லட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா?

நாரதர் என்ற தேவரிஷியின் பல்வகை திறன்களும் நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பளிச்சிடுவதை காணலாம். படிக்க படிக்க தெவிட்டாது. சுருக்கமாக சில விவரங்கள்:

பிரும்மாவிற்கும் கல்விக் கடவுள் சரஸ்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் நாரதர். ஆகவே கருவிலேயே திரு வாய்க்கப்பெற்றவர்.

ஷப்த கல்பத்ருமா என்ற சமஸ்கிருத அகராதி, நாரதர் என்றால் மனிதர்களுக்கு (நரர்களுக்கு) பரம்பொருள் பற்றிய நல் அறிவினை அளிப்பவர்” என்று விளக்கமளிக்கிறது.

மனு ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி போலவே நாரத ஸ்மிருதியும், அரசமைப்பு, அரசனின் கடமைகள், உரிமைகள், நல்லாட்சியின் அடிப்படைகள் ஆகியவற்றை விளக்கும் சட்டத்துறை சம்பந்தமான நூல். நீதித்துறை அறிஞர்களால் ஒப்புயர்வற்ற நூலாகக் கருதப்படுகிறது. நாரத ஸ்மிருதியின் புகழ், பாரத நாடு மட்டுமின்றி பண்டைய நாளில் சீனா முதல் வியட்நாம், இந்தோனேசியா என்று அறியப்படும் உலகின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது.

புற உலக வாழ்க்கைக்கு எப்படி நாரத ஸ்மிருதியோ அவ்வாறே நாரத பக்தி சூத்திரங்கள் இறைவனை நோக்கிய நம்முடைய அக வாழ்விற்கு வழிகாட்டக் கூடிய பக்தி நூல். அவர் மனித குலத்திற்கு அளித்துள்ள ஒரு கொடை.

நாரதர் இறைவனுடைய குறிப்புகளை – செய்திகளை மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் கொண்டு சேர்க்கும் தூதன்.

நாரதர் கடும் தவமியற்றி நாராயணனிடமிருந்து பல வரங்களைப் பெற்றவர். அவற்றுள் ஒன்று, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சென்று அடையும் வல்லமை. இதன் காரணமாக எங்கெங்கு பிரச்னைகள் தோன்றுகின்றனவோ நல்லவர்களுக்கு (பக்தி மிக்கவர்களுக்கு) சோதனைகளைத் தீர்க்கும் துணிவை ஏற்படுத்துவதற்கும் தீயவர் நெஞ்சத்தில் கலக்கம் ஏற்படவும் செய்யும் வல்லமை. பின்னால் வரப்போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே தெரிவிப்பவர். (உதாரணம்: வசுதேவர் – தேவகிக்குப் பிறக்கப்போகும் எட்டாவது குழந்தை கம்சனை கொல்லப்போவது திண்ணம் என்ற அசரீரியின் வாக்கை ஒட்டி, கம்சனை மேலும் கவலைக்குள்ளாக்கியது).

அடுத்ததாக, தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே பிரகலாதனுக்கு மந்திரோபதேசம் செய்து இறைவன் பால் மாறக் காதலை ஏற்படுத்தியவர், அதன் மூலம் இரணியனின் கொடுங்கோன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.

இசையில் தேர்ச்சி பெற்ற பண்டிதர். மஹதி என்ற வீணையை வாசிப்பவர். கலைவாணியின் மகனாயிற்றே! கடவுளை அடைய நாதோபாசனை எளிய வழி என்று வாழ்ந்து காட்டியவர்.

அவர் ஒரு ரிஷியாயினும் ஆசிரமம் ஏற்படுத்திக் கொண்டு ஓரிடத்தில் தங்கிவிடவில்லை. அவர் திரிலோக சஞ்சாரி – மூவுலகமும் உலா வந்து கொண்டேயிருப்பவர். அதனால் நாரதர் ஒரு சிறந்த நிருபர் – செய்தி தொடர்பாளர். நிகழ்ச்சி நடக்கும் அல்லது நடக்கப் போகும் இடத்திற்கு முன் கூட்டியே சென்று துல்லியமாக விவரங்களைக் கிரகித்து யார் யாருக்கு எந்த அளவு வெளிப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு அறிந்து வழங்குபவர். பத்திரிகையாளர்களுக்கு முன்னோடி. வசதியாக குளிர்சாதன அறையில் உட்கார்ந்து கொண்டு செய்திகளைத் தயாரிப்பவர் அல்லர். களப்பணியாளர் அவர்.

தன்னுடைய ஆற்றலைக் கொண்டு தனக்கு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள மாறாக எல்லாம் உலக நன்மைக்கு என்று இறைவன் கைக்கருவியாக வாழ்ந்தவர்.

இறைவன், தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என்று எல்லோரிடமும் இயல்பாக பழகுபவர். அவர்கள் ஆலோசனை பெற இவரை அணுகுவது உண்டு. கேட்பவரின் வார்த்தைகளின் பொருளை மட்டுமல்ல, அவர்களது உள்ளத்திலே புதைந்துள்ள எண்ணத்தையும் ஊடுருவிப் பார்த்து புரிந்துகொண்டு சமயோசிதமாகச் செயல்படுபவர்.

அது மட்டுமல்ல, செய்திகளை புதிர் போடுவது போல சுருங்கச் சொல்லி விளங்கவைத்தவர். வேடுவனாக இருந்த ரத்னாகரன் மனம் வெதும்பி இருந்த வேளையில் ஆறுதல் அளித்து வாழ்க்கையின் உயரிய இலக்குகள் பால் அவரை மடைமாற்றி வால்மீகி என்ற கவி மலர காரணமானவர். உயர்ந்த குணங்களின் இலக்கணமான ராமபிரானின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வால்மீகியின் ஆவலைத் தூண்டி உலகிற்கு ராமாயணம் கிடைக்கச் செய்தவர்.

எனவே நாரதர் சகலகலா வல்லவர் தானே?

நாரதர் தமிழகத்திற்கு நன்கு அறிமுகம் ஆனவர். பக்தி இலக்கியங்களும் கோயில் ஸ்தல புராணங்களும் சிற்பங்களுமே சான்று.

* ஒருமுறை சிவபெருமானுடன் வாதம் புரிந்து ஏதோ ஒரு காரணத்தினால் நாரதர் சிவபெருமானின் சாபத்திற்கு உள்ளானார். அவர் வீணையும் வளைந்து போயிற்று. பின்னர் சிவனின் ஆணைப்படியே விராலிமலை முருகன் அருள் வேண்டி தவமியற்றி சாபம் நீங்கினாராம். வீணையும் சரியானது. விராலிமலையில் உற்சவத்தின்போது நாரதர் உற்சவராக உலா வருவார்.

* புதுக்கோட்டையில் சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற நார்த்தா மலை, நாரதா மலை என்பது பேச்சு வழக்கில் மருவியதாக நம்பப்படுகிறது. (நகரத்தார் மலை என்பதன் திரிபு என்றும் சொல்வர்).

* மன்னார்குடியில் பாமணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஜெயங்கொண்டநாதர் கோயிலில் சிவலிங்கத்தின் பக்கத்தில் பெருமாள் நிற்கிறார். நாரதர் இருவரையும் இணைத்தே பூஜை செய்கிறார். இந்தக் கோயிலில் சைவ-வைணவ பாலம் அல்லவா நாரதர்?

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள திருவேட்களம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பாசுபதேஸ்வரரை அர்ஜுனனுடன் நாரதர் வழிபடுவதாக ஐதீகம்.

* காஞ்சியில் பன்னெடுங்காலம் நாரதரால் வழிபடப்பெற்ற லிங்கம், பின்னர் கோவைக்கு அருகில் வெள்ளியங்கிரியில் பட்டீஸ்வராக தோன்றுகிறார் என்பது ஐதீகம். பட்டீஸ்வரரின் முந்தைய பெயர் நாரதேஸ்வரர் என்று அறியப்படுகிறது.

* நாரதருக்கு பிடித்த தலம் திருதணிகையாம். மனத்திற்கு அமைதி அளிக்கும் இந்தத் தலம் முன்னர் ‘நாரதப்பிரியம் என்று அழைக்கப்பட்டதாக பேரகராதி கூறுகிறது.

* சித்தூர் மாவட்டத்தில் ஆந்திர – தமிழக எல்லையில் உள்ளது சுருட்டபள்ளி என்ற கிராமம். இந்த ஆலயத்தில் சர்வமங்களாம்பிகா உடனுறை பள்ளிகொண்டேஸ்வரரை விநாயகர், முருகர், சூரியன், சந்திரன், இந்திரன் இவர்களுடன் நாரதரும் வழிபடுவதாக சிற்பங்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *