தஞ்சாவூரில் இருந்து மகாகவி பாரதியாரின் சிந்தனைகளைப் பரப்பி வந்த தஞ்சை வெ.கோபாலன், தனது 85ஆவது வயதில் மே 05-ஆம் தேதி காலமானார். ‘திருவையாறு பாரதி இயக்கம்’ என்ற அமைப்பையும், அஞ்சல்வழியே பாரதி சிந்தனைகளைப் பரப்பும் ‘பாரதி இலக்கியப் பயிலக’த்தையும் நடத்தி வந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய அகராதியான வெ.கோபாலன், ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?’, ’சுதந்திர கர்ஜனை’ நூல்களின் ஆசிரியர். ‘தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு’, ‘சுதந்திரச் சுவடுகளின் வழியே’, ‘திருவையாறு வரலாறு’, ’பாரதி போற்றிய பெரியோர்கள்’ ஆகிய வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர். இலக்கியம், ஆன்மிகம் சார்ந்த படைப்புகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.
சங்கத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்ட வெ.கோபாலனின் வீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன்ஜி பாகவத் உட்பட ஏராளமான தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர். இலக்கியத் துறையில் பணியாற்றி வரும் தேசிய சிந்தனை கழகத்தின் மாநில துணை தலைவராக இருந்து வந்தார்.
’விஜயபாரதம்’ இதழில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மிகம், சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்த தஞ்சை வெ.கோபாலனின் ஆன்மா சத்கதி அடைய இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.