பரஸ்பரம் போற்றும் பெரியோர் பண்பு விண்ணுலகில் ஆதிசங்கரரும் ராமானுஜரும் சந்தித்துக் கொள்கிறார்கள்

ஆதிசங்கரர்: வணக்கம் ராமானுஜரே, தங்களைப் போல பூமியில் நீண்ட ஆயுள் பெற்று சமுதாயத்தையும் சமயத்தையும் செம்மைப்படுத்த என்னால் முடியாமல் போய்விட்டதே…

ராமானுஜர்: தாங்கள் அப்படி சொல்லக் கூடாது, சங்கரரே! தங்களது 32 ஆண்டு ஆயுளுக்குள் ஹிந்து சமுதாயத்தில் இருந்த 72 போலி மதங்களை களையெடுத்து அறுசமய வழிபாட்டை அழகாக ஸ்தாபித்திருக்கிறீர்களே!

ஆதிசங்கரர்: ஆனாலும் ராமானுஜரே, ஜாதிபேதமில்லாமல் வாழ்ந்து காட்டியது தாங்கள் அல்லவா! யாரானாலும் உங்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர் தானே?

ராமானுஜர்: சங்கரரே, காசியில் தங்கள் பாதையில் குறுக்கிட்ட சண்டாளனை குருவாக ஏற்றீர்களே? மனீஷா பஞ்சகம் இயற்றி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரின் அருள்வாக்கை உலகத்திற்கு பிரகடனம் செய்தவர் தாங்கள் அல்லவா?

ஆதிசங்கரர்: நானும் சரி, தாங்களும் சரி ‘பரம்பொருள் ஒன்றே பலவல்ல, அனைவருள்ளும் உறங்கி வாழும் ஆன்ம சக்தி ஒன்றேதான்’ என்ற தத்துவத்தை வெவ்வேறு வார்த்தைகளில் விளக்கியிருக்கிறோம். தாங்கள்  ‘விசிஷ்டாத்வைதம்’ என்று அருளினீர்கள்…

ராமானுஜர்: … தாங்களோ ‘அத்வைதம்என்று முத்திரை பதித்தீர்கள்!

ஆதிசங்கரர்: ஆனாலும் ராமானுஜரே, அனைவருக்கும் பொதுவாக ஒரே மூல தத்துவம் இருந்தாலும் ஊருக்குள் ஏற்றத்தாழ்வு பாராமல் பழக பயிற்சி அளித்தவர் தாங்கள்தானே?  உங்கள் ஸ்ரீவைஷ்ணவத்தில் திருமங்கை மன்னனும் ஒன்றுதான்,  உறங்காவில்லி தாஸனும் ஒன்றுதான், அனந்தாழ்வானும் ஒன்றுதான் அல்லவா?

ராமானுஜர்: தாங்கள் மட்டும் என்ன சங்கரரே? ஏழை மூதாட்டியின் இல்லத்தில் ‘கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’ என்பதை செய்து காட்டிவிட்டீர்களே?

ராமானுஜர்: சங்கரரே, உங்கள் அருட்பணிகளில் எனக்கு மிகவும் பிடித்தது சிவனையும் அம்மனையும் சூரியனையும் (முருகனையும்) கணேசனையும் விஷ்ணுவையும் ஒரே பீடத்தில் அமர்த்தி பஞ்சாயதன பூஜை முறையை வகுத்தீர்களே அதுதான்.

ஆதிசங்கரர்: என்னதான் இருந்தாலும் ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாட்டு முறை எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்பதை சட்டதிட்டம் போல வகுத்துக் கொடுத்தீர்களே, அதுதான் ராமானுஜரே, ஹிந்து சமுதாயத்திற்குள் ஒரு ஒழுங்கை நிலைநாட்ட முடிந்திருக்கிறது என்பேன்.