பெரும்பாலானோரின் அபிமானத்துக்குரிய தின்பண்டம் சாக்லேட். அன்புப் பரிமாற்றத்தை வெளிப்படுத்த சாக்லேட் பரிவர்த்தனை பெரிதும் பயன்படுகிறது.
சாக்லேட் நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. டார்க் சாக்லேட் மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. டார்க் சாக்லேட்டின் உற்பத்தியும் நுகர்வும் உயர்ந்து வருவதை புள்ளிவரம் உறுதிப்படுத்தியுள்ளது.
சாக்லேட் தயாரிப்புக்கு தேவையான பிரதான உள்ளீடு கோக்கோ. கோக்கோ உற்பத்தியில் ஐவரிகோஸ்ட் நாடு உள்ளது. இந் நாட்டில் 1.6 மில்லியன் மெட்ரிக் டன் கோக்கோ விளைகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இந்தோனேஷியா உள்ளது.
சர்வதேச அளவில் கோக்கோ உற்பத்தி 4.928 மில்லியன் மெட்ரிக் டன். கோக்கோ உற்பத்தியை அதிகப்படுத்த பிரகாசமான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் சாக்லேட்டுக்கான தேவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் எதிர்காலத்தில் சாக்லேட் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்பதை பொருளியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டினர்.
எதற்கும் மாற்று உண்டு என்பதற்கு இணங்க, கோக்கோவுக்கு மாற்றாக பலாக்கொட்டையைப் பயன்படுத்தலாம் என்று உணவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் அண்டு புட் கெமிஸ்ட்ரி’ என்ற விஞ்ஞான ஆய்விதழில் இது பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இப்போது பலாப்பழ பருவ காலம். மிகவும் இனிமையானது என்பதைக் குறிப்பிட தேனில் ஊறிய பலாச்சுளையை உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறோம். பலாப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. பலாக்கொட்டையும் சத்து மிகுந்ததே. பலாக்கொட்டையை சுட்டு தின்றால் வாயுத் தொந்தரவு குறையும். பலாக்கொட்டையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகை குறைபாடு உடையவர்கள் இதை தாராளமாக உண்ணலாம். பலாக்கொட்டை நுகர்வு பார்வைத் திறனை கூர்மைப்படுத்துகிறது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ செறிவாக உள்ளது. முடி உதிர்தலைத் தடுக்கவும் தோல் மெருகேறவும் பலாக்கொட்டை நுகர்வு உகந்தது. பலாக்கொட்டையில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் செரிமானப் பிரச்சினை ஏற்படுவதில்லை.
பலாக்கொட்டையை பிரதான உள்ளீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட் எல்லா வகையிலும் கோக்கோவைப் பிரதான உள்ளீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்டை விட ஒரு படி மேலாக உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவை, நறுமணம், சத்து, ஈர்க்கும் நிறம் போன்றவற்றால் பலாக்கொட்டை சாக்லேட் உணவுச் சந்தையை கலக்கும் என்று இத்துறை சார்ந்த வல்லுனர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
பலாக்கொட்டை சாக்லேட்டை ஜாக்லேட் என்று செல்லமாக குறிப்பிடுகிறார்கள். எதிர்காலத்தில் கோக்கோ சாக்லேட்டை விட ஜாக்லேட் நுகர்வு உயர்ந்தோங்கும் என்று கருதப்படுகிறது.