பாரத ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், சில நாட்களுக்கு முன்பாக, தனியார் துறை முதலீடுகள், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் உலக வளர்ச்சி குறைந்து வருவதால், ஹிந்து வளர்ச்சி விகிதத்திற்கு பாரதம் ‘ஆபத்தான நிலையில் உள்ளது’. கடந்த மாதம் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ) வெளியிட்ட தேசிய வருமானத்தின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, காலாண்டு வளர்ச்சியில் தொடர்ச்சியான மந்தநிலை கவலையளிக்கிறது என்று கூறியிருந்தார். ஹிந்து வளர்ச்சி விகிதம் என்ற சொல், 1950கள் முதல் 1980கள் வரையிலான குறைந்த பாரதப் பொருளாதார வளர்ச்சி விகிதங்களை விவரிக்கும் ஒரு சொல்லாடலாகும், இது அக்காலகட்டத்தில் பாரதத்தின் வளர்ச்சி மிகக் குறைவாக (சராசரியாக 3.5 சதவீதமாக) இருந்தது. பாரதத்தின் இந்த மெதுவான வளர்ச்சியை விவரிக்க 1978ல் ராஜ் கிருஷ்ணா என்ற பாரதப் பொருளாதார வல்லுனரால் இந்த வார்த்தை உருவாக்கப்பட்டது. இந்த சூழலில், எஸ்.பி.ஐ தற்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றில், சமீபத்திய ஜி.டி.பி வளர்ச்சியை சேமிப்பு மற்றும் முதலீடுகள் பற்றிய தரவுகளுடன் ஒப்பிட்டு, ரகுராம் ராஜனின் பாரதத்தில் ஹிந்து வளர்ச்சி விகிதத்திற்கு ஆபத்தானதாக உள்ளது என்ற வாதங்களை நிராகரித்துள்ளது. இது போன்ற அறிக்கைகள் ‘தவறான கருத்து, சார்பு நடவடிக்கை, மற்றும் முதிர்ச்சியற்ற கருத்து என்று தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் முதலீடு மற்றும் சேமிப்புத் தரவுகள் சுவாரஸ்யமான புள்ளிகளை வெளிப்படுத்துகின்றன என்று பாரத ஸ்டேட் வங்கியின் குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் எழுதியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு வாரியாக அரசின் மொத்த மூலதன உருவாக்கம், தனியார் துறை முதலீடுகள் அதிகரிப்பு, புதிய திறனை உருவாக்குவதற்கான அரசு நிதி அதிகரிப்பு, மூலதனச் செலவினங்களுக்கு முக்கியத்துவம், கூடுதல் மூலதன வெளியீட்டு விகிதம், பாரதப் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சி, மொத்த சேமிப்பு அதிகரிப்பு, குடும்ப நிதி சேமிப்புகள் குறைந்தாலும் பௌதீக சொத்துகளின் வளர்ச்சி அதிகரிப்பு உள்ளிட்ட ஆண்டுவாரியான புள்ளி விவரங்கள் ஆய்வறிக்கையில் தெளிவாக அளிக்கப்பட்டுள்ளன.