ஸ்ரீ ரமண மகரிஷியின் தனித்துவம் என்ன?
– கி. ரகுராஜன், தூத்துக்குடி
‘நான் முக்தி பெறவேண்டும்’ என்று நினைத்தவர்கள் ஏராளம். ‘நானிலிருந்து’ முக்தி பெறவேண்டும் என்றவர் ரமணர்.
பரதனாரே… தங்களுக்குப் பிடித்த நாயன்மார் யார்? ஏன்?
– சங்கீதா கேசவன், புதுச்சேரி
அப்பூதி அடிகள் தான். அந்தணர் குலத்தில் பிறந்த அவர் வேளாளர் குலத்தில் பிறந்த திருநாவுக்கரசரின் மீது அளவு கடந்த பக்தியை வைத்திருந்தார். தான் நடத்திய தொண்டு காரியங்களுக்கு திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் அன்னதானக் கூடம் என்றெல்லாம் பெயர் சூட்டியது மட்டுமல்லாமல், தனது மகன்களுக்குக் கூட சின்ன திருநாவுக்கரசு, பெரிய திருநாவுக்கரசு என்றெல்லாம் பெயர் சூட்டினார்.
ஜெயலலிதா அண்ணன் மகள் ‘தீபா’ கிறிஸ்தவரா?
– பி. சந்திரசேகரன், பெங்களூரு
அவரது பெயரே ‘தீபா பேட்ரிக்’ என்கிறார்கள். கணவர் பேட்ரிக்கா அல்லது மாதவனா என்பதை எல்லாம் தீபா தான் தெளிவுபடுத்தவேண்டும். நெற்றியில் குங்குமம் இல்லாதது ஏனோ?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சின்னக் குழந்தைகளின் பாடல், ஆடல் பற்றி?
– பரணிகுமார், தோட்டக்குறிச்சி
பரதநாட்டியமாக இருந்தால் பரவாயில்லை. மாறாக ‘பத்திகிச்சு… பத்திகிச்சு’ பாட்டுக்கு இடுப்பை வெட்டியாடும் காக்காவலிப்பு நடனங்கள், முக்கி முணங்கி ‘அம்மா… அம்மம்மா’ என்றெல்லாம் பாட ஆடவைத்து பார்ப்பது அநாகரிகம்.
நாஞ்சில் சம்பத்தின் திடீர் பல்டி…?
– பே. முத்தையா, வள்ளியூர்
இது பல்டி இல்லை. அந்தர் பல்டி. வான்கோழி மயிலாகுமா? என்று அறிக்கை விடுத்தார். கவனிக்கிற மாதிரி கவனித்தால் வான்கோழி கூட மயிலாகிவிடும் போல் தெரிகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறை – மத்திய அரசு பணிந்தது பற்றி?
– சு. முரளி, பவானி
மத்திய அரசு பணியவும் இல்லை.. பின்வாங்கவும் இல்லை. 15 வருஷமாக இருந்த நடைமுறைதான். மோடிக்கு எதிராக ஒரு நல்ல வாய்ப்பு என்று எதிர்க்கட்சிகள் தோள் தட்டின. அடுத்து வந்த மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் எல்லாம் புஷ்வாணமாச்சு.
திடீரென்று வேட்டி தினம் என்பதாக அறிவித்துள்ளார்களே?
– செல்வி. நர்மதா, வடலூர்
முதலில் வேட்டிதினம் என்று விளம்பரம் – அடுத்து சர்வதேச வேட்டி வாரம் என்று விளம்பரம். இதென்ன ஐ.நா சபையா அறிவித்தது என்று விசாரித்தால், இரண்டு பிரபலமான துணி நிறுவனங்களின் வியாபார தந்திரத்தில் உதித்தது என்பது புரிந்தது.
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.