பிரதமர் நரேந்திர மோடி 594 கி.மீ. தொலைவு கொண்ட `கங்கா எக்ஸ்பிரஸ்’ தடத்தை, ஏப்ரல் மாதம் 29ம் தேதி திறந்து வைத்தார். இந்த தடம் மீரட்டையும், பிரயாக்ராஜையும் இணைக்கிறது. இது உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தி அளிக்கக்கூடியது. மூன்றரை ஆண்டுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
464 கி.மீ. தொலைவுக்கு ‘அதானி ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம்’ எக்ஸ்பிரஸ் தடத்தை அமைத்துள்ளது. எஞ்சிய 130 கி.மீ. எக்ஸ்பிரஸ் தடத்தை, ஐ.ஆர்.டி. இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் அமைத்துள்ளது. மீரட், ஹப்பூர், புலந்சாஹர், அம்ரோகா, சம்பல், பதோன், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னோ, ரேபரேலி, பிராதாப்கார், பிரயாக்ராஜ் ஆகிய 12 மாவட்டங்களில் 11 தொழில் தாழ்வாரங்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். முதல்கட்டமாக 10 ஆண்டுக்குள் 3 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
இந்த எக்ஸ்பிரஸ் தடத்தில், ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 3.5 கி.மீ தொலைவுக்கு அவசரமாக, போர் விமானம் இறங்குவதற்கான வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இப்போது இந்த எக்ஸ்பிரஸ் தடம் 6 வழி பாதையாக உள்ளது. இதை எதிர்காலத்தில் 8 வழி பாதையாக விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இந்த எக்ஸ்பிரஸ் தடம் பயண நேரத்தை 11 மணியிலிருந்து 6 மணியாக குறைக்கிறது. கல்வி, சுகாதாரம், சுற்றுலா, ஆன்மிகப் பயணம் போன்றவற்றிற்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும். 12 மாவட்டங்களில் உள்ள 519 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இந்த வழி தடத்தைப் பயன்படுத்துவார்கள். இந்த வழி தடம் 8 கோடி மக்களை இணைக்கிறது.
இந்த எக்ஸ்பிரஸ் தடம், மாநில அரசின் வருவாய் மேம்பாட்டுக்கும் கணிசமாக உதவும். வரும் 10 ஆண்டுக்குள், இந்த வழித்தடம் வாயிலாக அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடத்தில் வேளாண் பொருட்களை துரிதமாக எடுத்துச் செல்ல முடியும். விவசாயிகள் சந்தைகளுக்கு விரைவாக பயணிக்க முடியும். இதைப்போல சிறு, குறு தொழில்துறையினரும் பயனடைவார்கள்.
இந்த வழி தடத்தில், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்கிதாம், பெல்காதேவி, சந்திரிகா, திரிவேணி சங்கமம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால், உத்தரப்பிரதேச பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் பயனடைவார்கள். குறுகிய காலத்தில் நெடுந்தொலைவு பயணிக்க முடியும் என்பதால், கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பொருளாதார வரைபடம் எதிர்காலத்தில் மேலும் எழுச்சிபெறும். பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இந்த எக்ஸ்பிரஸ் வழி தடம் அமைந்துள்ளது. இது, எதிர்காலத்தில் அமைக்கப்பட இருக்கும் மற்ற எக்ஸ்பிரஸ் வழிதடங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்று பொறியியல் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி இயந்திரமாக இந்த வழிதடம் செயல்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ள நம்பிக்கை விரைவில் நனவாகும்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி