தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பரில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரும்பாலானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17,18 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு பின் பெய்த அதி கன மழையால், தென் மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்கவும், 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல் கட்டமாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. கர்நாடகத்தில் வறட்சி நிவாரணம் கோரி காங்., போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் ரூ.3454 கோடியை மத்திய அரசு விடுவித்தது.