மன்னிப்பு – சிறுகதை

நான் என் வீட்டு பால்கனியில் அமர்ந்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மணி  நேரமாக என் எதிரில் செல்வம் சிந்திய மூக்கும், அழுகிற குரலும், பரிதாபமான முகமுமாக கைகளை ஆட்டியும், எழுந்தும் உட்கார்ந்தும், கத்தியும் கெஞ்சியும்  முக பாவங்களை காட்டிக் கொண்டிருக்கிறான். அவனை வீட்டுக்குள் அனுமதிக்கவே எனக்கு விருப்பமில்லை.  வரும்போதே அண்ணே!  என்று கைகளை கூப்பியபடியே தான் வந்தான். நான் தடுப்பதற்கு முன் என் மனைவி செல்வமா…! என்று ஓடி வந்தாள். பெண்ணல்
லவா!  இரக்கம், கருணை இத்யாதி இத்யாதி அவன் பேசியது முழுவதுமாக இல்லா விட்டாலும் ஓரளவு என் காதுகளில் விழுந்தது. என் மனைவி குமுதா எட்டி பார்த்து, காபி கொடுத்து, ஓரமாக நின்று அவன் பேசும் போது ஆழமாக கவனித்து,  அவன் அழும் போது தானும் அழுது, பின் போடா என்கிற மாதிரி  பார்த்து, கொஞ்சம் உள்ளேபோய், வெளியில் வந்து,  பின் என் முகத்தைப் பார்த்து தடுமாறிக் கொண்டிருந்தாள்.

நான் கண்களை மூடிக்கொண்டேன். அவனாக எழுந்து போய்விடுவான் என்று நினைத்தேன். பத்து நிமிடங்கள் இருக்கலாம். தூங்கி விட்டேனா? தெரியவில்லை. கண் விழித்துப் பார்ததால் அப்படியே உட்கார்ந்திருக்கிறான். ஓ…! இவன் இன்னும் போக
வில்லையா?

செல்வம் என்னை விட பதினைந்து வயது சிறியவன். எனக்கும் அவனுக்கும் இடையில் இரண்டு பெண்கள். இருவரும் திருமணமாகி சென்னையில் இருக்கிறார்கள். நான் இந்த தஞ்சை மண்ணை விட்டு எங்கும் போனதில்லை. புன்னைநல்லூர் மாரியம்மனுக்கும் எனக்கும் நெருங்கிய சொந்தம்.  எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இரண்டு பேருக்கு திருமணம் ஆகி விட்டது. இங்குதான்,  அருகில்.  கடைசி பெண் கனகா வேலைக்கு போயிருக்கிறாள். அவள் தலையில்தான் இந்த குடும்பம் ஓடிக்கொண்டிருக்கிறது. செல்வம் அவளை பார்த்தது கூட கிடையாது. எங்கள் திருமணத்தின் போது அவன் ஆறாவது படித்துக் கொண்டிருந்தான். கூட்டுக் குடும்பம். இப்பதான் இந்த கூட்டு, தனி  எல்லாம். அப்பலாம் குடும்பம்னா எல்லாரும்தான். என் அம்மா ஒண்ணாம் க்ளாஸ் மாமியார். குமுதத்தை நிமிர்த்தி விடுவாள். பாவம், அவள் வாயே திறக்க மாட்டாள். ரொம்ப பணக் கஷ்டம். எண்ணித்தான் செலவு செய்ய வேண்டும். செல்வம் மிகவும் நன்றாகப் படித்தான். எல்லாவற்றிலும் முதலாக வந்தான். எந்த நேரத்திலும் சுயநலமாக யோசிக்கத் தெரிந்து வைத்திருந்தான். கெஞ்சியொ அழுதோ காரியத்தை சாதித்துக் கொள்கிற திறமை அவனுக்கு இருந்தது. என் தங்கைகளின் திருமணத்திற்காக அப்பா பாடுபட்டு சேர்த்து வைத்திருந்த ஐந்து சவரன் நகையை விற்று காலேஜ் ஃபீஸ் கட்டிவிட்டு வந்தான். அங்கேயே, படித்த பணக்கார வீட்டு பெண்ணை எங்களிடம் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டான். அப்படியே காணாமல் போனான். மிகவும் பெரிய ஆளாகி விட்டதாக பேசிக் கொண்டார்கள். நாங்கள் கலங்கிப் போனோம். ஏதோ படிக்கிறான், நாளைக்கு குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்று நம்பி இருந்தோம்.

என் பெரிய தங்கை இங்கு ஒன்றும் வேலைக்கு ஆகாது என்று ஒரு மெடிகல் ரெப்பை திருமணம் செய்து கொண்டாள். நல்லவேளை, அவர் கொஞ்சம் நல்ல மனிதராக இருந்ததால், என் அப்பாவையும் கிளினிக்கில் பார்த்து பழகினவராய் இருந்ததால், கௌரவமாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது தங்கையின் திருமணத்தை என் தலையை அடகு வைத்து (ஒன்றும் பெரிதாகப் போகவில்லை என்பது வேறு விஷயம்) நிமிரும் போது என் அப்பா போய் சேர்ந்தார். செல்வத்தை தொடர்புகொள்ளக் கூட முடியவில்லை. பின்னர் என் குடும்ப பாரத்தை கவனித்து, பெண்களை எஸ்.எஸ்.எல்.சி மட்டும் படிக்கவைத்து ஏதோ என் சக்திக்கு ஏற்ற இடத்தில் இரண்டு பெண்களை தள்ளி விட்டேன். அப்போதெல்லாம் செல்வம் வந்து கைதூக்கி விட மாட்டானா என்ற ஏக்கம், வருத்தம் எல்லாம் கோபமாக மாறி, சில வருடங்களில் எப்போது அவன் நினைவு வரும்போதும் சபித்துக்கொண்டே இருந்தேன்.

குமுதா பொறுமைசாலி. அவள்  என் அம்மாவின் இறப்புக்குப் பிறகு அவனையும் ஒரு மகனாக பாவித்து அன்பு செலுத்தி விட்டாள். எல்லாவற்றையும் நம் தலைவிதி என்று ஒரே பதிலில் வாழக் கற்றுக்கொண்டாள். எனக்கு அப்படி இல்லை. அடுத்தவேளை சாப்பாட்டுக்கு ஒன்றும் இல்லை எங்கிற நிலையில் பைத்தியக்காரன் போல் கத்த ஆரம்பித்து விடுவேன்.  அடிவயிற்றிலிருந்து ரத்தம் கொதிக்க அவனை நாசமாகப் போவான் என்பேன். குமுதா என்னை அடக்கி, ”சொல்லாதீங்க! அவனும் நம்ம பையன்தான், அவன் வந்த வழி அப்படி, நம்ம தலையெழுத்து இப்படி” என்பாள்.

என் இரண்டாவது பெண் திருமணத்தின் போது எப்படியோ தெரிந்தவர்கள் மூலமாக அவனுக்கு தெரியப்படுத்தினேன். அதுகூட குமுதாவின் வற்புறுத்தலால். அப்போது அவன் அமெரிக்காவில் இருந்தான். அவர் திரும்பவந்து, ஒரு கவரில் ஆயிரம் ரூபாய் போட்டு செல்வம் கொடுத்தான் என்றார். சும்மா இருக்காமல் ‘இது அவங்களுக்கு பத்து பதினைந்து ரூபாய்தாண்ணே’ என்றார்.  எனக்கு ஒரு கணக்கும் புரியவில்லை. அன்றைக்கும் அவனுக்கு ஒரு மண்டகப்படி நடந்தது.

இப்போது திடீரென்று  வந்து நிற்கிறான். அமெரிக்காவில் எல்லாவற்றையும் விட்டு விட்டு இங்கேயே வந்துவிட்டானாம். அவன் என்ன விட்றது-? தொரத்தி விட்டிருப்பாங்க. சும்மா தானாக வந்ததுபோல் காட்டிக்கொள்கிறான். எனக்கு இந்த யோசனை ரொம்ப திருப்தியாக இருந்தது. ஒரு பையன் ஒரு பெண்ணாம். பெண்ணுக்கு என்னமொ  ஒடம்பு கோளாறாம். எனக்கு அவன் சொன்னது புரியவில்லை.பொண்டாட்டி விவாகரத்து கேட்கிறாளாம். அப்படி போடு. என் மனம் குதூகலித்தது.  ”அவ அங்கபோய் ரொம்ப மாறிட்டாண்ணே.  சொத்தெல்லாம் அவ பேர்ல வாங்கிட்டா. இப்ப அவளுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. எனக்குனு யாரும் இல்லண்ணே” என்றான். இன்னும் என்னென்னவோ சொன்னான். கேட்கக் கேட்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அனுபவிக்கட்டும். செய்த பாவம் சும்மா விடுமா?

”அண்ணே! உங்களுக்கெல்லாம் நான் எதுவும் செய்யல. இப்ப என்னால் முடியும். உன் மூணாவது பொண்ணு அவ பேரு என்னண்ணி?  அவளுக்கு நல்ல இடமா பாத்து நான் கல்யாணம்  செஞ்சு வக்கறேண்ணே. இல்ல படிக்கிறாளா படிக்க வெக்கறேன். தயவுசெய்து நீ என்ன சபிச்சுடாதண்ணே என்றான். ‘ஓ… என் சாபம் இவன் காதுகளுக்கு விழுந்து விட்டதா? அதுதான் இவன் கஷ்டத்துக்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறானா. ரொம்ப நல்லது.’ என் மனம் நிறைந்தது.

போனதெல்லாம் போகட்டும் தம்பி, உன்ன நாங்க எங்க புள்ள மாதிரிதான் நினைக்கறோம். நாங்க உன்ன சபிப்பமாப்பா. ஏதோ போறாத நேரம். இப்பதான் உன் வீடுனு நினைச்சு வந்துட்ட இல்ல. எல்லாம் சரி ஆயிடும். நீ வா, முதல்ல சாப்பாடு வைக்கறேன்’’. குமுதா முந்திக்கொண்டு பதில் சொன்னாள். அவள் அவனை மன்னித்து விட்டாள். அதுவும் வெகு சுலபமாக. என்னால் முடியாது. நான் ஒரு வார்த்தை பேசவில்லை. இல்ல அண்ணி. அண்ணன் ஒரு வார்த்தை சொல்லட்டும். அது வரைக்கும் பச்சத் தண்ணி குடிக்க மாட்டேன். ”அடப் பாவி! இப்பதானே காபி குடிச்ச! கில்லாடி. நினச்சத முடிக்காம விட மாட்டான்.” ”அதெல்லாம் சொல்லுவாங்க. நீ வா. நீர் அடிச்சு நீர் விலகுமா? என்னங்க இவ்வளவு கெஞ்சரான் சும்மாவே இருக்கீங்களே. கதவு தட்டும் ஓசை கேட்டது. யாரது இந்த நேரத்துல.  அட, கனகா. ”என்னம்மா வந்துட்ட! உடம்புக்கு ஒண்ணும் இல்லியே…” குமுதாவின் குரல் கேட்டது.  என்ன ஆச்சு.  நான் பதறி வெளியில் வந்தேன். ”உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லம்மா. எங்க மொதலாளி தம்பி கொரோனால முடியாம கிடந்தாராம். இப்ப காலமாயிட்டாராம். அவரு கலங்கி போயி கதறிட்டே ஓடினாரும்மா. எனக்கு வயிறெல்லாம் கலங்கி போச்சும்மா. கனகா உள்ளேவந்து அம்மாவைக் கட்டிக் கொண்டாள். எல்லாரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்கம்மா. அவள் திடீரென்று செல்வத்தைப் பார்த்து பேசுவதை நிறுத்தினாள். ”தம்பி பாப்பா பொறந்திருக்காண்டா.” கிராமத்து ஓட்டு வீட்டில் மருத்துவச்சி என் கையில் ”நல்லா புடிடா விட்றாத” என்று இவனைக் கொண்டுபோட்டாள்.

சிவ சிவா. நான் என்னை அறியாமல் தள்ளாடினேன். ‘தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள். அண்ணே என்று அவன் வரும் போது நான் அவனைத் தள்ளுவதா? என்ன மடத்தனம். பிறகு நான் என்ன மனுஷன். ”அட சரிடா. எந்திரி. போய் சாப்பிடலாம். தட்டை போடும்மா. கனகா இதுக்கெல்லாம் வேதனை படாதம்மா. எல்லாரும் ஒரு நாள் போகணும். இருக்கற வரை யார் கிட்டயும் ஆத்திரப் படாம நம்மால முடிஞ்ச நல்லத செஞ்சிட்டு போய்டணும். கை கால் கழுவிட்டு வா. யார் வந்திருக்காங்கனு சொல்றேன். நானா பேசினேன். இல்ல   கொரோனா. இல்ல மரணம். கண் முன்னால்  முகத்தில் அறைந்து விழுகிற நிஜம்.  சின்னதான ஒரு வாழ்க்கை. அதற்குள் எத்தனை பேரிடம் பகை, கோபம், வெறுப்பு, பழி, ஆத்திரம். இதெல்லாம் தேவை தானா? வர தீபாவளிக்கு பொண்டாட்டி பசங்கள கூட்டிட்டு வாடா. ஒண்ணா கொண்டாடலாம்.உன் அண்ணியப் பாத்தா விவாகரத்து பேச்செல்லாம் பேச மாட்டா. நான் மகமாயி கிட்ட சொல்றேன். உனக்கு ஒரு கொறைவும் வராது.

நான் என்ன செய்கிறேன். நான் அவனை மன்னித்து விட்டேனா? எப்படி இது நடந்தது? ஏன் என் மனம் இவ்வளவு லேசாக இருக்கிறது? எனக்கு திடீரென்று பார்வை பளிச்சென்று இருக்கிறது. முகம் பிரகாசமாக இருக்கிறது. கண்ணாடி பார்க்கவில்லை. உள்ளே என்னமோ குழைகிறது. செல்வம் என் கைகளைப் பிடித்தபடி ஓடி வருகிறான்.

ஓ…
அந்தக் காலம்தான் உண்மை. நடுவில் நடந்ததெல்லாம் கெட்ட கனவு. ஆமாம். நான் தேவையில்லாமல் சுமந்து கொண்டிருந்த கோபம் ஆத்திரம் இவை எல்லாம் ஒரே நிமிடத்தில் இறங்கி விட்டது. குமுதாவின் முகம் அமைதியாக இருக்கிறது. என்னுடைய இந்த செயல் அவளுக்கும் திருப்தியாக இருக்கிறது.

”நாந்தாம்மா உன் சித்தப்பா”. செல்வம் கனகாவிடம் ஏதோ பேசுகிறான். அவள் முகமும் மலர்ந்திருக்கிறது. நாளைக்கு என் தங்கைகளும் சந்தோஷப்படலாம். என் பெரிய பெண்களும் சித்தப்பா என்று கொண்டாடலாம். இதெல்லாம் என் ஒருவனின் மன்னிப்பால் நடந்திருக்கிறது. ஒருவர்மேல் இருக்கும் வெறுப்பைத் தூக்கிப் போடுவதன் மூலம் நமக்கு நாமே நன்மை செய்துகொள்கிறோம். நம்மைச்சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை செய்கிறோம். என்னைச்சுற்றி சிரிப்பு சப்தம் கேட்கிறது. ஆஹா… இதுவல்லவோ வாழ்க்கை.