ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, சமூகப் பணியும் செய்து, பல ஆய்வுகள் செய்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, ரங்கராஜன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
மதுரையில், ஆர். வீரராகவ ஐயங்கார் −- திருவேங்கடம்மாள் தம்பதியினருக்கு மகனாக, 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பிறந்தார், ரங்கராஜன் ஜி. பள்ளிக் கல்வியை மதுரையில் ஆரம்பித்த ரங்கராஜன் ஜி, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு, மதுரையில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்தார். அதனைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள வித்வான் தமிழ் சங்கத்தில் சேர்ந்து, தமிழ் மொழி படித்துத் தேர்ச்சிப் பெற்றார்.
அதன் பின்னர், மதுரையில் உள்ள சேதுபதி பள்ளிக்கூடத்தில், 1965 ஆம் ஆண்டில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். ஷாகாவில் அன்றாடம் விளையாடப்படும் விளையாட்டுகள் மூலம் கவரப்பட்டு, தனது எட்டாவது வயதிலேயே ஷாகா செல்ல ஆரம்பித்தார்.
1967 ஆம் ஆண்டு, குடியரசு தினமான ஜனவரி 26 அன்று, மதுரையில் பேச குருஜி வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் குருஜியின் பேச்சைக் கேட்டு, ஈர்க்கப்பட்டு அப்போதைய ஜில்லா பிரச்சாரக்காக இருந்த சிவராம் ஜியின் வழிகாட்டுதலில், மதுரை நகர் பௌத்திக் பிரமுக், நகர் காரியவாஹ், ஜில்லா பௌத்திக் பிரமுக் என பல்வேறு பொறுப்புகள் வகித்த பின்னர், தேசிய சிந்தனை கழகத்தில் ஜில்லா மற்றும் மாநிலப் பொறுப்பில் இருந்தார்.
1983 ஆம் ஆண்டில், ஜில்லா, மாநில அளவில் இதிகாச சங்கலண சமிதியில் பொறுப்பு வகித்தார். தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலத்தை உள்ளடக்கிய தென் தமிழகத்திற்கு பண்பாட்டுக் கல்வி இயக்குனர் பொறுப்பில் இருந்தார். 2000 ஆம் ஆண்டிலிருந்து தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் உள்ளடக்கிய தென் பாரதத்திற்கு இதிகாச சங்கலண சமதியின் பொறுப்பாளராக இருந்தார். தற்போது அகில பாரத செயற்குழு உறுப்பினராக இதிகாச சங்கலண சமிதியில் உள்ளார்.
1984 ஆம் ஆண்டு, அமைப்பில் பொறுப்பில் இருந்தபோது, மோரோபந்த் பிங்கலேஜியின் தலைமையில் “சரஸ்வதி நதி” பற்றிய ஆராய்ச்சியில் பங்கு பெற்று, பல உண்மைகளை வெளிக் கொணர்ந்தார். அதிற்காக பல இடங்களுக்கு சென்று, ஆராய்ச்சியின் மூலமாக வெளிக்கொண்டு வந்ததில், முக்கியப் பங்கு வகித்தார்.
1995 ஆம் ஆண்டில், தனது ஆசிரியர் பணியைத் துறந்தார். அதனைத் தொடர்ந்து, சங்கப் பணிக்கென தன் நேரத்தை முழுவதும் கொடுத்தார். வித்யா பாரதியின் மாநிலச் செயலாளர் இருந்து, மாணவ சமுதாயங்களுக்கு நல்லதொரு கல்வியை வழங்கும் சேவையிலும் ஈடுபட்டார். வித்யா பாரதியின் பொறுப்பில் இருந்த போது, மழலை கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்க முயற்சி எடுத்தார்.
சிறுவயதிலேயே குழந்தைகளை மனரீதியாக தயார்படுத்துவதிலும், வீட்டில் உள்ள சூழ்நிலையைப் போலவே இளம் குழந்தைகள் சிசு வாடிகாவில் பயில்வது போன்ற சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்பதில் தீவிர ஆர்வம் காட்டினார். இளம் பிள்ளைகளுக்கு கல்வியை சுலபமாக எப்படி கற்றுக் கொடுப்பது என்பதைப் பற்றியும், பல்வேறு வகையான யுக்திகளை கண்டறிந்து செயல்பட முனைந்தார்.
ஆரிய, திராவிட இனவாதம் – ஒரு கட்டுக்கதை என்ற கருத்தை மையமாக வைத்து, பல விஷயங்களை கண்டுபிடித்து, அதற்காக பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து உள்ளார். இதனால் பழங்காலமாக தமிழகத்தில் சொல்லப்பட்டு வந்த ஆரியம், திராவிடம் என்ற கோட்பாடு அடிபட்டுப் போனது.
மலைவாழ் மக்களின் உண்மையான வரலாறுகளை அறிந்து கொள்ள, நாடு முழுவதும் மலைவாழ் மக்கள் இருக்கும் பல பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நம்முடைய நாட்டில் அவர்களுடைய வாழ்க்கை முறை போன்ற வரலாற்று சம்பவங்களை ஆராய்ந்து அறிந்து, அதை தொகுப்பாக்கி, ஆவணப்படுத்தினார். அதன் மூலம் அவர்களுடைய உண்மையான வரலாறு வெளிவந்ததுடன், அனைவரும் அறியும் வகையில், தனது குழுவுடன் ஆவணப்படுத்தினார்.
பாரம்பரியமான ஸ்ரீ ரங்கம் கோயில், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மூன்று யுகங்களாக இருப்பதாக, தன்னுடைய வரலாற்று ஆய்வு மூலமாக தொகுத்து உள்ளார். பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பாண்டவர்கள் காலத்தில் இருந்தே தமிழகத்தில் நீடித்து நிலைத்து இருப்பதாக, தனது ஆய்வின் மூலம் தெரிவித்து உள்ளார்.
ராமர் காலத்தில் இருந்தே ராமேஸ்வரம் இருந்ததாகவும், மூன்று யுகங்களாக அது இருந்துள்ளதாக கண்டுபிடித்து, அதனை ஆவணப்படுத்தி உள்ளார். பாரத நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை குறித்தும் ஆராய்ச்சி செய்து உள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்பு அம்சம், அதனுடைய வரலாறு, எப்படி உருவானது போன்றவற்றையும் ஆராய்ந்து தொகுத்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள முக்கியமான கல்லூரி, பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில், வரலாறு ரீதியான பல்வேறு கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்தியும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நமது உண்மையான வரலாற்றை அறியும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும், புத்தகங்கள் எழுதியும், பல தலைப்புகளில் வெவ்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டும் மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆசிரியர் பணியில் இருந்தாலும் அதனை விட்டு, பல இடங்களில் ஆராய்ச்சி செய்து, அதன் மூலம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ரங்கராஜன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.