ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய குடும்பத்தில் பிறந்த போதும், தனது குடும்பத்தை விட, சமுதாயப் பணியே முக்கியம் என வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு, மருத்துவராகி பிரச்சாரக்கான ஆவுடையப்பன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
முருகேசன் – கிருஷ்ணம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டையில் பிறந்தார், ஆவுடையப்பன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள்.
அவரது தந்தை மாநில அரசில் பணிபுரிந்ததால், திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல
ஊர்களுக்கு, பணி மாறுதல் ஏற்பட்டது. அந்தந்த ஊர்களில் பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை படித்தார். சேரன்மகாதேவியில் உள்ள பள்ளிக்கூடத்தில்
11 மற்றும் 12ம் வகுப்பில் படித்து தேர்ச்சி பெற்றார்.
அதன் பிறகு, விலங்கியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை (BSC Zoology), திருநெல்வேலி பேட்டையில் அமைந்துள்ள எம்.டி.டி (MDT) இந்துக் கல்லூரியில் படித்தார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று,
எம்.பி.பி.எஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றார். அதனுடன் அல்ட்ரா சவுண்ட் (Ultra Sound) படிப்பில், டிப்ளமோ படித்தும் தேர்ச்சிப் பெற்றார்.
படிப்பு முடித்த அடுத்த நாளே சங்கப் பிரச்சாரக்
மருத்துவக் கல்லூரியில் பயின்ற போது, சங்கப் பிரச்சாரக்காக இருந்த சுந்தர லட்சுமணன் ஜி அவர்கள், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் “விவேகானந்தா ஸ்டடி சர்க்கிள்” (Vivekananda Study Circle) என்ற அமைப்பைத் தொடங்கினார். வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காகவே அதை நடத்தி வந்தார். அதில் சிலம்பப் பயிற்சி, யோகா பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து அளித்து வந்தார். ஒருமுறை சுந்தர லட்சுமணன் ஜி அவர்கள், வாரம் ஒருநாள் கற்றுக் கொள்வதைப் போல, தினமும் நடைபெறும் ஷாகாவிற்கு வருகை புரிந்தால், நிறைய கற்றுக் கொள்ளலாம் என கூறியதை அடுத்து, திருநெல்வேலி கார்யாலயத்தில் (அலுவலகம்) நடைபெற்ற ஷாகாவிற்கு செல்ல ஆரம்பித்தார், ஆவுடையப்பன் ஜி.
அப்போது தாலுக்கா கார்யவாஹ்காக ஆறுமுக நயினார் ஜி இருந்தார். ஷாகாவில் பயிற்சி பெற்ற பின்னர், கல்லூரிக்கு மிகவும் அருகிலேயே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து ஷாகா ஆரம்பித்தனர். அந்த ஷாகாவிற்கு வந்த பலரும் பிற்காலத்தில் பொறுப்பேற்று சங்க வேலை செய்தார்கள் எனவும், அதில் ஒருவர் தான் ஏ.பி.வி.பி. அகில பாரத தலைவராக இருந்த சுப்பையா ஜி
எனவும், நம்மிடம் தெரிவித்தார் ஆவுடையப்பன் ஜி.
மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது, மற்ற கல்லூரிகளிலும் ஏ.பி.வி.பி (ABVP) பணிகள் துவங்க முக்கியப் பங்கு வகித்தார். திருநெல்வேலியை சுற்றியுள்ள எல்லா கல்லூரிகளுக்கும் சென்று, ஏ.பி.வி.பி.யைப் பற்றி விளக்கி, அங்கு ஏ.பி.வி.பி கிளைகளை ஆரம்பித்ததில் பெரும்பங்கு வகித்தார். அதன் மூலம் இளமைப் பருவத்திலேயே, கல்லூரி மாணவர்கள் சங்க சிந்தனையை நோக்கி வந்தனர்.
1990ல் மருத்துவ படிப்பை முடித்தவுடன், அடுத்த நாளே சங்கப் பிரச்சாரக்காக வந்தார். சென்னையில் தாம்பரம் பகுதியில் பிரச்சாரக்காக இருந்த ஆவுடையப்பன் ஜி, மாலை நேரத்தில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சங்க கார்யாலயத்தில் “ஹெட்கேவார் மெடிக்கல் சென்டரின்” முதல் மருத்துவராக சேவை புரிந்தார். காலையில் சங்கப்பணி, மாலையில் மருத்துவ சேவை என இரண்டு சமுதாயப் பணிகளையும் ஒருசேர செய்து வந்தார்.
1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூர் என்னும் இடத்தில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 10,000க்கும் மேலானோர் உயிரிழந்தனர், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்ய தமிழகத்திலிருந்து சென்ற ஒரே மருத்துவர், ஆவுடையப்பன் ஜி. பத்து நாட்கள் அங்கேயே தங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார்.
இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ள ஆவுடையப்பன் ஜி, தனது தந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், பிரச்சாரக் பொறுப்பில் இருந்து விலகி, தந்தையைக் கவனித்துக் கொண்டு காரியகர்த்தராக தனது சமூகப் பணியை தொடர்ந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி என்ற இடத்தில், சங்க ஏற்பாட்டில் அன்பு இல்லம் அமைக்கப்பட்டது. அதில் பொறுப்பாளராக இருந்து வழி நடத்தினார். அங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி, தங்கி இருந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மருத்துவ சேவை புரிந்தார்.
1995 ஆம் ஆண்டு, மே மாதம் 25ம் தேதி சுதாராணி அம்மையாரை திருமணம் செய்த ஆவுடையப்பன் ஜிக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் மருத்துவம் படித்துள்ளனர். மூத்த மகன் முருகேஷ் ராஜா மேலப்பாளையத்தில் மருத்துவராகவும் மற்றும் இளைய மகன் கிருஷ்ணா கயத்தாறில் மருத்துவராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபாளே, ஷேத்ர சங்ககாலக் வன்னியராஜன் ஜி மற்றும் ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் பலர் ஆவுடையப்பன் ஜி வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
சங்கப் பணியுடன், சமுதாயப் பணியும் ஒரு சேர செய்த ஆவுடையப்பன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.