பாகிஸ்தானின் முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது

ஈரான், – அமெரிக்கா, – இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தது பாகிஸ்தான். மேற்படி மூன்று நாடுகளும் கூடி பேசுவதற்கு முன்பே, பாரதத்தில் உள்ள பாகிஸ்தான் விசுவாசிகள், அந்நாட்டின் தலையீட்டால் ஈரான் மீதான போர் நின்றிருக்கிறது. விஸ்வகுரு பாவம் – சங்கிகள் எப்படி ஜீரணிக்கப் போகிறீர்கள் என தி.மு.க. நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சல்மா அவசர அவசரமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். ஆனாலும், தேச பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் பதியவிட்ட கருத்தை, எக்ஸ் வலை தளத்திலிருந்து நீக்கி விட்டார்.
‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என கிராமத்தில் ஒர் பழமொழி உண்டு. சர்வதேச நாடுகளின் மத்தியில், பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்ற பார்வையிலிருந்து, சர்வதேச அரசியலில் சமாதானத்தை ஏற்படுத்தும் நாடு என்ற நற்பெயர் பெற பாகிஸ்தான் எடுத்த முயற்சி இதுவாகும். பாகிஸ்தான், ஈரானுடன் நேரடியாக எல்லையை பகிர்கிறது போர் தொடர்ந்தால் அகதிகள் பிரச்சினை, எல்லைப் பாதுகாப்பு சிக்கல், போன்றவற்றால் பாகிஸ்தானை நேரடியாக பாதிக்கும்.
பாரதத்தில் உள்ள சில பத்திரிகைகள் மற்றும் இடதுசாரிகள், பாகிஸ்தான் உலகின் ஒரு மாபெரும் அழிவுப் போரைத் தடுத்துள்ளது. இந்த உன்னதமான பணியைச் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கு உலகமே கடமைப்பட்டுள்ளது என புகழாரம் சூட்டின.
ஈரான் தனது பிராந்திய பாதுகாப்பிற்காகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைக்கவும், ஒரு தற்காப்பு வளையத்தை உருவாக்கியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாதான் மிக முக்கியமான, பலம் வாய்ந்த அங்கமாகும். ஹிஸ்புல்லாவை விட்டுக்கொடுப்பது என்பது ஈரான் தனது கவசத்தின் மிக முக்கியமான பகுதியை இழப்பதற்குச் சமம். ஆண்டிற்குப் பல மில்லியன் டாலர்களை ஹிஸ்புல்லாவிற்கு, ஈரான் வழங்குகிறது. நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் உளவுத்துறைத் தகவல்களை ஈரான் தொடர்ந்து வழங்கி வருவதால், ஹிஸ்புல்லா ஒரு தனி நாட்டைப் போன்ற ராணுவ பலத்துடன் செயல்பட முடிகிறது. இந்த ஆதரவு தொடரும் வரை, ஹிஸ்புல்லா பின்வாங்குவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
ஹிஸ்புல்லா என்பது வெறும் ஒரு ஆயுதக் குழு மட்டுமல்ல, அது லெபனான் அரசியலில், ஒரு தவிர்க்க முடியாத சக்தி. ஈரான் இந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, லெபனான் அரசு இஸ்ரேலுடன் ஒரு தனிப்பட்ட உடன்படிக்கைக்குச் செல்வதைத் தடுத்து வருகிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ளாத, சில இடதுசாரி ஜென்மங்களும், சல்மா போன்ற உதிரிகளும், மோடியை விமர்சனம் செய்கிறார்கள். எனவே, பாகிஸ்தான் ஒருபுறம் போர் நிறுத்தத்திற்கு முனைவது போல் காட்டினாலும், உண்மையில் தீவிரவாதிகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவுவதுதான் பாகிஸ்தானின் முதன்மையான நோக்கமாகும். 