மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது.
இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. திடீர் திருப்பமாக மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். காலை 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பட்னாவிசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத்பவாரின் உறவினருமான அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கும், துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இருவரும் பாடுபடுவார்கள் என்று தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகப் பதவியேற்றதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்யும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.