மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதில் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏ-க்கள் கடந்த வாரம் பதவி விலகினர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது.
இதனிடையே, ஆளுநர் லால்ஜி டாண்டன் 14-ம் தேதி முதல்வர் கமல்நாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் 16-ம் தேதி தொடங்கும். அன்றைய தினம்எனது உரை முடிந்ததும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூடியது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றி குறிப்பிடப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர், தனது உரையை முழுமையாக வாசிக்காமல், ஒரு பகுதியை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். பின்னர் கோவிட்-19 காய்ச்சல் காரணமாக அவையை 26-ம் தேதி வரைஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் என்.பி.பிரஜாபதி அறிவித்தார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது.
அதில், “சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆளுநரின் உத்தரவை மத்திய பிரதேச அரசு அமல்படுத்தவில்லை. எனவே, உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்புநேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி, “மத்திய பிரதேசத்தில் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறும்போது, “இந்த மனு குறித்து மத்தியபிரதேச அரசு 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்றனர்.
பின்னர் பதவி விலகிய அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏ-க்கள் பதவி விலகல் கடிதங்கள் பேரவைத் தலைவருக்கு அனுப்பினர். அதில் 6 பேரின் கடிதங்களை மட்டும் அவர் ஏற்றுக் கொண்டார். இதுபோல தங்கள் கடிதங்களையும் ஏற்க வேண்டும் என மற்ற 16 பேரும் விரும்புகின்றனர்” என்றார்.
ஆளுநருக்கு பதில் கடிதம்
ஆளுநர் உத்தரவிட்டபடி நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து, 17-ம் தேதி(நேற்று) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வருக்கு ஆளுநர் டாண்டன் மீண்டும் கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் கமல்நாத் நேற்று எழுதிய கடிதத்தில், “நீங்கள் எனக்குஎழுதிய கடிதத்தை, உரிய நடவடிக்கைக்காக பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளேன்” என கூறப்பட்டுள்ளது.