ஸ்ரீ நாராயண குரு பாரதத்தின் சிறந்த ஆன்மீகத் தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர். அவர் சமத்துவம், ஒற்றுமை மனித குலத்தின் மீதான அன்பு ஆகியவற்றில் பல தலைமுறைகள் ஆர்வம் கொள்ளச் செய்தார்.

19ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த பாரதத்திலும் மீண்டும் எழுச்சி பெற்ற முன்னணி நபர்களில் ஒருவரான ஸ்ரீ நாராயண குரு, அறியாமை மூட நம்பிக்கை இருளிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஒவ்வொரு உயிரினத்திலும் தெய்வீகம் உறைவது கண்ட அவர் “ஒரே சாதி, ஒரே மதம், மனிதகுலத்திற்கு ஒரே கடவுள்” என்ற சக்தி வாய்ந்த செய்தியை வழங்கினார். ஸ்ரீ நாராயண குரு எப்போதும் சுய சுத்திகரிப்பு, எளிமை மற்றும் உலகளாவிய அன்பை வலியுறுத்தினார். அவர் நிறுவிய கோயில்கள், பள்ளிகள், சமூக நிறுவனங்கள் ஆகியவை ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையே கல்வியறிவு, தன்னம்பிக்கை அறப் பண்புகளின் மையங்களாக செயல்பட்டன. மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் அவரது கவிதைகள் ஆழமான தத்துவ நுண்ணறிவையும் எளிமையையும் கலந்தன. அவரது படைப்புகள் மனித வாழ்க்கை ஆன்மீகம் பற்றிய அவரது ஆழமான புரிதலை பிரதிபலிக்கின்றன. இன்றைய உலகில், ஸ்ரீ நாராயண குருவின் செய்தி மேலும் பொருத்தமாக உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் பரஸ்பர மரியாதை ஆகியவற்றுக்கான அவரது அழைப்பு, மனிதகுலம் எதிர்கொள்ளும் மோதல்களுக்கு சிரஞ்சீவியான தீர்வை வழங்குகிறது.
(ஸ்ரீ நாராயண குரு மகா சமாதி நூற்றாண்டை துவக்கி வைத்து குடியரசுத் தலைவர் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து)