பால கங்காதர திலகர்

திலகர் ஒரு மிகச்சிறந்த “தேசியவாதியும்”, “சமூக சீர்திருத்தவாதியும்”, விடுதலைப் போராட்ட வீரருமாக அறியப்படுபவர். பாரத விடுதலை இயக்கத்தில் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான “லோகமான்ய” என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதனை நான் அடைந்தே தீருவேன்’ என்னும் திலகரின் புகழ் பெற்ற கூற்று இன்றும் பாரதத்தில் நினைவுகூரப்படுகிறது. திலகரின் சீடரான வ. உ. சிதம்பரம் பிள்ளை “தென்னாட்டுத் திலகர்” என்று அழைக்கப்படுகிறார்.

மகாதேவ் கோவிந்த் ரானடே ஆரம்பித்த சர்வஜய்னிக் சபாவில் சேர்ந்து பொதுத் தொண்டாற்றினார். ரானடே ஆற்றிய சொற்பொழிவும் விஷ்ணு சாஸ்திரி சிப்லுண்கர் எழுதிய கட்டுரைகளும் திலகரை ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் தூண்டியது.

சுவாமி விவேகானந்தரின் பரிவ்ராஜக வாழ்க்கையின் போது, ரயிலில் அவரது சக பிரயாணியாக வந்தவர் திலகர். பின்னர் திலகரின் இல்லத்தில் 10 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். இதே அறையில்தான் புகழ்பெற்ற விநாயகர் திருவிழாவையும் திலகர் ஆரம்பித்தார். திலகர் பாதிக்கப்பட்ட  மக்களுடன் சேர்ந்து உழைத்தார்.

இந்திய தேசிய காங்கிரசில் திலகர் சேர்ந்தார். அப்போது அது அடிமை மனப்பாங்குடன் இருந்தது. லார்டு கர்ஸன் வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இதை திலகர் கடுமையாக எதிர்த்தார். சுதேசி பொருட்கள் ஆதரவு, அந்நிய பொருட்கள் பகிஷ்கரிப்புகளை நடத்தினார். இது பின்னாளில் காந்திஜியால் ஒத்துழையாமை இயக்கம் என்ற புதிய பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

திலகருக்கு, விபின் சந்த்ர பாலும், லாலா லஜபத் ராயும் துணை நின்றனர். இவர்கள் லால்- பால்- பால் என்றும் மும்மூர்த்திகள் என்றும் அழைக்கப்பட்டனர். கோகலே போன்றோர் ஆங்கிலேயரை எதிர்க்காமல் எதையும் கேட்டுபெற வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அவர்களுக்கு திலகரின் செயல்கள் அச்சத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டாகப் பிரிந்தது. திலகர் தீவிரவாதிகள் தலைவரானார். ஆங்கில அரசு அவரைக் கைது செய்து பர்மா சிறைக்கு அனுப்பியது. சிறையில் கீதா இரகசியம் என்ற நூலை எழுதினார். கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் சுமார் 2,00,000 பேர் கலந்துகொண்டனர்.