பாரதத்தின் விதை அன்னை பத்மஸ்ரீ ரஹிபாய் சோமா போபெரே

உள்நாட்டு விதை வகைகளை பாதுகாக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கும், தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார், ரஹிபாய் சோமா போபெரே. அதனால் அவர் “விதை அன்னை” என போற்றப்படுகிறார். மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில், கொம்பல்னே கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு இல்லாமல், 10 வயதிலிருந்தே வயல்களில் வேலை செய்து, கால்நடைகளை மேய்த்து, குடும்பத்துக்கு உதவினார். பள்ளிப்படிப்பு இல்லாவிட்டாலும், இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டார். இயற்கையை கவனித்து சீரற்ற மழைப் பொழிவும், மோசமான மண் நிலையும், விவசாய உற்பத்தி திறனை எவ்வாறு பாதித்தது என்பதை கண்டார்.
பூர்வீக விதைகளை இழப்பது, பாரம்பரிய விவசாய ஞானத்தை இழப்பதாகும் என்பதை உணர்ந்தார். பாரம்பரிய விதைகளின் சேகரிப்பை உருவாக்கினார். திணை, பருப்பு வகைகள், காய்கறிகள், தானியங்கள், மருத்துவத் தாவரங்கள் போன்ற காலநிலை மாற்றங்களை தாங்கக்கூடிய பயிர்களை தேடும் விவசாயிகளுக்கு, அவருடைய விதை வங்கி ஒரு உயிர் நாடியாக அமைந்தது.
சமூக விதை வங்கிகள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்து, பன்னாட்டு விதை நிறுவனங்களை சார்ந்திருப்பதை தவிர்த்து, உள்ளூர் மண் மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பயிர்களை வளர்க்க, நாட்டு விதைகளை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள, அழிவின் விளிம்பில் இருந்த பல பாரம்பரிய பயிர் வகைகளை மீட்டெடுக்க உதவினார்.
ஆரோக்கியமான உணவிற்கும், நீடித்த வேளாண்மைக்கும் ஆரோக்கியமான மண் அடித்தளம் என்று உறுதியாக நம்பினார். இயற்கை உரம் பயன்படுத்துதல், இயற்கை பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்தல், கலப்புப் பயிர் மற்றும் பயிர் சுழற்சி முறைகளைப் பின்பற்றுதல், நீரை சேமித்தல் மற்றும் பாரம்பரிய விவசாய நுட்பங்களை சார்ந்து இருத்தல் போன்ற இயற்கை விவசாயம் முறைகளை அவர் ஆதரித்தார்.
விதை வங்கிகள் மூலம் உள்ளூர் சுயசார்பை ஊக்குவிக்கவும், உள்ளூர் விதைகளை பாதுகாக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும், வறட்சியின் போது விதைகள் கிடைக்கவும், விவசாயிகள் விதைப்பதற்கு முன் விதைகளைக் கடன் வாங்கி, அறுவடைக்குப் பிறகு அதே அளவு விதைகளைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம், விதை வங்கி வளர்வதை உறுதி செய்தது.
கிராமப்புற மற்றும் பழங்குடி பெண்களுக்கு விதை பாதுகாப்பு, இயற்கை விவசாயம், சமையலறைத் தோட்டம், ஊட்டச்சத்து, உரம் தயாரித்தல் மற்றும் நிலையான வேளாண் நடைமுறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்துள்ளார். அவரது முயற்சிகள், பல்லுயிர்ப் பாதுகாப்பில் பெண்களைத் தலைவர்களாக மாற்றுவதோடு, எண்ணற்ற கிராமப்புற குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் மேம்படுத்தியுள்ளன.
பாரதத்தின் உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது மட்டுமல்லாமல், பல தேசிய மற்றும் மாநில விருதுகளால் கௌரவிக்கப்பட்டார். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் பெண்மணியாக, 100 தாக்கமிக்க பெண்களில் ஒருவராக, 2018ல் பி.பி.சி. நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்.
ரஹிபாய் சோமா போபெரே தொடங்கிய பெண்கள் சுய உதவிக்குழு அமைப்பு – “கல்சுபாய் பரிசர் பியானி சவர்தன் சமிதி”. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டம், அகோலே தாலுகாவில், கிராமப்புறப் பெண்கள் மற்றும் பழங்குடி விவசாயிகள் முன்னேற்றத்திற்காக 2015ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பாரம்பரிய உள்ளூர் விதைகளைப் பாதுகாத்தல், பரப்புதல் மற்றும் விற்பனை ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
சுதேசி விதைகள் மற்றும் நிலையான வேளாண்மை மீதான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் மூலம், எண்ணற்ற விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளார், ரஹிபாய். பாரம்பரிய விதைகளைத் தேடி மகாராஷ்டிரம் முழுவதும் பயணித்து பல வகையான நெல் விதைகள், பல வகையான துவரை விதைகள், பல வகையான காய்கறி விதைகள் ஆகியவற்றைச் சேகரித்தார்.
வீடுகள் முழுவதும் பாரம்பரிய விதைகளுடன் காணப்படும் ரஹிபாய் இன்றைய தலைமுறையின் நம்பிக்கை விதை.முறையான கல்வி இல்லாமலேயே, பல்லுயிர் பாதுகாப்பில் அனுபவத்திலும், பாரம்பரியத்திலும் வேரூன்றிய ஞானம், தேசிய வேளாண் கொள்கையை வடிவமைத்து, வருங்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் என்பதை அவரது பயணம் மூலம் நமக்கு நிரூபிக்கிறது.

– கட்டுரையாளர்: நந்தினி நாயர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : சுபதி கார்த்திக்