பன்னாட்டு பாரதி விழாவின் தொடக்க நிகழ்வில், மகாகவி பாரதியின் கவிதைகளைத் தனது உரையின் ஓர் அங்கமாக்கினார் பிரதமர். இதன் மூலம் மகாகவி பாரதியின் கவிதைகள் அவர் மனதில் ஆழப் பதிந்துள்ளதை நாம் அறிகிறோம். இது மகாகவி பாரதியின் கவிதைகளுக்குள் இருக்கும் காந்த சக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என மகாகவி பாரதி கூறியிருந்தார். அதை பிரதமர் செய்து வருகிறார். மேலும் எங்கெல்லாம் மகாகவி பாரதியை எடுத்துச் சொல்ல முடியுமோ அங்கெல்லாம் சொல்லி வருகிறார்.
‘யாமறிந்த புலவரிலே…’ என்னும் பாடலில் கம்பன், வள்ளுவன், இளங்கோ அடிகளைப் போற்றியிருப்பார் மகாகவி பாரதி. அதில் உரிமையுடன் ஒரு சிறு மாற்றத்தை செய்ய விரும்புகிறேன். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல், மகாகவி பாரதியைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என சேர்க்க விரும்புகிறேன். ஒரு சாமானியனாக எனக்குள் மகாகவி பாரதியார் எப்போதுமே ஓர் ஊக்கத்தை வழங்குவார். வீரம், தன்னம்பிக்கை கொண்டு, சுதந்திர வேட்கையை ஒவ்வொரு பாடலில் எடுத்துரைத்தார் மகாகவி பாரதி. அவரது பாடலில் நாம் எப்போதுமே புத்துணர்ச்சியை உணர முடியும். தன்னை பாரத அன்னையின் தவப் புதல்வனாகவே பாவித்து ஒவ்வொரு பாடலையும் பாடியுள்ளார்.
தமிழின் பெருமையைக் கூறும் அதே நேரத்தில், மற்ற மொழிகளின் சிறப்பையும் திறம்பட பாடும் வல்லமை பெற்றிந்தார் அவர். குறிப்பாக இனிமையிலும் வீரத்தைக் கொண்டு வரும் சக்தி, ஒரு புலவனுக்கு இருந்ததென்றால் அது மகாகவி பாரதிக்குத்தான். தேசபக்தியைப் பற்றி பேசும் அவர் தீவிர இறை பக்தர், அவர் கண்ணனைப் பற்றி பாடும்போது, வீரத்தை ஒதுக்கி, கடவுளை ரசிக்கும் ஒரு கவிஞனாய் மாறி விடுவார். மனிதனின் நற்குணங்களையும் போற்றிப் புகழ்ந்த அவர், கோபத்தை வெல்வதின் முக்கியத்துவத்தை தெளிவாக கூறியுள்ளார். மகாகவி பாரதியை எத்தனை முறை படித்தாலும், புதிதாகவே தோன்றுவார் என நிர்மலா சீதாராமன் கூறினார். வானில் பண்பாட்டு மையம் சார்பில் இணையவழியில் நடைபெற்று வந்த பன்னாட்டு பாரதி விழாவில் கலந்து கொண்டு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய நிறைவு உரையிலிருந்து.