பாகிஸ்தானில் 72 ஆண்டுகளுக்குப் பிறகு 1000 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில் திறப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான ஹிந்து கோயில், 72 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சியால்கோட் நகரின், தாரோவால் பகுதியில் அமைந்துள்ள ஷாவாலா தேஜா சிங் கோயில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஹிந்து மக்களின் கோரிக்கையின் பேரில் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ள அந்தக் கோயில், முன்பு அந்தப் பகுதியில் ஹிந்துக்கள் வசிக்காமல் போனதை அடுத்து அடைக்கப்பட்டிருந்தது.

கடந்த 1992-ஆம் ஆண்டு இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் ஹிந்து கோயில்கள் தாக்கப்பட்டன. அப்போது இந்த ஷாவாலா தேஜா சிங் கோயிலும் சிதிலமடைந்தது. அதை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தக் கோயில் திறக்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார் 2000 ஹிந்துக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பிற பகுதிகளில் வசிக்கும் ஹிந்துக்கள் மட்டுமல்லாமல், இந்தியாவிலிருந்தும் ஹிந்துக்கள் இந்தக் கோயிலுக்கு அதிகளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சிறுபான்மை இனத்தவர்களின் புனித இடங்களை பாதுகாக்கும் வாரியத்தின் (ஈடிபிபி) செய்தித் தொடர்பாளர் ஆமிர் ஹாஸ்மி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *