மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 11

“விஸ்வேஸ்வரனே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட சுனையில் முகேர் என சப்தம் எழுப்பிக் குதித்து, தண்ணீரில் நுழைந்து நுழைந்து, குடைந்து குடைந்து நீந்தியபடியே உன் திருநாமத்தைப் பாடினோம்..உன் செங்கமலப் பொற்பாதங்களை எண்ணிப் பாடினோம். இந்தப் பாவை நோன்பை நாங்கள் வழிவழியாக நிறைவேற்றி வருவதை நீ அறிவாய்.
சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் நீறு பூசிய தலைவனே! செல்வத்தின் அதிபதியே! மைதீட்டிய அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் உன்னால் பயன் அடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது. கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியைப் பயன்படுத்தி நீராடும் போதும், உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும் நமசிவாய என்ற ஐந்தெழுத்துத் திருநாமம் சொல்லிப் பிறப்பற்றும் நிலையை யாம் அடைய வேண்டும். இந்தப் பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க நீ எங்களுக்கு அருள்செய்க.,”என எம்பிரானை வேண்டுகின்றனர்.