மனதைப் பார்த்தான் மாமணி வண்ணன்! :- மகான்களின் வாழ்வில்

மஹாராஷ்டிராவில் உள்ள பண்டரிபுரத்தில் வித்யானந்த போஸ்லே என்ற மாபெரும் பண்டிதர் வசித்து வந்தார். அவர் தினசரி காலையில் நதியில் நீராடி, ஆசார அனுஷ்டானங்களுடன் பாண்டுரங்கனைத் தரிசித்த பிறகே மற்ற வேலைகளை ஆரம்பிப்பார்.

அந்த நதிக்கரையில் இருந்த குடிசை ஒன்றில் ஒரு தொழுநோயாளி வசித்து வந்தார். அவருக்கு தொழுநோய் இருந்ததால் அவரை யாரும் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. அதனால் அவர் தினசரி நீராடி நதிக்கரையில் இருந்தே கோயிலை நோக்கி வீழ்ந்து வணங்குவார்.

ஒருநாள் கார்த்திகை ஏகாதசி விரத நாள். அன்று வித்யானந்தர் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார். அப்போது எதிரில் அந்த தொழுநோயாளியும் விரதமிருந்து கோயிலுக்கு தரிசனம் காண வந்தார். அவரைப் பார்த்தவுடன் வித்யானந்தர் கோபத்தில் திட்டி அவரைத் துரத்திவிட்டார்.RENGANADHAN

மறுநாள் துவாதசி. அன்று ஒரு அதிதிக்கு உணவளித்து விரதத்தை முடிக்க வேண்டும். வித்யானந்தர் யாராவது ஒரு அதிதி கிடைக்க மாட்டாரா என்று தேடினார். அவரிடம் உணவை ஏற்றுக்கொள்ள ஒரு அதிதி கூட கிடைக்கவில்லை. அதனால் மனம் வருந்தி வீடு திரும்பும்போது, அந்த தொழுநோயாளியிடம் ஒரு அதிதி உணவை வாங்குவதைப் பார்த்தார். சற்று அருகில் சென்று, யார் அந்த அதிதி என்று பார்த்தபோது சாட்சாத் பாண்டுரங்கனே அதிதி ரூபத்தில் அவரிடம் சென்றுள்ளது தெரிந்தது. தனக்குக் கூட கிடைக்காத அந்த வாய்ப்பு அந்த தொழுநோயாளிக்குக் கிடைத்ததை நினைத்து மனம் வருந்தினார்.

அன்று இரவு வித்யானந்தர் கனவில் பாண்டுரங்கன் தோன்றி, வித்யானந்தா, உனக்குக் கல்வி அகங்காரம் இருந்தது. ஆனால் அவனுக்கோ தூய்மையான பக்தி இருந்தது. ஆச்சார அனுஷ்டானங்களை விட தூய்மையான பக்தியே உயர்ந்தது” என்றார்.

வித்யானந்தர் தனது தவறை உணர்ந்து கண்ணீர் மல்க ஓடோடிச் சென்று அந்த தொழுநோயாளியைக் கட்டிப்பிடித்து அவரிடம் மன்னிப்பு வேண்டினார். கடைசியில் இருவரும் ஜெய் ஜெய் விட்டலா! பாண்டுரங்க விட்டலா” என்ற சரண கோஷத்தில் மூழ்கினர்.

 

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்