ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள முதுர்காம் (Muturkham) கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமுனா டுடு. ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பிறந்தவர், திருமணத்துக்குப் பிறகு ஜார்க்கண்டில் குடியேறினார்.
1998-ம் ஆண்டு, கிராமத்தைச் சுற்றியிருந்த காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுவதைப் பார்த்து ஜமுனாவின் மனம் வேதனைப்பட்டது. மரங்கள் வெட்டப்படுகின்றன; வனவிலங்குகளின் வாழிடங்கள் சுருங்குகின்றன. இயற்கையின் செல்வம் கண்முன்னே கொள்ளை அடிக்கப்படுவதை அவரால் வேடிக்கை பார்க்க முடியவில்லை. “இந்தக் காடுகளைக் காப்பாற்ற வேண்டாமா?” என்ற கேள்வியைத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டார்.
தொடக்கத்தில் அவருடன் கைகோத்தவர்கள், வெறும் ஐந்து பெண்கள். பெரிய அமைப்போ, அதிகார பலமோ, பண பலமோ அவர்களிடம் இல்லை. இருந்ததெல்லாம் தங்கள் மண்ணையும், மரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதி மட்டுமே. இப்படித்தான் ‘வன சுரக்ஷா சமிதி’ எனப்படும் வனப் பாதுகாப்புக் குழு உருவானது.
காட்டுக்குள் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க, பெண்கள் குழுக்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சில நேரங்களில் வில், அம்பு, கம்புகளுடன் காடுகளுக்குள் சென்றனர். மரக்கடத்தலில் ஈடுபடுபவர்களை எதிர்கொண்டு, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முயன்றனர்.
மரக்கடத்தல் கும்பல்களின் மிரட்டல்கள், ஆபத்துகள், எதிர்ப்புகள் எனப் பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இவர்களின் முயற்சியைச் சில கிராம மக்களே கேலி செய்தனர். காடுகள் விறகுக்கும், வாழ்வாதாரத்துக்கும் பயன்படுகின்றன; அவற்றைப் பாதுகாப்பதில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால், ஜமுனா பின்வாங்கவில்லை. காடுகள் அழிந்தால், மழை, நீர்வளம், வனவிலங்குகள் என அனைத்தும் பாதிக்கப்படும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார்.
ஐந்து பெண்களுடன் தொடங்கிய முயற்சி, நாளடைவில் பல கிராமங்களுக்குப் பரவியது. நூற்றுக்கணக்கான வனப்பாதுகாப்புக் குழுக்கள் உருவாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த இயக்கத்தில் இணையவும் ஜமுனாவின் தொடர் முயற்சிகள் வழிவகுத்தன.
சகோதரனின் கையில் ராக்கிக் கட்டி, அவருடைய நலனுக்காக உறுதிமொழி எடுத்துக்கொள்வது ‘ரக்ஷாபந்தன்’ பண்டிகையின் வழக்கம். ஜமுனாவும், அவரது குழுவினரும் இதே உணர்வை மரங்களுடன் இணைத்தனர். ரக்ஷாபந்தன் நாளில் மரங்களுக்கு ராக்கிக் கட்டி, அவற்றைக் காப்பாற்றுவதாக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஹெக்டேர் வனப்பகுதி பாதுகாக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. சமூகப் பணிக்காக ஜமுனா டுடுவுக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ‘லேடி டார்சன்’ என்ற அடைமொழியாலும் அவர் அறியப்படுகிறார்.
அவருடைய உண்மையான வெற்றி, ஒரு மரம் வெட்டப்படும்போது, அது ஒரு மரத்தின் முடிவு மட்டுமல்ல; எண்ணற்ற உயிர்களின் வாழ்விடமும் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றன. மரங்களைக் காப்பாற்றுவது ஒவ்வொருவரின் கடமை என்ற எண்ணத்தை, பலரிடம் விதைத்ததுதான் அவரது சாதனை. ஐந்து பெண்களால் தொடங்கப்பட்ட முயற்சி, இன்று இயற்கைப் பாதுகாப்பின் வலிமையான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்