பாரதத் தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

நம்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தேமாதரம் போன்ற தேசபக்தி பாடல்கள் மக்கள் மத்தியில் மன உறுதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் நம் தேசத்தை நாம் மறந்து விடுகிறோம். அதை உணர்ந்துதான் சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கவும் அதற்கு மரியாதை செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே பொது நலன் கருதி, ஒவ்வொரு மக்களின் மனதிலும் தேசபக்தி உணர்வை ஊட்டும் விதத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வந்தேமாதரம் பாடல் வாரத்தில் ஒருநாள் திங்கள் அல்லது வெள்ளிக் கிழமை பாடவேண்டும். மாதம் ஒருமுறையாவது அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வந்தே மாதரம் பாடலை பாடவேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் தேர்வு சம்மந்தமான ஒரு வழக்கில் நீதிபதி எம்.வி. முரளிதரன்  உத்தரவு பிறப்பித்தார்.

இதனடிப்படையில்  வந்தே மாதரத்தின் வரலாற்றை  வாசகர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாக வழங்கியுள்ளோம்.

வந்தே மாதரம்!

ந்த இரு மந்திரச் சொற்களைத் தந்த மாமனிதர் யார்?

வெடிகுண்டைக் கண்டுகூட வெகுண்டு போகாத வெள்ளையன் இந்த வந்தே மாதரம்” கேட்டு மிரண்டு போனானே!

அத்தகைய வீரியச் சொற்களை வடிவமைத்த வீர புருஷர் யார்?

ஒரு கவிதையின் சரணத்தில் அமைந்திருக்கிறச் சொற்கள் அல்ல இவைகள்.

உச்சரிக்கின்ற ஒவ்வொரு ஹிந்துவையும் உணர்ச்சி மிக்கவனாக, உயிர்த் துடிப்பு மிக்கவனாக மாற்றும் வல்லமை படைத்த மந்திரச் சொற்கள் தந்த மஹாகவிஞன் யார்?

பாரத தேச விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரம், பாதகரையும் பண்பினராய் மாற்றிடும் மந்திரம், மானுயர் பாரத தேவி வான் மருந்தெனவே விரும்பிடும் மந்திரம்.

இந்த வந்தே மாதரத்தை நமக்கு வழங்கிய மஹரிஷி யார்?

 

அவர்தாம் பங்கிம் சந்திர சட்டர்ஜி.

வங்கமொழி இலக்கிய வானில் தேன் நிலவாய் திகழ்ந்தவர்.

தமது அமர இலக்கியங்களால் வங்க மொழிக்கு அமரத்துவம் தந்தவர்.

தாயே! பாரதமாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்” என்று பாடுகிறார்.

இந்தப் பாடலில் இருந்துதான் என்ற சொல் உணர்ச்சிப் பிழம்பான கோஷமாக பிறந்தது.

‘வந்தேமாதரம்’ என்ற கோஷத்திற்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதனை, சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் மிக அருமையாக விளக்குகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் போலீசார் தடியால் தாக்கும்போது ஒன்றிரண்டு அடிகளுக்கு மேல் தாங்கமுடியாத ஒருவர், அடிக்கு அடி வந்தேமாதரம் சொல்லும்போது அவரது உடலில் பத்துக்கு மேற்பட்ட அடிகளைத் தாங்கக் கூடிய சக்தி வந்துவிடும்” என்பார்.

‘வந்தேமாதரம்!’ என்ற கோஷம், சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே மெய்சிலிர்ப்பையும் ஆவேசத்தையும் உருவாக்கியது.

இளைஞர்கள் புன்முறுவலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிடவும் வெஞ்சிறையில் வாடவும் தைரியத்தைக் கொடுத்தது.

மஹாயோகி அரவிந்தர் இந்த மஹாகவியை,

எதிர்காலத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் கொண்டவனையே கவி எனக்குறிப்பிடுகிறோம்.

தீர்க்க தரிசனத்தோடு அன்றைக்கு எங்ஙனம் விசுவாமித்திரர் ஹிந்து சமுதாயத்திற்கு ஆன்மிக சிரஞ்சீவித்துவம் கொடுக்க காயத்ரி மந்திரத்தை வழங்கினாரோ, அதுபோலவே இன்று ஹிந்து சமுதாயம் அரசியல் ரீதியாக சிரஞ்சீத்துவம் பெற  பங்கிம் சந்திரர் ‘வந்தேமாதர’ மந்த்ரத்தை வழங்கியிருக்கிறார்.

அவர் ஒரு மந்த்ர த்ருஷ்டர், மஹரிஷி” என்று வர்ணித்தார்.

பின்னாளில் உலக மஹா கவிஞனாக உயர்ந்து நின்ற ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள், பங்கிம் சந்திரர் வங்க இலக்கிய உலகின் முடிசூடா மன்னர். நட்சத்திரங்களுக்கிடையே ஒரு நிலவாக இல்லை, இல்லை, அந்த நட்சத்திரங்களையே நாம் பார்க்க இயலாதவாறு ஒளிவீசும் ஸூர்யனாக வங்க இலக்கிய வானில்  சுடர்விட்டு பிரகாசித்தவர்.

 

வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு

1923 ம் ஆண்டு காகிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு மௌலானா முகம்மது அலி தலைமை தாங்கினார்.

இவர்தான் கிலாபத் இயக்கத்திற்கு காரணமானவர். அவருக்கு காந்திஜி கொடுத்த பரிசு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவி.

காங்கிரஸ் மாநாடுகளில் துவக்கத்தில் பாடித்தான் துவங்குவார்கள்.

வழக்கம்போல் விஷ்ணு திகம்பர பலுஸ்கர் என்ற இசைமேதை ‘வந்தேமாதரம்’ பாட வந்தார்.

‘வந்தேமாதரம்’ பாடலை ஆரம்பித்த உடனேயே, மௌலானா முகம்மது அலி எழுந்து பாடக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.

‘என்தாயின் மீது நான் பக்தியுடன் பாடும் போது தடுக்க நீ யார்? நான் பாடியே தீருவேன்’ என்று பலுஸ்கர் தொடர்ந்து பாடியவுடன், முகம்மது அலி காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

மாநாட்டில் இருந்த அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் வெளியேறினார்கள்.

‘வந்தேமாதரம்’ என்றால் தாயை வணங்குகிறேன் என்று பொருள்.

‘நாங்கள் அல்லா ஒருவரைத் தவிர, வேறு எவருக்கோ அல்லது ஒரு உருவகத்திற்கோ தலைவணங்க மாட்டோம்” என்று அறிவித்தார்கள்.

இதனைக் காங்கிரஸ் தலைவர்கள் கண்டிப்பதற்குப் பதில் வந்தேமாதரத்தைக் கைவிடத் தீர்மானித்தார்கள்.

அதுமட்டுமல்ல காந்திஜி அவர்கள் தான் எழுதும் கடிதங்களில் கையொப்பமிட்ட பிறகு பாபுவின் காணிக்கை என எழுதுவது வழக்கம். முஸ்லிம்கள் ஆட்சேபித்துவிட்டதன் விளைவாக எழுதுவதை நிறுத்திவிட்டார்.

 

சுதந்திர பாரதத்தில்

சுதந்திரம் பெற்ற பிறகும்கூட, பாரதத்தில் வந்தேமாதரம் தேசிய கீதமாக வைக்கப்படவில்லை என்பது நமக்கு மிகுந்த அவமானமாகும்.

ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ‘ஜனகணமன’ இன்று தேசிய கீதமாக ஒலிக்கிறது.

தாகூர் இந்தப் பாடலை எங்கு பாடினார்? உண்மையிலேயே பாடலின் பொருள் என்ன என்பதனை ஆராய்ச்சி செய்து பார்த்தால் சில உண்மைகள் நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

அந்தப் பாடலின் பொருள்: ஜன (மக்கள்), கண (கூட்டத்தின்), மன (மனங்களில்) அதிநாயக (நாயகனாக வீற்றிருக்கும்) ஜெயஹே (உனக்கு வெற்றி உண்டாகட்டும்) என்று பொருள்படும்படி அமைந்த பாடல் அது.

இடைப்பட்ட காலத்தில், கல்கத்தா நமக்கு தலைநகரமாக இருந்தது. அப்போது ஐந்தாவது ஜார்ஜ் மன்னர் கல்கத்தா வந்தபோது, அவருக்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை பாராட்டி தாகூர் பாடிய பாடல் இது!

வந்தேமாதரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இது காங்கிரஸ் தலைவர்களின் பலவீனமாகும்.

இயற்கையாகவே இந்த நாட்டில் அனைத்தையும் தாயின் வடிவமாக காண்பது இயல்பு. அத்தகைய நாட்டில் நடைமுறைக்கு மாறாத வாழ்த்துப் பாடல் எப்படி நாயகியை நாயக என்று வர்ணிக்க முடியும். எனவே தாகூரால்’ பாடப்பட்ட இந்த ‘ஜன கண மன’ பாடல் தேசிய பாடல் என்பதற்கு இலக்கணத்தை பெறமுடியவில்லை என்பது நமது கருத்து.

தேசிய கீதம் எது என்பது பற்றி அரசியல் சாசன சபை தீர்மானம் எதையும் நிறைவேற்றவில்லை. அரசியல் சாசன சபையின் இறுதி நாளான 1950 ம் ஆண்டு, ஜனவரி 24 ம் நாளன்று குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திர பிரசாத், அந்தச் சபையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை விவாதித்து முடிவு செய்துவிட்டோம். ஆனால் ஒரு விஷயம் நிலுவையில் இருக்கிறது. தேசிய கீதம் பற்றிய முடிவுதான் அது.

முன்பு அது குறித்து சபையில் விவாதித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் தீர்மானம் மூலமாக முடிவு செய்வதற்குப் பதிலாக, நான் ஓர் அறிக்கை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

ஜன கண மன என்ற பாடலின் இசையும் சொற்களும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். இந்திய போராட்டத்தில் வரலாற்றுப் பங்களித்த என்ற பாடலுக்கும் ஜன கண மனவுக்குச் சமமான அந்தஸ்து அளிக்கப்படும். (கரவொலி) இந்த அறிவிப்பு உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கும் என்று நம்புகிறேன் என்பது அந்த அறிக்கை.