யுகயுகமாக பாரதம் ஒரே தேசம்” – மோகன் பாகவத்

இன்று புனிதமான சங்கப் பணி 90 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சென்ற ஆண்டு நான் குறிப்பிட்டது போல அமரர் பண்டித தீனதயாள் உபாத்யாய அவர்களின் நூற்றாண்டு தொடங்கி இந்த ஆண்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாம் பின்பற்றத்தக்க சேதி வழங்கிய பெரியோர்கள் பலரது வாழ்வை நினைவு கூர்வது அவசியம்.

இந்த ஆண்டு ஆச்சார்ய அபிநவ குப்தரின் ஆயிரமாவது ஆண்டு. சைவ சித்தாந்தத்தின் உன்னதமான அந்த ஆச்சாரியர் கடவுள் காட்சி பெற்றவர். இலக்கியம், நடனம், சங்கீதம், மொழி, த்வனி சாஸ்திரம் முதலிய பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அவர், ‘பிரத்யபிக்ஞா’ என்ற தத்துவ சாஸ்திரத்தையும் வழங்கியவர். ‘த்வனி’ என்ற விஷயம் குறித்து அவர் தத்துவ ரீதியான ஆய்வு செய்து பரம்பொருளை கண்டுணரும் நிலை வரை த்வனிக்கு ஆற்றல் உண்டு என்று எடுத்துரைத்தார். த்வனி என்பது தத்துவ அறிஞர்கள் மட்டும் அல்லாமல் நவீன கணினி அறிவியலாளர்களும் ஆழ்ந்து கற்று ஆய்வு செய்தற்குரிய விஷயமாகும். ஆனால் அபிநவ குப்தரின் மணிமகுடமான பங்களிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் தொன்மையான நமது பண்பாட்டை காஷ்மீர் மண்ணில் மறுபடியும் நிலைநாட்டியதுதான். அவர் சைவசித்தாந்தத்தை சார்ந்திருந்தாலும் மற்ற எல்லா தத்துவங்களையும் குறித்து மரியாதை உணர்வுடன் ஆய்வு செய்து அனைத்திலிருந்தும் ஞானம் கைவரப்பெற்றவர். அன்புடன் பக்திமயமான ஒருமைப்பாட்டு உணர்வை ஏற்றெடுக்க வேண்டும் என்ற சேதியை தன் வாழ்வின் வாயிலாக வழங்கிய அவர், காஷ்மீரில் உள்ள பர்கான் கிராமத்தையடுத்த வீரவாவில் பைரவர் குகையில் சிவனடி சேர்ந்தார்.

தென் பாரதத்தில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி ஆண்டும் இந்த ஆண்டு social3கொண்டாடப்படுகிறது. ‘ஸ்ரீபாஷ்யம்’ (பிரம்ம சூத்திரத்துக்கு உரை) என்ற ஞானப் பொக்கிஷத்தை வழங்கியவர் அவர். தெற்கிலிருந்து டெல்லிவரை பாதயாத்திரை செய்து, சுல்தான் தர்பாரிலிருந்து தனது பூஜைக்குரிய உற்சவ மூர்த்தியை மீட்டெடுத்தார்; அந்த விக்கிரகத்திடம் மனதை பறிகொடுத்த சுல்தானின் மகளையும் மேல்கோட்டை ஆலயத்தில் இடமளித்து கௌரவித்தார். ஜாதியால் பேதம் பார்க்கும் எண்ணத்தை அடியோடு வெறுத்தவர் அவர். சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பக்தி, ஞானம் இவற்றுக்கான வாயிலை திறந்துவிட்டவர். சமுதாய நல்லிணக்கத்தை நிலைநாட்டியவாறே தன் வாழ்வில் தர்மத்தை பரிபூரணமாகவும் பழுதில்லாமலும் கடைபிடித்தார். அதன் வாயிலாக நாடு முழுவதிலும் சகோதரத்துவத்தையும் கிளர்ந்தெழச் செய்தார்.

ஆட்சி புரிந்தபடியே ஆன்மீக வழிகாட்டியாக விளங்கி சுயமரியாதையை காப்பாற்றிக்கொண்டு போலித்தனத்தை நிர்மூலம் செய்த சீக்கியர்களின் 10வது குரு ஸ்ரீ குருகோவிந்தரின் 350வது ஜெயந்தி வருஷமும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. தேசத்துக்காகவும் தர்மத்துக்காகவும் தனது அனைத்தையும் சமர்ப்பணம் செய்து வாழ்நாள் முழுதும் போராட்டத்தில் முனைந்த அவரது ஒளிமயமான முன்னுதாரணத்தை சுவாமி விவேகானந்தர் கூட புகழ்பெற்ற தனது லாகூர் சொற்பொழிவில் மேற்கோள் காட்டி ஸ்ரீ குருகோவிந்தரை பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

ஞானதிருஷ்டி வாய்ந்தவரான ஸ்ரீ குலாப் ராவ் மகாராஜ் அவர்களின் நூற்றாண்டும் இதுவே. மகான் ஞானேஸ்வரரின் புதல்வியாகத் தன்னை கருதிக்கொண்டவர் குலாப்ராவ். அரும்பாடுபட்டு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஆன்மிக அறிவியல் நூல்களை ஆராய்ச்சிக் கண்ணுடன் வாசித்தவர் அவர். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்திய இழிநிலையில் திட்டவட்டமான வாதங்களுடன் நமது சாஸ்திரங்களை மேற்குலகின் அதி நவீன அறிவியல் ஆதாரங்களுடன் விவரித்து பாரத மக்கள் மனதில் சுதர்மம், சுதேசம், நமது சொந்தப் பண்பாடு இவற்றின் மேன்மையை நிலைநாட்டி பெருமிதத்தையும் தன்னம்பிக்கையையும் விதைத்தார். வருங்காலத்தில் விஞ்ஞான முன்னேற்றத்துக்கு ஆனாலும் சரி, மனித நேயம் தழைப்பதற்கானாலும் சரி, உலகம் முழுவதிலும் எல்லா வழிபாட்டு முறைகளுக்குமான ஆதாரம் நமது மேன்மை பொருந்திய ஆன்மீக பண்பாடு ஒன்றே என்பதுதான் அவர் இயற்றிய ஏராளமான நூல்களின் தெள்ளத்தெளிவான சேதி.

கடந்த ஆண்டு நாடு நெடுக நிலவிய சூழ்நிலை, நிகழ்ச்சிகள் இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது இந்த நான்கு மகான்களின் சேதிகளை நாம் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பது விளங்கும்.

பல அம்சங்களில் எவ்வளவோ எதிர்பார்ப்புகள் உள்ளன என்றாலும் கூட, கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசத்தைப் பீடித்திருந்த நிராசையை நீக்கி நம்பிக்கை ஊட்டக்கூடிய விதத்தில் வளர்ச்சிப் பாதையில் தேசத்தை முன்னேற்றக்கூடிய கொள்கைகள் காரணமாக மொத்தத்தில் தேசம் முன்னேறும் காட்சி தென்படுகிறது. நாம் ஜனநாயக முறையை ஏற்றெடுத்துள்ளோம். ஆட்சி அதிகாரம் மறுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளாக உள்ள அரசியல் கட்சிகள் ஆட்சி நிர்வாகத்தின் குறைபாடுகளை மட்டும் அடிக்கோடிட்டு காட்டி தங்கள் கட்சிகளின் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளும் அரசியலில் இறங்கியுள்ளன. இறங்கத்தான் செய்யும் என்பதை மனதில் கொண்டு தேச முன்னேற்றப் பாதைக்கான கொள்கைகளை விழிப்புடன் இருந்து ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயகத்தில் இதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த ஆண்டு கவலை தரும் சில மனப்பான்மைகள் ஆட்டம்போட்டது தெளிவாகத் தென்பட்டது. பாரதம், வல்லமையுடன் ஒருமைப்பாட்டுடன் தன்னிறைவுடன் விளங்கி நல்ல தலைமையின் கீழ் ஓங்குவதை கண்கொண்டு பார்க்க சகிக்காத தீவிரவாத போக்குள்ள வெறித்தனமான பிளவுபடுத்தும் சுயநல சக்திகள் உலகில் உள்ளன; அவை பாரதத்திலும் வலைவீசியுள்ளன. இது நமது தேசத்தின் நிலைமையையும் உலக நடப்பையும் ஓரளவு புரிந்துகொண்டவர்களுக்கு தெரிந்த விஷயம். பாரதத்தின் சமுதாய வாழ்க்கையில் இன்றளவு வரை அழியாமல் இருக்கிற ஏற்றத்தாழ்வு, பேத உணர்வு, குறுகிய சுயநல மனப்பான்மை காரணமாக நடக்கிற சம்பவங்களை வைத்து சிலரைத் தூண்டிவிட்டும், நடக்காதவற்றை நடந்ததாக இட்டுக்கட்டியும் பொய்பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதனால் உலக அரங்கில் பாரத மக்கள், பாரத அரசு, பாரதத்தில் உள்ள தீமைகளுக்கு அங்குசம் போடக்கூடிய சங்கம் உள்ளிட்ட நல்லோர் சக்தி ஆகியவற்றை சர்ச்சையில் இழுத்து பெயரைக் கெடுக்கவும் மக்கள் மனதில் இவர்கள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தவும் முயற்சி நடைபெறுவதைக் காணமுடிகிறது. இவற்றையெல்லாம் செய்கிற சக்திகள் தங்களுக்குள் முட்டிமோதிக்கொள்ளும் வரலாறு கொண்டவை என்றாலும் தங்களின் தனித்தனியான அல்லது ஒட்டுமொத்தமான பேராசையை நிறைவேற்றிக்கொள்ள கைகோர்த்துக்கொண்டு செயல்படத்தான் செய்யும். அவை விரிக்கும் குழப்ப வலை, கபட நாடகம் இவற்றால் சமுதாயத்தில் வெறுப்பும் பிளவும் தோன்றக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடாமல் இருக்க முயற்சி அவசியம்.

சங்க ஸ்வயம்சேவகர்கள் இந்த திசையில் தாங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வேகம் ஊட்டி வருகிறார்கள். ஊரின் நிலைமை எப்படித்தான் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஆய்வு நடக்கிறது. சமுதாய சமத்துவம் என்பதற்கு இசைவாக ஷாகாக்களின் மூலம் அந்தந்த ஊர்களில் மக்களின் மனதை தயார் படுத்தும் பணி துவங்கியுள்ளது. உதாரணமாக, சங்க கணக்கில் மத்திய பாரதம் எனப்படும் பகுதியில் 9,000 ஊர்களில் மிக விரிவாக ஆய்வு நடைபெற்றது. அதில் இன்றுவரை சுமார் 40 சதவீத ஊர்களில் கோயில்களாலும் 30 ஊர்களில் குடிதண்ணீராலும் 35 சதவீத ஊர்களில் மயானத்தாலும் ஏற்றத்தாழ்வு நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதை தீர்க்கும் முயற்சி தொடங்கியுள்ளது. எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள வசதிகளை கிடைக்கச் செய்ய அவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொகைகள் சரிவர நேர்மையாக வழங்கப்பட ஆட்சிக்கும் நிர்வாகத்துக்கும் சிரத்தை அவசியம். இதற்காகவும் ஸ்வயம்சேவகர்கள் உதவி செய்யும் வகையில் பணி தொடங்கியிருக்கிறார்கள். சமுதாய சமத்துவம் காணும் திசையில் ஸ்வயம்சேவகர்கள் தங்களுக்குள்ள சக்தி, தகவல், செல்வாக்கு இவற்றைப் பயன்படுத்தி பணிபுரிந்துவருகிறார்கள். ஆனால் சமுதாய நலனில் அக்கறையுள்ள எல்லோரும், எல்லா அமைப்புகளும் மேலும் தீவிரமாக இதுகுறித்து முயற்சி செய்வது அவசியம். சிறுசிறு சம்பவங்களால் ஆவேசப்பட்டு அல்லது தனது மேன்மை குறித்த அகங்காரத்தால் நிரபராதிகளான சொந்த சகோதரர்களை அவமதிப்பதும் தாக்குவதும் 21ம் நூற்றாண்டு பாரத சமுதாயத்திற்கு வெட்கக்கேடான விஷயம். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சக்திகள் இதை பயன்படுத்தி பாரதத்திற்கு கெட்ட பெயர் தேடித்தரும் வேலைகளும் நடத்தி வருகிறார்கள்; சமுதாயத்தில் நடைபெற்று வரும் நல்ல நல்ல பணிகளின் வேகத்தை தடுப்பதற்கும் முயற்சி செய்கிறார்கள்.

நமது தேசத்தின் விலங்கினங்களில் மிகப்பெரிய பகுதியான நாட்டு மாடு பாதுகாக்கப்பட வேண்டும், வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இது அரசியல் சாசனம் வழிகாட்டு கொள்கை கூறும் விஷயம். அது மட்டுமல்ல, பாரத சமுதாயம் பக்தியோடு அணுகும் பாரம்பரிய கடமை. தேசத்தில் சாதுக்கள், நல்லோர்கள் அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு இந்த பணியில் வாழ்நாள் முழுவதும் ஒரு தவம் போல முனைந்திருக்கிறார்கள். நாட்டுப் பசு எவ்வளவு பயனுள்ளது, எவ்வளவு சிறந்தது என்பதை நவீன விஞ்ஞான சான்று நிலைநாட்டியுள்ளது. பல மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டம், பசுக்களை கொடுமைப்படுத்துவதை தடை செய்யும் சட்டம் உண்டு. அது சரிவர செயல்படுத்தப்பட வேண்டும். இதற்காக அவ்வப்போது கோமாதா பக்தர்கள் இயக்கம் பசுவதை சம்பவங்களை வைத்து அல்லது கற்பனையான சம்பவங்களை வைத்து வதந்தி பரப்பி, தனது தனிப்பட்ட அரசியல் சுயநலத்தை பூர்த்தி செய்துகொள்வது, சமுதாயத்தில் காரணமே இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவது, கோசேவை என்ற பவித்திரமான செயலை தூற்றுவது அல்லது கேலி செய்வது இவற்றிலேயே குறியாக இருக்கும் சமூக விரோத சக்திகளுடன் கோமாதா பக்தர்களை ஒப்பிடவே கூடாது. கோமாதா பக்தர்களின் தவம் நடக்கும், அதிகரிக்கும். நாம் செய்யும் பணி ஒவ்வொன்றும் சட்டம், அமைதி இவற்றின் வரம்புக்கு உட்பட்டே நடைபெறவேண்டும் என்கிற ஜனநாயகத்திற்குரிய கட்டுப்பாட்டை நல்லோர் அனைவரும், எவ்வளவுதான் ஆத்திரமூட்டப்பட்டாலும், கடைபிடித்து வருகிறார்கள். பசுவதை தடை சட்டங்கள் கண்டிப்புடன் அமல் செய்யப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் கண்டிப்பு தேவை. ஆட்சியாளர்கள் நல்லோர், தீயோர் இருவரையும் ஒரே தட்டில் வைத்து எடைபோடுவது கூடாது. வெறுப்பை நிர்மூலமாக்கும் வகையில் அவர்களின் எண்ணமும் செயலும் சொல்லும் அமைய வேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. ஊடகத்தில் ஒரு பகுதியினரும் தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தில் இப்படிப்பட்ட சம்பவங்களை செய்தியாக்கும்போது நிஜ நிலவரத்தை விட அதிக ஆவேசம் தூண்டும் வகையில் வர்ணிக்கிறார்கள். இதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது. சமுதாயத்தில் சுதந்திரமும் சமத்துவமும் நிலவ வேண்டும், திடப்பட வேண்டும் என்றால் சமுதாயத்தில் சகோதரத்துவம் பரவலாகவும் பலமாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம். அப்போதுதான் நம் முன் நிற்கும் சவால்களை சந்திக்க சமுதாயத்திற்கு ஆற்றல் ஏற்படும். ஆச்சார்ய அபிநவகுப்தர், ஸ்ரீ ராமானுஜர் போன்ற பெரியோர்கள் வளர்த்த இந்த நல்லிணக்கப் பரம்பரை இன்னும் தழைத்தோங்கச் செய்வது அவசியம். அதுமட்டுமல்ல, தேசப்பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை முதலியவைகளுக்கு வேறு ஆபத்து சூழ்ந்திருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதிலும் இன்றைய நிலைமை, இந்த கண்ணோட்டத்தில் நமக்கு மேலும் கவலை அளிக்கிறது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட வெற்றிகரமான ராஜ தந்திர நடவடிக்கைகள், அரசும் நாடாளுமன்றமும் தொடர்ந்து காட்டிய உறுதி இவை வரவேற்கத்தக்கவை. ஆனால் அந்த சரியான கொள்கை உறுதியாக செயல்படுத்தப்படுவது அவசியம்.

ஜம்மு, லடாக், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பெரும்பகுதியில் இன்றும்கூட குறைவான கலவரங்கள், அதிகமான கட்டுப்பாடு நிலவுகிறது. அந்தப் பகுதிகளில் தேசிய மனப்பான்மையும் சக்திகளும் வலுப்பெற வேண்டும். திடமாக நிலைக்க வேண்டும். இது விரைவாக நடைபெற வேண்டும். கலவரம் பாதித்த பகுதிகளில் கலவரத்தைத் தூண்டும் உள்ளூர் சக்திகளையும் வெளிநாட்டு சக்திகளையும் கடுமையாகவும் விரைவாகவும் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசும், மத்திய அரசும் தங்கள் தங்கள் நிர்வாகங்களுடன் ஒருமனப்பட்டு ஒற்றைக்குறிக்கோள் கொண்டவையாக உறுதியாக முனைவது அவசியம். மீர்பூர், முஜபராபாத், கில்கிட், பாகிஸ்தான் ஆக்ரமித்த காஷ்மீர் உள்ளிட்ட முழு காஷ்மீரும் பாரதத்தின் பிரிக்கப்படமுடியாத பகுதிகள் என்பது எப்போதும் உறுதியாக கைக்கொள்ளவேண்டிய அடிப்படை. அந்தப்பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற சகோதரர்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகளான ஹிந்துக்களும் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் நலவாழ்வுக்கான ஸ்திரத்தன்மையுடனும் முன்பு போல தங்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பி வசிக்கச் செய்யும் பணி விரைவாக முன்னேற்றம் காணச் செய்யவேண்டும். தேசப்பிரிவினையின் போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அந்நாளைய மாநில அரசு, பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட நிலப்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்து வந்த ஹிந்துக்களுக்கு மாநிலத்திலேயே வசிக்க அனுமதி அளித்தது. அந்த மக்களுக்கு மாநிலத்தில் பிரஜா உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இன்றுவரை ஜம்முவிடமும் லடாக்கிடமும் பாரபாட்சம் காட்டும் மாநில அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை விரைவில் முடிவுக்கு வரவேண்டும். ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு தேசிய உணர்வுடன் சுத்தமான அர்ப்பணிப்புள்ள சமத்துவ உணர்வுள்ள, வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்டும். அப்போதுதான் மாநில மக்களுக்கு வெற்றியும் நம்பிக்கையும் ஒருசேர வாய்க்கும். பள்ளத்தாக்கு மக்களை தேசத்துடன் ஒருங்கிணைக்கும் பணி முன்னேறும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் கலவரங்களுக்கு, எல்லைக்கு அப்பால் இருந்து தூண்டிவிடவும் தூபம் போடவும் எப்போதும் நடந்த முயற்சிதான் முக்கிய காரணம் என்பது இப்போது முழு உலகத்திற்கும் தெரிந்துவிட்டது. பல்வேறு நாடுகளில் மையங்களை நடத்தி எல்லைப்புற ஊர்களில் பிரிவினைவாதம், வன்முறை, பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் போன்ற சமுதாயத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை நடத்தும் பல்வேறு குழுக்கள் இந்த சக்திகளோடு கைகோர்த்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலவரத்தில் நமது ராணுவத்தின் போர் ஆயத்த நிலை, தகவல் கட்டமைப்பு, ராணுவத்தினர், பாதுகாப்புப் படையினர் இவர்களுக்கிடையிலேயான நல்லிணக்கம், ஒத்துழைப்பு இவற்றில் கடுகளவு குறைந்தாலும், ஆபத்து என்பதை உரி ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதல் மீண்டும் அடிக்கோடிட்டு காட்டிவிட்டது. நமது அரசின் தலைமை நமது ராணுவ ஜவன்களின் மூலம் உறுதியாகவும் திறமையாகவும் இந்த தாக்குதலுக்கான பதிலடி கொடுத்ததற்காக அரசுக்கும் ராணுவத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால் நமது இந்த ராஜதந்திர சாதுர்யம் ராணுவ சாமர்த்தியமும் நமது கொள்கையில் பதிந்துபோய்விடவேண்டும் என்பது அவசியம். கடல் எல்லையிலும் நில எல்லையிலும் உள்ள பகுதிகளை இந்த கண்ணோட்டத்துடன் தீவிரமாக கண்காணிப்பது அவசியம். விரும்பத்தகாத நடவடிக்கைகள், அவற்றை பின்னிருந்து நடத்தும் தீய சக்திகள் இவற்றை வேரோடு பறித்தெறிய வேண்டியது அவசியம். இதில் ஆட்சியும், நிர்வாகமும் மக்களும் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இதில் மாநிலங்களின் முழு ஒத்துழைப்பும் அவசியம். நாம் அரசியல் சாசனத்தில் கூட்டாட்சி முறையை ஏற்றெடுத்துள்ளோம். அதற்கு உரிய மதிப்பளித்து நேர்மையுடன் கட்டிக்காப்பதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முனைப்பாக இருக்க வேண்டும். ஏற்பாட்டு முறை என்னவாக இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி, முழு பாரதமும் யுகயுகமாக மக்களிடையே உள்ள எல்லா வேற்றுமைகளின் நடுவே ஒரே தேசம், ஒரே ராஷ்ட்ரம், ஒரே மக்கள் என்பதாக இருந்தது, இருக்கின்றது, இருக்கும். இதை அனைவரும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமது சிந்தனையும், சொல்லும் செயலும் அந்த ஒருமைப்பாட்டுக்கு ஊட்டம் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை பலவீனப்படுத்துவதாக இருக்கக்கூடாது. சமுதாய வாழ்க்கையில் பல்வேறு பிரிவுகளுக்கு தலைமை வகித்துவரும் இந்த கடைமை உணர்வைக் காட்டும் விதத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். அத்துடன் கூடவே சமுதாயத்திற்கும் கடமை உணர்வுடன் கூடிய செயல்பாட்டை கற்பிப்பதற்கான ஏற்பாடு அவசியம்.

சமுதாயத்துடன் நல்லிணக்கம் கொண்ட ஆற்றல் மிக்க, கடமை உணர்வுள்ள மனிதர்களை உருவாக்கும் கல்வி குறித்து நடைபெற்று வரும் விவாதமும் இந்த பின்னணியில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி சாமானியருக்கும் சுலபமாக, மலிவாக கிடைக்கவேண்டும், படித்து முடித்தவர்கள் வேலைக்குரிய திறன் உள்ளவர்களாக சொந்தக்காலில் நிற்பவர்களாக சுய மரியாதை உள்ளவர்களாக உருவாகி வாழ்க்கை நடத்துவதில் அவர்கள் மனதில் தன்னம்பிக்கை ஏற்பட வேண்டும்  என்ற ஒரு விஷயத்தில் அனைவரும் கருத்து ஒன்றுபட்டு நிற்பது தென்படுகிறது. விஷயம் தெரிந்தவராக உருவாவதுடன் பொறுப்புணர்வு உள்ளவராக நல்ல பிரஜையாக mohan-bahawatபண்பாளராக நல்ல மனிதராகவும் மாணவர்கள் விளங்க செய்யும் கல்விமுறை அமைய வேண்டும். இந்த விஷயங்களில் வழிகாட்டும் விதத்தில் பாடத்திட்டம் அமைய வேண்டும். இவ்வாறு கல்வியை தானமாக வழங்கும் இந்த விரதத்தை கடைபிடிப்பதற்காக தகுதியும் ஆற்றலும் உள்ளவர்களாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அவர்களின் சேம நலன் குறித்து கருத்து செலுத்தப்பட வேண்டும். கல்வித்துறையில் அரசு, சமுதாயம் இரண்டின் பங்களிப்பும் இருக்க வேண்டும். இரண்டும் சேர்ந்து கல்வி வணிகமயமாகாமல் தடுக்க வேண்டும். புதிய அரசு வந்தபிறகு இதுகுறித்து ஒரு குழு அமைத்து முயற்சி செய்யப்பட்டது. அதன் அறிக்கையும் வந்துள்ளது.  அந்த அறிக்கை குறித்த புகழாரங்கள் கல்வி முறையை இந்த திசையில் நல்லவிதமாக வடிவமைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்  என்று கல்வித்துறையில் மேற்கண்ட திசையில் பணிபுரியும் சகோதரர்களும் கல்வியாளர்களும் கருதுகிறார்கள். கல்விமுறையில் மாற்றம் ஏற்படாவிட்டால் உருவான கருத்தொற்றுமை எதிர்பார்ப்பு அளவில் நின்றுபோகும்.

பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் முதலியவைதான் புதிய தலைமுறையினர் கல்வி பெறுவதற்கான களங்கள். இவற்றுடன் குடும்பமும் திருவிழாக்களும் என்று தொடங்கி சமுதாயத்தின் எல்லா செயல்பாடுகளும் நிகழ்ச்சிகளும் உருவாக்குகிற சூழ்நிலையும் கல்விகுரியவையே. நமது குடும்பத்தில் புதிய தலைமுறைக்கும் பழைய தலைமுறைக்கும் இடையே கனிவான பரிவான கொடுக்கல் வாங்கல் நிகழ்கிறதா? அந்தக் கொடுக்கல் வாங்கலினால் மெல்ல மெல்ல சமுதாயத்திடம் கடமை உணர்வு, தனிப்பட்ட ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் ஆகிய நற்பண்புகள், பண்புகளில் ஈடுபாடு, உழைப்பில் நாட்டம், கனிவான பரிவான உறவு, தீயவற்றின் ஈர்ப்பிலிருந்து விடுபடும் இயல்பு இவையெல்லாம் உருவாகின்றனவா? இவ்வாறு உருவாகும் விதத்தில் வீட்டில் பெரியவர்கள் உதாரணங்களாக நடந்துகொள்கிறார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை நமது குடும்பங்களின் சார்பில் நாம்தான் வழங்க வேண்டும். வீட்டிலிருந்து பொருத்தமான இயல்பு, லட்சியம், தன்மை இவற்றை பெற முடிந்தால்தான் சிறுவன் படிப்பில் உழைப்பு செலுத்தவும் படிப்பை பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவும் தேவையான விவேகம் பெறுகிறான்; இது நம் அனைவரும் பெறுகிற அனுபவம். குடும்பத்தில் இந்த கொடுக்கல் வாங்கல் தொடங்கட்டும், தொடர்ந்து நடைபெறட்டும். இதற்கான முயற்சியை பல சாதுக்களும் சங்கங்களும் செய்து வருகிறார்கள். சங்க ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் குடும்ப பிரபோதன் என்ற பணி நடைபெற்று வருகிறது. அது வளர்முகம் கண்டு வருகிறது. யாராவது வந்து இந்த பணியைத் தொடங்கி வைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திராமல், நாமே நமது வீட்டில் இதை தொடங்க முடியும். சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். பண்புப் பதிவு என்றென்றும் தேவை. இதை மனதில் கொண்டுதான் சமுதாயத்தில் நடைபெறுகிற எத்தனையோ செயல்பாடுகள், திருவிழாக்கள், இயக்கங்கள் முதலியவை தொடங்கின. அதன் நோக்கத்தை மறந்துவிட்டால் உற்சவங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் அதன் வடிவம் மாறி அர்த்தமற்ற சடங்காகிப் போகும். நம் குறிக்கோளை மனதில் கொண்டு இந்த திருவிழாக்களை சமுதாய அளவில் நடத்தினால் இன்றும் அவை சமுதாயத்திற்கு காலத்திற்கேற்ற விழிப்புணர்வூட்டும் நல்ல கருவியாகிட முடியும். மகாராஷ்டிரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழுக்களின் மூலம் பல நல்ல பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. புத்தாண்டு கொண்டாடுவதில் பல பொருத்தமான உத்திகள் உதயமாகியுள்ளன. இத்தகைய திருத்தமான செயல்பாடுகளுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் சமுதாயத்திலிருந்து கிடைப்பது அவசியம். சமுதாயம் அவற்றை பின்பற்றுவது தேவை. அரசு சார்பிலும் அரசு சார்பில்லாமலும் செய்யப்பட்ட முன் முயற்சியால் சில புதிய முயற்சிகள் நடைபெறுகின்றன. அவற்றிலும் சமுதாயம் காட்டும் உற்சாகம் நீடிக்க வேண்டும். அதிகரிக்க வேண்டும் என்பதில் எப்போதும் சமூக ஆர்வலர்களான சகோதரர்களுக்கும் ஸ்வயம்சேவகர்களுக்கும் கவனம் இருக்க வேண்டும். மரம் நடுதல், தூய்மை பாரத இயக்கம், யோகா தினம் போன்ற செயல்பாடுகள் சமுதாயத்தில் ஒரு பொதுமை உணர்வு, சுயசார்பு, கருணை முதலிய எத்தனையோ பண்புகளை உருவாக்குவதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதை மனதில் கொண்டு சங்க ஸ்வயம்சேவகர்கள் இந்த செயல்பாடுகளிலும், திருவிழாக்களிலும் சமுதாயத்துடன் இணைந்து அவற்றை திருத்தமான விதத்தில் அழகாக பலன் தரும் விதத்தில் ஆக்கிட சமுதாயத்துடன் ஒத்துழைத்து வருகிறார்கள். இனியும் ஒத்துழைப்பார்கள். சமுதாயம் இயல்பாகவே ஒருங்கிணைந்து இருந்தால்தான் தேசத்திலும் உலகத்திலும் நல்ல அமைப்பு, ஒருமைப்பாடு, சாந்தி, முன்னேற்றம் இவையெல்லாம் சாத்தியமாகும். இந்த சத்தியத்தின் அடிப்படையில்தான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 90 ஆண்டுகளாக இடையறாமல் பணிபுரிந்து வருகிறது. முன்னேறி வருகிறது.hedkevar

எத்தனையோ வேற்றுமைகளை ஒருங்கிணைத்துக்கொள்வது நமது பாரம்பரியம். படைப்பு முழுவதிலும் விதவிதமான வண்ணங்களில் தென்படும் காட்சிகளுக்குப் பின்னே அந்த எல்லா வேற்றுமைகளிலும் ஊடுபாவாக விளங்குகிற நிரந்தரமான ஒருமைப்பாட்டுணர்வை கண்கூடாக தரிசிக்க நமது மேலோர்களால் முடிந்திருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்த விஷயத்தை சமுதாயத்திற்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஊட்ட அவர்கள் செய்த அசாத்தியமான தவத்தினால் நமது தேசம் ஓங்கி உயர்ந்தது. இன்றளவு வரை தேசம் இதே விழிப்புணர்வுடன் வாழ்க்கைப் பயணத்தை நடத்திவருகிறது. படைப்பு உள்ளளவும் இந்த விழிப்புணர்வின் அவசியம் நின்று நிலைக்கும். அதை நிறைவேற்றும் இந்த ராஷ்ட்ரமும் நின்று நிலைக்கும். எனவேதான் நமது ராஷ்ட்ரத்தை அமரத்துவம் வாய்ந்த ராஷ்ட்ரம் என்கிறோம். பொருள்முதல் வாதம், போராட்டம் என்று தானே உருவாக்கிக்கொண்ட சங்கிலிகளில் இறுகிக்கிடக்கும் உலகிற்கு மீண்டும் அந்த விழிப்புணர்வு ஏற்பட்டாகவேண்டும். நமது பாதை பயன்தரும் என்பதை நிரூபிப்பதற்கான வேளை இது. நிரூபிக்கும் கடமையும் நமக்கு உண்டு. ஒருமைப்பாடு எனும் அஸ்திவாரத்தில் உறுதியாக கட்டமைக்கப்பட்டு, உதயமான நமது சனாதன தர்மத்தையும் பண்பாட்டையும் இன்றைய காலத்திற்கு ஏற்ற விதத்தில் எடுத்துச் சொல்லி விளங்க வைத்து தேசம், காலம், சூழ்நிலை இவற்றுக்கு பொருத்தமான விதத்தில் அதற்கு ஒரு புதிய அவதாரம் கொடுத்து ஒருங்கிணைந்த, வலிமை வாய்ந்த, சமத்துவம் உள்ள, சுரண்டலற்ற, அனைத்து விதங்களிலும் நிறைவு பெற்ற மேன்மைகள் பொருந்திய, தேசிய வாழ்வை நிலைநாட்டி உலக அரங்கில் ஒரு முன்னுதாரணத்தை நாம் ஸ்தாபிக்க வேண்டும். பல நூற்றாண்டுகள் அன்னியர்களிடம் அடிமைப்பட்டு நாம் யார் என்பதை மறந்ததால் ஏற்பட்ட தீமைகளிலிருந்து முழுமையாக விடுபட்டு நமது சிந்தனைச் செல்வத்தின் அடிப்படையில் நாம் நமது தேசத்தின் கொள்கைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அதன் பொருட்டு நமது அந்த சனாதனமான பண்புகள், லட்சியங்கள், பண்பாடு இவற்றின் பெருமிதங்களை சிரத்தையுடன் இதயத்தில் பதியச்செய்துகொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் காலடி எடுத்துவைப்பதால் உலகில் தேசம் முன்னேறி வருகிறது, பல்லாயிரம் ஆண்டுகளாக உலகிற்கு தீமை செய்துவரும் பிரச்சினைகளுக்கெல்லாம் திட்டவட்டமான தீர்வு கண்டு வருகிறது – என்ற இந்த காட்சியை நாம் நமது வாழ்க்கையாலும் செயல் ஊக்கத்தாலும் நிலைநாட்ட வேண்டும். குலாப்ராவ் மகராஜ் இயற்றிய ஏராளமான நூல்களிலும் அவரது கடினமான தவத்திலும் சாரமாக உள்ள சேதி இதுதான். இந்த திசையில் அரசு திடமாக அடியெடுத்து வைக்க வேண்டும். நிர்வாகம் அரசின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு செயலாற்றலுடன் செயல்படுத்த வேண்டும். தேசத்தின் கடைக்கோடி மனிதன் வரை அனைவருக்கும் சுகமான, அழகிய, பாதுகாப்பான, மேம்பட்ட வாழ்க்கை கிடைப்பதில் அரசும் நிர்வாகமும் எப்போதும் உன்னிப்பாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சமுதாயமும் ஒருங்கிணைந்ததாக நல்லிணக்கம் வாய்ந்ததாக விழிப்புடன் விளங்கி இந்த இரண்டிற்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்; அவசியம் நேரும்போது கட்டுப்படுத்தவும் வேண்டும். இது தேசிய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாகும். இந்த மூன்றும் ஒரே திசையில் கட்டுக்கோப்பாக பரஸ்பர பரிவுணர்வுடன் இசைந்து முன்னேறினால்தான் அசுர சக்திகளின் வஞ்சகமான வியூகங்களின் குழப்ப வலைகளைக் கிழித்து பிரச்சினைகளையும் எதிர்ப்புகளையும் தகர்த்து இறுதி வெற்றி எய்த நமக்கு வல்லமை கிடைக்கும்.

பணி கடினமானதாகத் தோன்றலாம். ஆனால் அதுதான் இன்று நமது இன்றியமையாத கடமை. அசாத்தியம் என்று தோன்றக்கூடிய பணியை திட உறுதியுடன், பராக்கிரமம் கொண்டு அனைத்தையும் சமர்ப்பித்து பிரதிபலன் எதிர்பாரமல் சுயநலமில்லாத உள்ளத்துடன் என்றென்றும் வெற்றியை நோக்கி வீறு நடைபோடும் குருகோவிந்தரின் ஒளிமயமான வாழ்க்கை நமக்கு பாரம்பரிய சொத்தாக வாய்த்திருக்கிறது. சிரத்தையுடன் முழு சக்தியையும் செலுத்தி அந்த லட்சியப்பாதையில் துணிவுடன் நடைபோடுவோம்.

இத்தகைய தெய்வீக பண்புகள் நிறைந்ததாக சமுதாயம் ஆகிடவேண்டும் என்பதற்காக தனது முன்னுதாரணத்தால் அவற்றை வாழ்ந்துகாட்டி சூழ்நிலையை உருவாக்கும் பணி ஒன்றையே ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் செய்து வருகிறது. சங்கம் சுயநலமில்லாமல் நடிப்பற்ற பரிவின் மூலம் சமுதாயத்தில் ஒவ்வொரு தனிநபரையும் கூட்டி இணைத்து வருகிறது; நமது இந்த பவித்திரமான தொன்மையான ஹிந்து ராஷ்ட்ரத்தை, மகோன்னத நிலைக்கு உலகத்தை உயர்த்தும் நோக்கத்தோடு பொருத்துகிறது; பணிபுரிய தகுதி பெரும் வகையில் உடலையும் மனதையும் அறிவையும் வளர்த்திட சகஜமான, எளிமையான ஷாகா என்ற கருவியை கொண்டுள்ளது; அப்படி உருவாகும் சாதகர்களை தேவைக்கு ஏற்ப, அவர்களின் ஆற்றலுக்கு ஏற்ப, சமுதாய வாழ்க்கையின் வெவ்வேறு பிரிவுகளுக்கு அனுப்பி அவசியமான பணியை தொண்டுள்ளத்துடன் செய்துவர ஊக்கம் அளிக்கிறது. இதுதான் சங்கத்தின் செயல்முறை. சமுதாயத்தின் இந்த மாற்றத்தை விரைவாகguruji ஏற்படுத்துவதற்காக நடைபெறுகிற சமுதாய நல்லிணக்கம், பசு பாதுகாப்பு, குடும்ப பிரபோதன் முதலிய செயல்பாடுகளை பற்றி சுருக்கமாக இந்த சொற்பொழிவில் கோடிகாட்டியுள்ளேன். ஆனால் இதேபோல சமுதாயம் முழுவதுமே செயல்துடிப்புடன் விளங்கவேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருந்த தேவர்கள் (அதாவது அந்த நாளின் நல்லோர் சக்தி) அவரவர் சக்தியை ஒருங்கிணைத்து பரஸ்பரம் நிறைவு செய்து 10வது நாள் மகிஷாசுர வடிவத்தில் வந்த அரக்க சக்தியை துடைத்தழித்து மனித குலத்தின் இன்னலை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். அந்த நாள்தான் விஜயதசமி. இது வெற்றித் திருநாள். எனவேதான் இந்த தேசிய திருப்பணியில் ராஷ்ட்ரீய ஸ்யவம்சேவக சங்கம் உங்களது நட்பையும் ஊக்குவிப்பையும் மட்டுமல்லாமல் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் மேலும் மேலும்  எதிர்நோக்குகிறது. அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *