சென்ற வாரம் இரண்டு தமிழ் திரைப்படங்கள் சென்சார் வாரியத்தின் கத்தரிக்கோல் பிடியில் சிக்கி தத்தளித்தன. ஊடகத்தின் ஒரு பகுதியினர் மட்டும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல ஆகாசத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்கள். சாமானிய தமிழன் இதையெல்லாம் ஓரக் கண்ணால் பார்த்தபடியே தன் அன்றாடப் பணிகளில் மூழ்கினான்.
வளர்ச்சி அடைந்த நிலை நோக்கி பாரதம் வீறு நடை போடும் இந்த காலகட்டத்தில் சினிமாவுக்கு சாமானியர் தரும் முக்கியத்துவம் அவ்வளவுதான். இத்தனைக்கும் ஒரு காலத்தில் தமிழகமும் சினிமாவும் பிரிக்க முடியாதவை. அரசியலிலும் சினிமா செல்வாக்கு செலுத்தியது.
மேற்படி இரண்டு படங்களில் ஒன்று மொழி வெறிக்கு தூபம் போட்டு பிரிவினை வாதத்தை உயர்த்திப் பிடிக்கும் காலாவதியான கொள்கையை ஆசையுடன் அசை போடுகிறது என்கிறார்கள்.
இன்னொரு படம் ஒரு புதிய அரசியல் கூட்டம் காணும் கனவின் கதையாம். இந்த ஆசையும் இந்த கனவும் நிஜத்தில் இருந்து வெகு தொலைவில், நிழலாக படமாக நின்று போகின்றன.
மறுபுறம் சினிமா என்ற ஊடகத்தின் வாயிலாக மக்கள் மனதில் உள்ள தேசப் பாதுகாப்பு குறித்த குமுறலை அப்படியே பீறிடச் செய்யும் ‘துரந்தர்’ என்ற ஹிந்தி திரைப்படம் ஒரு தேசிய சேதி சொல்கிறது;
அதனால் மொழி வித்தியாசம் இல்லாமல் அகில பாரதத்திலும் ஏன், அகில உலகத்திலும் வசூல் உள்பட பல விதங்களிலும் அது வெற்றிக்கொடி நாட்டியது. அந்தத் திரைப்படம் சொன்ன சேதி அப்படி.
ஒரு விமானக் கடத்தல், நாடாளுமன்றத் தாக்குதல் இரண்டையும் செய்தவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். இதைத் தடுக்க முடியாமல் தேசத்தின் பாதுகாப்பே அன்று கேள்விக்குறியான போது பாரத அரசின் ஒரு கில்லாடி உளவாளி பாகிஸ்தானுக்கு உள்ளேயே போய் பயங்கரவாதத்தின் வேரை அறுக்க சாகசங்கள் செய்ததாக சொல்வது தான் இந்த ‘ஸ்பை த்ரில்லர்’ படத்தின் கதை.
தமிழன் உள்பட பாரத தேசத்தின் சாமானிய ரசிகர்கள் அனைவரும் எதை விரும்புகிறார்கள் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பிரிவினை வாதத்தையோ பயங்கரவாத கும்பலையோ கொண்டாடுவது அல்ல, தேசத்தின் பாதுகாப்பு தான் எல்லோருக்கும் முக்கியம் என்பது தெளிவாகிவிட்டது.
ஒரு வீரபாண்டிய கட்டபொம்மனையும் ஒரு கப்பலோட்டிய தமிழனையும் தந்து அறுபது ஆண்டுகளுக்கு முன் தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த தமிழ் திரையுலகம் இன்று, ‘குண்டு சட்டிக்குள்தான் குதிரை ஓட்டணுமா, அல்லது தேசிய எழுச்சியை திரையில் பிரதிபலிக்கும் நாலுகால் பாய்ச்சல் காட்டலாமா என்பது குறித்து யோசித்துப் பார்க்கட்டும்.