இறைமீது பக்தி செலுத்தி மனதைக் கட்டிப்போட மொழி ஒரு தடையில்லை.
அவதி மொழியில் ஹனுமான் சாலீஸா. ஸ்ரீதுளசிதாசர் அருளியது. பண்டரீபுர நாயகனாம் பாண்டுரங்கன் மீது அபங்கங்கள். மராட்டிய பாஷையில் பாடப்பெற்றவை.
ஸ்ரீதியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருக்கின்றன. இருப்பினும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுகின்றன.முக்கிய காரணம்தான் என்ன?பல்வேறு மொழிகளில் தீட்டப்பட்டிருந்தாலும் அக்கீர்த்தனைகள் கேட்பவர் காதுகளுக்கு வற்றாத நதியாய் அள்ளித்தரும் உணர்வுபூர்வமான பக்திரசம். அப்பாடல்களில் இழையோடும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து இந்த ஜென்மாதனில் வாழும் விருப்பத்தை அதிகரிக்கும் அவாதனை ஏற்படுத்தி விடுகிறது.
இக்கீர்த்தனைகள் இறைவன் புகழைப் பாடுவதால் ஆடியன்ஸ் அனைவரும் தமது உரிமை உடையதாக நினைக்கிறார்கள். தமக்கு உரிமையானது என்பதால் நினைவில் நிரந்தர இடம் அளிக்கிறார்கள். அதிலும் பஞ்சரத்ன கீர்த்தனைகளில் உள்ள ‘எந்தரோ மகானுபாவுலு’ வாழ்வில் ஒரு முறை கேட்டுவிட்டால், அது உயிரோடு ஒட்டிக் கொண்டே விடுகிறது.
இவருக்குச் சிறுவயதிலேயே ‘ராமநாம மந்திரம்’ அவரது தந்தை மூலம் உபதேசம் ஆனது. அவரது தந்தை குலவழியில் தான் பூஜித்து வந்த ஸ்ரீராம, சீதா, லஷ்மண, ஆஞ்சநேய சிலாரூபங்களை ஸ்ரீதியாகராஜரிடம் கொடுத்து தினமும் பூஜித்து வருமாறு கூறினாராம். நாள்தவறாமல் இதனைப் பூஜித்து வந்த தியாகராஜர், இந்த தெய்வங்களை நேரில் காண விரும்பினார். ஸ்ரீராமருடன் நேரடியாகப் பேசுவது போல பல கீர்த்தனைகளை இயற்றிய இவர், அந்த உரிமையில் ஒப்பந்தம் ஒன்றினை ராமருடன் போட்டுக் கொள்கிறார்.
தசரதராமன் தரிசனம் !
கோடி ராமநாமம் ஜபித்து முடித்தால் தரிசனம் தர வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். ஒரு நாள் மதியஉணவு உண்ண, தலைவாழை இலையின் முன் ‘ராமா’ என்று சொல்லிய வண்ணம் அமர்கிறார் தியாகராஜர். அப்போது ஜகத்ஜோதியாய் ஸ்ரீராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தியாகராஜர் முன் தோன்றினார்களாம்.
திகைத்துப் போன தியாகராஜர், “தொன்னூற்றாறு லட்சம் ராம நாமம்தானே ஜபித்து முடித்து இருக்கிறேன். ஒப்பந்தப்படி இன்னும் ஒரு கோடி முடியவில்லையே” என்று ஸ்ரீராமரிடமே கேட்டாராம். அதற்கு ஸ்ரீராமர், உட்காரும்போதும் எழும்போதும் ‘ராமா’ என்பாயே அதையெல்லாம் சேர்த்தால் ஒரு கோடி ஆகிவிட்டது. அதனால் நேரடியாக காட்சி அளிக்க வந்தேன் என்றாராம் சீத்தாராமன்.