நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை பாரதத்தின் உண்மையான வரலாற்றை தொகுத்து மக்களுக்கு உணர்த்தும் இதிகாச சங்கலன சமிதி பற்றி அறிவோம்…
நமது நாட்டின் வரலாற்று புத்தகங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்கள், அவர்கள் ஆள்வதற்காக பாரத வரலாற்றை திரித்து எழுதினார்கள். அவர்களுடைய அடிப்படை சித்தாந்தம், பாரதம் என்பது ஒரு நாடு அல்ல, பல நாடுகளின் தொகுப்பு என்பதாகும். பாரதிய இதிகாச சங்கலன சமிதியின் நோக்கம், இந்த தவறான வாதத்தை முறியடிப்பதாகும்.
நமது நாட்டின் பண்டைய சரித்திரத்தை ஆராய்ந்து, உலகிலேயே “ராஷ்டிரம்” என்று அழைக்கப்படுவதற்கு, பாரதம் மட்டுமே முழுமையான தகுதியை பெற்றுள்ளது என, பல புத்தகங்களின் மூலம், பல கருத்தரங்கள் மூலம் நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.
1947 ஆகஸ்ட் 14 அன்று இரவு நடந்தது வரலாற்றில் மறக்க முடியாத துயர சம்பவமாகும். நாம் போராடியது, அகண்ட பாரத்தின் சுதந்திரத்திற்காகத்தான். காந்திஜியின் மனதில் பிரிவினை வருத்தத்தை ஏற்படுத்தியது. இதிகாச சங்கலன சமிதியின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் மற்றும் மாணவர் கருத்தரங்குகளில், பிரிவினைக்கான இதுவரை வெளிவராத சரித்திர உண்மைகள் ஆய்வு செய்யப்படுகிறது. சென்ற ஆண்டு நாங்கள் கரூரில் நடந்த கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கில், ஒரு வினாவை எழுப்பினோம். 1857 ஆம் ஆண்டு நடந்தது “முதல் சுதந்திரப் போர்” என்று மாணவர்களுக்கு போதிக்கிறோம். அதன் அர்த்தம் என்ன? ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், நாம் சுதந்திரமாக இருந்தோமா? முகலாயர்களை எதிர்த்துப் போராடிய சத்ரபதி சிவாஜி, ராணா பிரதாப் மற்றும் சீக்கிய மத குருமார்களின் போராட்டம், தெற்கில் விஜயநகர பேரரசின் சுல்தானை எதிர்த்து பேராட்டம் ஆகியவை சுதந்திரப் போராட்டம் அல்லவா? இந்த கருத்து முழு மனதுடன் ஏற்கப்பட்டு முகலாயர்களை எதிர்த்த நமது போராட்டம் சுதந்திரப் போராட்டம் தான் என்று ஆசிரியர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர்.
இதிகாச சங்கலன சமிதியின் முதல் செயல்பாடு சரஸ்வதி நதியின் தோற்றத்தையும், அதன் முடிவையும் கண்டுபிடித்ததாகும். ரிக்வேதம் தனது “நதி கீதம்” என்ற பகுதியில் 10 நதிகளை பற்றி பேசுகிறது. அவை – கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதுரு, பருசினி, மாருதிவிரா, அஸிகிஸி விட்டாச்சி, அரிஜிக்யா, சுஸோமா. இந்த 10 நதிகளில் சரஸ்வதி நதியை தவிர, மற்ற 9 நதிகள் நமக்கு புலப்படும்.
இதிகாச சங்கலன சமிதி, ஒரு குழுவை அமைத்து சரஸ்வதி நதியின் தோற்றம் கைலாசமலை என்றும் அது ரூப்பின், சுப்பின் வழியாக ஓடி ஆதிபத்ரி என்ற வியாசதேவர் தவம் செய்த இடத்தில் மறைகிறது. அதன்பின் இதிகாச சங்கலன சமிதி குழு, லேண்ட் ஸ்டாட் செயற்கை கோள் மூலம் சரஸ்வதி நதியானது பூமிமிக்கு அடியில் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் பாலைவனம் வழியாக ஓடி குஜராத்தில் பிரபாஸ் பட்டண என்ற இடத்தில் கடலில் கலப்பதை கண்டறிந்தது.
ஆரிய – திராவிட பொய் பரப்புரை ஒரு கட்டுக்கதை என்பதை பல புத்தகங்களின் மூலம் நிரூபித்தது. நேரு, காந்தியின் குடும்பத்திற்கு வெளியே சுதந்திரத்திற்காக போராடியவர்களின் வரலாறு எடுத்துரைக்கப்பட்டது. உதராணமாக கர்நாடகாவைச் சேர்ந்த ராணி அபாக்கா தேவியின் வீர வரலாறு எடுத்துரைக்கப்பட்டது.
1552 ஆம் அண்டு போர்ச்சுக்கீசியர்கள் உலால் (மங்களூர்) மீது படையெடுத்தனர். 1556 ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் பெரும் படையுடன் இரண்டாம் முறை படையெடுத்து வந்தனர். ஆனால் ராணி அபாக்கா தேவி திறமையுடன் போராடி அவர்களை அழித்தார். மூன்றாவது முறையாக ஜோர் பெக்ஸஜஷே தலைமையில் பெரும் படையுடன் வந்து உலால் நகரைத்தை கைப்பற்றி, ராணி அபாக்கா தேவியின் கோட்டையையும் கைப்பற்றினர். அபாக்கா ராணி மாறுவேடத்தில் தப்பி ரகசியமான இடத்தில் 200 பேர் கொண்ட ரகசிய படையை திரட்டி, அன்று இரவே கோட்டைக்குள் நுழைந்து கடுமையாக சண்டையிட்டு, போர்ச்சுகீசிய வீரர்கள் 70 பேர் கொல்லப்பட்டனர்.
அன்று இரவு பாரத நாடு காணாத ஒரு வரலாற்று நிகழ்வு நடந்தது. உலால் நகரத்து கடற்கரையில், 20-க்கு மேற்பட்ட போர்ச்சுகீசிய போர் கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சப்பட்டிருந்தன. அனைத்து போர் கப்பல்களும், தீக்கு இரையாக்கப்பட்டது. எப்படி? உலகின் முதல் ஏவுகணைத் தாக்குதல் ராணி அபாக்கா தேவியால் நடத்தப்பட்டது. ஏவுகனையின் பெயர் ‘அக்னிவன்” என்பதாகும். ராணியின் வீரர்கள் கோட்டையில் இருந்து செலுத்தப்பட்ட அக்னிவன் ஏவுகனைகள் அனைத்தும், எதிரி கப்பல்களை தீக்கு இரையாக்கியது. அபாக்காவின் விரிவான வீர வரலாற்றை கேட்ட பேராசிரியர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். மாணவர்களுக்கு இந்த வீர வரலாற்றை போதிப்பது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டு கும்பகோணத்தில் நடந்த பேராசிரியர் கருத்தரங்கத்தில், 400க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அதில் விவாதத்துக்கு எடுத்து கொண்டது, “சங்க இலக்கியமும் சனாதனமும்”. அதில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ்கணக்கு மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் உள்ள கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. சங்க இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ள சனாதன கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு திருப்பூரில் நடத்தப்பட்ட பேராசிரியர் கருத்தரங்கில், “சுதந்திரத்திற்குப் பின் பாரதத்தின் மீது திணிக்கப்பட்ட மூன்று பெரும் யுத்தங்கள்” பற்றியும் “அறிவிக்கப்படாத தினசரி நடக்கும் யுத்தங்கள்” பற்றியும் விவாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில் பாரதிய இதிகாச சங்கலன சமிதியின் தலைவர் பால்முகுந்பாண்டே மற்றும் மகிளா அமைப்பாளர் அனுராதா மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராணுவத்தில் வீர சாகசம் புரிந்து பரம்வீர சக்கர விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும், அவர்களின் படத்திறப்பு விழாவும் நடைபெற்றது.
இதிகாச சங்கலன சமிதி மக்களுடைய மனநிலையை மாற்றுவதற்காக பண்டைய பாரதத்தின் உண்மையான வரலாற்றை கல்வி திட்டத்தில் சேர்க்க வேண்டும் என, மாணவர்கள் மத்தியிலும், கல்லூரி ஆசிரியர்கள் மத்தியிலும், அறிவு ஜீவிகள் மத்தியிலும் அயராது உழைத்து வருகிறது.
கரூர் நிகழ்ச்சியில் தமிழ் ஆசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அதில் பகவத்கீதை, ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலுள்ள கருத்துக்கள் திருக்குறளிலும் மற்றும் சங்க இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன என்று எடுத்துரைக்கப்பட்டது. உதாரணமாக முதல் திருக்குறளை மேற்கோள் காட்டி பின்வருமாறு விளக்கப்பட்டது.
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இந்தக் குறளில் சொல் ஆராய்ச்சி, பொருள் ஆராய்ச்சி மற்றும் தத்துவ ஆராய்ச்சி என்ற மூன்று தலைப்புகளில் விவாதிக்கப்பட்டது.
சொல் ஆராய்ச்சி:
அ. “உலகு” என்ற சொல் பகவத்கீதையில் 10.8-ல் வருகிறது.
ஆ. “பகவன்” என்ற சொல் பகவத் கீதையிலும், ஸ்ரீமத் பாகவதத்திலும் கையாளப்படுகிறது.
இ. “ஆதி” என்ற சொல் வேதத்திலும் கையாளப்படுகிறது.
பொருள் ஆராய்ச்சி:
அ. எப்படி ‘அ” என்ற சொல் எல்லா சொற்களுக்கும் மூலமோ, அதே போல் இந்த உலகத்திற்கு மூலம் “பகவான்” என்று திருக்குறள் கூறுகிறது.
பகவத்கீதை
அஹம் ஸா;வஷ்ய பிரபவோ மத்தக
ஸா;வம் பிரவர்த்திதே – என்று குறிப்பிடுகிறது (10.8)
வேதத்தின் ஒரு பகுதியான பிரம்ப சாம்ஹிதை
“ஈஸ்வர பரம கிருஷ்ணா சச்சிதானந்த விக்ரக
அனாதிர்ஆதி கோவிந்த ஸா;வ காரண காரணம்” – என்று குறிப்பிடுகிறது.
இவ்வாறு சங்க இலக்கியத்தின் முப்பத்தி ஆறு நூல்களும் அலசி ஆராயப்பட்டு, அவற்றிற்கும் வேத நூல்களுக்கும் உள்ள ஒற்றுமை விளக்கப்பட்டது. இதிகாச சங்கலன சமிதி, தமிழ்நாடு மையம் மக்களுக்கு இதுபோன்ற அறிவு சார்ந்த விசயங்களை கொடுப்பதன் மூலம், மக்களின் கவனத்தை தேசபக்தியிலும், தெய்வபக்தியிலும் திருப்ப முயன்று வருகிறது.
கட்டுரையாளர்: துணை தலைவர்,
பாரதிய இதிகாச சங்கலன சமிதி,
தமிழ்நாடு & புதுச்சேரி