ஒருநாள் ரோடு வழியாகத் திருவல்லிக்கேணிக்கு காரில் ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் செங்கல்வராயனும் பொதுக்கூட்டத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போது ராஜாஜி காரை நிறுத்தச் சொல்லி ‘‘உடுப்பி ஒட்டலில் காப்பி நன்றாக இருக்கும். சாப்பிடலாம்’’ என்றார். துரதிருஷ்டவசமாக, செங்கல்வராயனிடம் அன்று கையில் காசு இல்லை. ஒட்டலுக்குள்ளே போனவர். அங்கிருந்த கிருஷ்ணராவிடம் ‘‘ராஜாஜி சத்தியமுர்த்தி காரிலே வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு காப்பி வேண்டும் அனுப்புங்கள் ! ’’ என்றார்.
அதைக் கேட்ட கிருஷ்ணராவ், ‘‘என்ன? தலைவர்கள் வெறும் காப்பி மட்டும் சாப்பிடுவதா? நீங்கள் உள்ளே போய்ச் சாப்பிடுங்கள். நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று தலைவர்களுக்கு பலகாரங்களுடன் காப்பியும் கொடுத்து உபசரித்தார். அவரும் பணம் கேட்கவில்லை.
எல்லோரும் போய்விட்டு, இரவு கூட்டம் முடிந்து அந்த வழியாகத் திரும்பும் போது ராஜாஜி செங்கல்வராயனிடம் மாலை இங்கு டிபன், காப்பி சாப்பிட்டோமே அதற்கு பணம் கொடுத்தீர்களா என்றார். செங்கல்வராயன் தயங்கிக் கொண்டே, ‘என்னிடம் அப்போது பணம் இல்லை; அவர்களும் பணம் கேட்கவில்லை ! என்றார்.
உடனே ராஜாஜி, தன் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து, பொது வாழ்க்கையில் , ஒருவரிடம் ஒப்புக்கொண்டு, கேட்டுக் காரியங்களைச் செய்ய வேண்டுமே தவிர, கேட்கவில்லை என்பதற்காக இனாமாக எதையும் பெறக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுங்கள்’’ என்றார்.