புளூபேர்ட் செயற்கைக்கோள் பாரத்தின் புதிய பாய்ச்சல்

அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி ஸ்பேஸ்மொபைல் (Ast Space Mobile) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புளூபேர்ட் செயற்கைக்கோள், உலகளாவிய தகவல் தொடர்பில் ஒரு புரட்சிகரமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட்போன் இணைப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது, தாழ்வட்ட புவி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) இயங்குகிறது. இது ஒரு கால்பந்து மைதானத்தில் பாதி அளவுள்ள, அதாவது 64 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய ஆண்டனாவையும், சுமார் 6,000 கிலோ எடையும் கொண்டது.

இந்த புரட்சிகரமான தொழில்நுட்பம், பாரம்பரிய தரை அடிப்படையிலான கோபுரங்களைச் சாராமல், பயனாளிகள் நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளவும், பிராட்பேண்ட் இணையத்தை அணுகவும் அனுமதிக்கிறது. 40 மெகாவாட்ஸ் MHz வரையிலான பீம் திறன் மற்றும் 120 மெகாபைட்ஸ் Mbps உச்ச வேகத்துடன், அமெரிக்கா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகச் சந்தைகளில் தொடர்ச்சியான பிராட்பேண்ட் சேவையை வழங்குவதை புளூபேர்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் உலக அளவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மிகவும் தொலைதூரப் பகுதிகளில் கூட, தடையற்ற தகவல்தொடர்பை சாத்தியமாக்குவதன் மூலம், புளூபேர்ட் டிஜிட்டல் பிரிவு (Digital Divide) குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் பேரிடர் மேலாண்மை போன்ற முக்கியத் துறைகளிலும் இதன் பயன்பாடுகள் விரிவடைகின்றன.

தரைவழி உள்கட்டமைப்புகள் சேதமடையும் அவசர காலங்களில், இந்த செயற்கைக்கோள் தடையற்ற தொடர்பை உறுதி செய்வதுடன், உயிர்களைக் காப்பாற்றவும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் உதவும். போதுமான தொலை தொடர்புத் சேவை கிடைக்காத மக்களுக்கு, இது கற்றல், வர்த்தகம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான புதிய வாய்ப்புகளை உறுதியளிக்கிறது.

இந்தத் திட்டத்தில் பாரதம் தனது ஜியோசின்க்ரோனஸ் சேட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் மார்க் III (GSLV Mk III) ராக்கெட்டைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஒரு அமெரிக்க நிறுவனம் இவ்வளவு பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவும் பொறுப்பை பாரதத்திடம் ஒப்படைப்பது இதுவே முதல் முறையாகும். இந்தக் கூட்டாண்மை, இஸ்ரோவின் (ISRO) நம்பகமான மற்றும் செலவு குறைந்த ஏவுதல் சேவை வழங்குனர் என்ற வளர்ந்து வரும் நற்பெயரை எடுத்துக்காட்டுகிறது.

தொழில்நுட்ப கௌரவத்தைத் தாண்டி, இந்தத் திட்டம் உறுதியான பொருளாதார நன்மைகளையும் வழங்குகிறது. இது வருவாயை ஈட்டுவதோடு, உலகளாவிய வர்த்தக ஏவுதல் சந்தையில், பாரதத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்கிறது. மேலும், இது எதிர்காலக் கூட்டுறவுகளுக்கான வழிகளையும் திறந்து, விரிவடைந்து வரும் விண்வெளித் துறையில் உள்ள பாரத நிறுவனங்களுக்குப் பயனளிக்கிறது.

புளூபேர்ட் செயற்கைக்கோள் திட்டம், ஒரு தொழில்நுட்ப சாதனையை விட மேலானது – இது சர்வதேச ஒத்துழைப்பின் சின்னமாகவும், உலகளாவிய இணைப்புக்கான ஒரு ஊக்கியாகவும் விளங்குகிறது. விண்வெளி சார்ந்த தகவல் தொடர்புகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பாரதம் ஒரு முக்கியப் பங்குதாரராகத் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.

கட்டுரையாளர்: சீ.வேணுகோபால்