற்ற பின், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் மாநிலங்களின் ஆலோசகராகவும், ஜம்மு – காஷ்மீர் கவர்னரின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, அக்டோபர், 31ல் செயல்பாட்டுக்கு வந்தன. இதையடுத்து, கவர்னரின் ஆலோசகர் பதவியில்இருந்து விஜயகுமார் ஓய்வு பெற்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும், மாவோயிஸ்ட்டுகளால் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களுக்கும், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில், விஜயகுமார் ஆலோசனைகள் வழங்குவார். ‘அவர், இந்தப் பணியில், ஓராண்டு இருப்பார்’ என, உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.