பொங்கல் விழா – ஒரு அறிவியல் ஆன்மீகம்

புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்த காலக்கட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மத நம்பிக்கையைக் குறைக்கும் என்று  மதத்தலைவர்கள் அவர் கூற்றை எதிர்த்தனர். ஆனால் அவர் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன் வாழ்ந்த நம் தமிழ் குடியினரோ அறிவியலைக்கூட எளிய மக்களும் பின்பற்றும் வகையில் ஆன்மீகத்துடன் வகுத்திருக்கிறார்கள்.
போகி பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள்,அறுவடைக்கு முந்தைய நாள்.பொதுவாக மார்கழியில் கடும் பனி பொழிவு இருக்கும். அறுவடைக்கு தயாரான விளைச்சல் பொருட்களை விலங்குகளிடமிருந்தும் கொள்ளையரிடமிருந்தும் பாதுகாக்க தீ மூட்டி பறையிசைத்து வந்தனர். புதிய விளைச்சல் பொருட்களை சேகரிக்க அவரவர் வீடுகளையும் கிடங்குகளையும் வெள்ளையடித்து வண்ணங்கள் பூசி தயார் செய்தனர் அதில் பயனில்லாத பொருட்களை தீ மூட்ட பயன்படுத்தினர். இதுவே “பழையன கழிதலும் புதியன புகுதலும்” ஆகும்.
தை மாதத்தின் முதல் நாள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க பொங்கலிட்டும் நெல் மஞ்சள் கம்பு சோளம் கரும்பு என அறுவடை செய்யப்படும் அனைத்தையும் படைத்தும் கொண்டாடினர். புத்தாடை அணிந்து தொழிலாளர்கள், குறு விவசாயிகளுக்கு ஆடை,  விளைபொருட்களை வழங்கினர்.
ஏர் உழவும் பால் உற்பத்திக்கும் உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்க மாட்டு பொங்கல் கொண்டாடினர். மஞ்சுவிரட்டு மூலம் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற காளைகளையும் ஏர் உழுதல் மற்றும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்பட ஏதுவான காளைகளையும் பிரித்தனர்.
காணும் பொங்கலன்று வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களை அவர்  இல்லங்களுக்குச் சென்றும் சுற்றுலா சென்றும் சந்தித்தனர். பண்டமாற்று முறையில் அவர்களுக்குள்ளும் சந்தை மூலமாகவும் விளைச்சல் பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
நம் முன்னோர்கள் அறிவியல் ஆன்மீக முன்னோடிகள்.
                                                                                                                      Dr. பிரவீன் ராஜ்குமார் – மாதவரம், சென்னை