பள்ளிகளில் திருக்குறளை சிறப்புப் பாடமாக்க கோரிக்கை – ஆளுநருடன் தருண் விஜய் சந்திப்பு

பள்ளிகளில் திருக்குறளை சிறப்பு நீதிநெறி பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கோரிக்கை விடுத்தார்.

வள்ளுவத்தையும், திருக்குறளையும் பரப்புவதற்கான தனி அமைப்பை (எஸ்.ஒய்.டி.) நடத்தி வரும் தருண் விஜய், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வியாழக்கிழமை சந்தித்தார். அவருடன் எஸ்.ஒய்.டி. அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம் சுப்ரமணியனும் சென்றார்.

ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளை தனி நீதிநெறி பாடமாக வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான பாடப் புத்தகங்களை உலகத் தரத்தில் வடிவமைப்பது குறித்தும், திருக்குறளை சமகால தலைமுறையினரிடையே கொண்டு சேர்ப்பதன் அவசியம் குறித்தும் அவர்கள் அப்போது விவாதித்தனர்.

முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை தருண் விஜய் புதன்கிழமை சந்தித்தார். தேசிய அளவில் திருக்குறளை முன்னெடுத்து செல்வதற்கான கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் அவர் அப்போது முன்வைத்தார்.

குமரி முதல் இமயம் வரை திருக்குறள் எதிரொலிக்க வேண்டும்; அதுதொடர்பாக அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் மாநில, மத்திய அரசுகளுடன் பேசி வருகிறேன் என்றார் தருண் விஜய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *