பாரம்பரிய உற்சாகத்துடன் விநாயக சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும்மிகுந்த  உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக இந்து பண்டிகை என்றாலே கடவுள் சிலைகளை வீட்டில் வைத்து பூஜிப்பது வழக்கம்.ஆனால் விநாயகர் சதுர்த்தி இ ன்று, வீடுகளில் மட்டுமல்லாது,  தெரு வீதிகளிலும்  சாலைகளில் முக்கிய இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 890 இடங்களில் பிரமாண்ட வடிவில் விதவிதமான வடிவங்களில்  விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று காலையிலேயே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தலை நகர் சென்னையில் மட்டும் 2,642 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்து முன்னணி சார்பில் அதிக எண்ணிக்கையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

சிலைகள் வைத்து வழிபட சென்னை ஐகோர்ட்டு சில கடுமையான  உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்துள்ளது. அதாவது, சிலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. தகரக் கொட்டகையின் கீழ்தான் சிலைகளை வைக்க வேண்டும். பிற வழிபாட்டு ஸ்தலங்களுக்கு அருகே சிலை வைக்கக்கூடாது. இதுபோன்ற உத்தரவுகள் இருந்ததால், போலீசார் அதன் அடிப்படையிலேயே சிலைகள் வைக்க அனுமதி அளித்தனர்.இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் தெருவுக்கு தெரு வீதிக்கு வீதி விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் . ஆலயங்களிலும் வழக்கமான உற்சாகத்துடன்  வரிசையில் நின்று வழிபட்டனர்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் இந்த பணியில் உள்ளனர். அதிலும், சிலைக்கு ஒரு போலீசார் என்று 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை, மாலை என இருவேளைகளில் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. வழிபாடு முடிந்த பிறகு, குறிப்பிட்ட நாட்களில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட இருக்கின்றன. சென்னையை பொறுத்தவரை, வரும் 5, 7 மற்றும் 8-ந் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *