மத்தியப் பிரதேசம் சட்டமன்றம், பொது சிவில் சட்ட மசோதாவை 2026 ஜூலை மாதம் 21 ஆம் நாள் அன்று, நிறைவேற்றியது. இதன் மூலம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு வாரிசுரிமை, ஜீவனாம்சம் மற்றும் சேர்ந்து வாழும் உறவுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஒரு பொதுவான சட்ட மசோதா கொண்டு வந்தது.
திருமணம் செய்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள், வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தைகள் என அனைவருக்கும் சம அளவு சட்ட உரிமை வழங்க பரிந்துரை செய்யும் பொது சிவில் சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மத்தியப் பிரதேச சட்ட சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக சட்டங்கள் உள்ளன. பொது சிவில் சட்டம் என்பது, மத பாகுபாடின்றி நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்ட விதியை நடைமுறைப்படுத்துவதாகும். இந்த சட்டம் முத்தலாக் மற்றும் தனிநபர் செய்யும் பல திருமணங்கள் போன்றவற்றை தடை செய்கிறது. தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் நோக்கில், பழங்குடியினருக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சேர்ந்து வாழ விரும்பும் தம்பதியினர், உறவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பதிவாளரிடம் “சேர்ந்து வாழும் உறவுக்கான அறிக்கை”யை சமர்ப்பிக்க வேண்டும். இரு துணைவர்களும், குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும் மற்றும் முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். பதிவு செய்யத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.
இயற்றப்பட்ட பொது சிவில் சட்டத்தில் உள்ள விதிகள், ஒழுக்கம் மற்றும் பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வழக்கங்கள், சடங்குகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை பாதுகாக்கும். பொது சிவில் சட்டம், வாரிசுரிமை தொடர்பான விஷயங்களில் குழந்தைகளுக்கும், விதவைகளுக்கும் சம உரிமை மற்றும் சீரான கட்டமைப்பை உருவாக்க முயல்கிறது.
மத்தியப் பிரதேசம் சட்டமன்றம், எதிர்க்கட்சியினரின் (காங்கிரஸ்) போராட்டத்துக்கு மத்தியில், பொது சிவில் சட்ட மசோதா 2026, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. இதன் மூலம் உத்தராகண்ட், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேசம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் நான்காவது மாநிலம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் முதலமைச்சர் மோகன் யாதவ் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசுகையில், “இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று புகழ்ந்தார்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : குகத்யா