ரூ.97 லட்சம் நன்கொடை – பேராசிரியை தாராளம்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பேராசிரியை, தன் ஓய்வூதியத்தை, கல்வி மையங்களின் மேம்பாட்டுக்காக நன்கொடையாக வழங்கி, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதுவரை அவர், 97 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர், சித்திரலேகா மாலிக், 71. கல்லுாரியில், சமஸ்கிருத பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அவர், மாதந் தோறும், 50 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெற்று வருகிறார். கோல்கட்டாவில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வரும் சித்திரலேகா, தான் பெறும் ஓய்வூதியத்தில், உணவுச் செலவுக்கு போக, மற்ற அனைத்தையும் கல்வி மையங்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார். கடந்த, 2002லிருந்து இதுவரை, 97 லட்சம் ரூபாயை, அவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

நலிந்த கல்வி மையங்களுக்கு என் ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கி வருகிறேன். இதுதவிர, மாணவர்களின் ஆய்வு பணிக்கான செலவு தொகையையும், என் ஓய்வூதியத்தில் இருந்து வழங்கி வருகிறேன். நன்கொடையில் பெரும்பாலான தொகை, நான் படித்த ஜாதவ்பூர் பல்கலையின் மேம்பாட்டுக்காக கொடுத்துள்ளேன். நான் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது, எனக்கு வழிகாட்டிய பேராசிரியர் பிதுபூஷண் பட்டாச்சார்யாவின் நினைவாக, பல்கலையில் அரங்கம் மற்றும் ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கு நன்கொடை அளித்துள்ளேன்.

ஒவ்வொருவரும் எளிமையாக வாழ வேண்டும் என்பதைத் தான், நம் வேதங்கள் கூறுகின்றன. இன்று சாப்பிடுவதற்கான உணவு இருந்தால் மட்டும் போதும்; நாளை பற்றி கவலையில்லை. எனவே, என் ஓய்வூதியத்தை மாணவர்களின் நலனுக்காக செலவிடுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.