வாக்களிப்பது நமது கடமை… உரிமை… கௌரவம்

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும். நீங்கள் வேலை செய்யும் இடம் ஓரிடம்… ஓட்டு இருப்பது சொந்த ஊரில் என்றால் ஓட்டுப் போடுவதற்காகவே சொந்த ஊருக்குச் சென்று ஓட்டுப்போட்டு வருவது நல்லது. வரிசையாக நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. திருப்பதி சென்று வந்து விடலாம் என்று கிளம்பி விடாதீர்கள். வாக்களிப்பது நமது கடமை. அதை புறக்கணித்து விட்டு கோயில், குளம் என்று சென்று வருவது ஏற்புடையது அல்ல. எந்த வேலையையும்விட வாக்களிப்பது மிக மிக முக்கியமானது.

யாருக்கு வாக்களித்து என்ன பயன்? எல்லா கட்சிகளுமே மோசமானதுதான் என புலம்பாமல், உள்ள கட்சிகளில் சிறந்த கட்சி எது, வேட்பாளர்கள் சிறந்தவர் யார் என்று கணித்து இருப்பவர்களில் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள்.

வாக்களிப்பதற்கு மனசாட்சியையே ஆதாரமாகக் கொள்ளுங்கள். ஊழல் குற்றச்சாட்டுகளில் கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தவர்கள் பலர் வேட்பாளர்களாக இருக்கின்றனர். கொஞ்சம் கூட இவர்களுக்கு வெட்கமே இல்லையா? பொது ஜனங்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்களா?

நடப்பது நாடாளுமன்றத் தேர்தல். நாட்டின் எதிர்காலத்திற்கு யார் பிரதமராக வந்தால் நல்லது என்று சிந்தித்து வாக்களிப்பது நல்லது. தனிக்கட்சி நடத்தி தனி ஆவர்த்தனம் செய்கிற சிலர் கூட்டணியில் ஓரிரு தொகுதிகளைப் பெற்று களத்தில் நிற்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. இவர்களுக்கு வாக்களிப்பது வீண்.

சபரிமலை பிரச்சினையில் ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கு ஹிந்துக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டிய சந்தர்ப்பம் இது. விஜயபாரதம் கட்சி சார்பற்ற பத்திரிகை. ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்தத் தேர்தலில் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பது தேச நலனுக்கு நல்லது என்று கருதுகிறது.

வாக்களிப்பது நமது கடமை. உரிமை… கௌரவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *