பண்பு

ஏய் குருசாமி! என்ன பண்றே? சீக்கிரம் டிபன் கொண்டு வந்து டைனிங் டேபிள்மேலே வை” என்று காலேஜ் படிக்கும் தன் பேரன், வயதில் மூத்த வேலையாளை பெயர் குறிப்பிட்டு அழைப்பதைக் கேட்டு திடுக்கிட்டார் ராஜகோபால். உடனே அவர், வசந்த்! அவர் வயசுல பெரியவர்! அவரைப் போய் இப்படியா பேசறது? என்னத்தான் படிச்சாலும் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசணும். அதுதான் முக்கியம்” என அவர்கூற,

தாத்தா! உங்களுக்கு வேலையே இல்லையா? எப்பப்பார்த்தாலும் அட்வைஸ் பண்ணிக்கிட்டு? போங்க! போய் வேறவேலையை பாருங்க! பெருசு தொல்லை தாங்கல!” என்றான் வசந்த். அவன் சொன்னதைக் கேட்ட அவர், காலம் கெட்டுப் போச்சு!” என மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.

அன்று, வசந்த் கல்லூரி விழா. அவன் பெற்றோர் அலுவலக வேலை காரணமாக சென்றுவிட, வீட்டில் ஒருவரை கண்டிப்பாக அழைத்து வரவேண்டும் என்ற கல்லூரியின் கட்டாயத்தால், தன் தாத்தாவை வேண்டா வெறுப்பாக அழைத்துச் சென்றான் வசந்த்.

விழா ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த கல்லூரியின் முதல்வர், நடந்து வந்து கொண்டிருந்த வசந்தின் தாத்தா ராஜகோபாலனைக் கண்டவுடன், சில நிமிடம் யோசித்து, பின்னர், அவரிடம் வந்து, ஐயா! நீங்க அரசுப்பள்ளியில கணக்கு வாத்தியாரா இருந்தவர் தானே? என்னைத் தெரியுதா?” எனக் கேட்க,

தாத்தாவோ, தெரியல சார்!” எனக்கூற, நான் உங்கக்கிட்ட பத்தாம் வகுப்புல படிச்சேன். உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்” எனக் கூறி தாத்தாவின் பாதம் தொட்டு வணங்கினார். உடனே தாத்தா, சார் எழுந்திருங்க! இந்த வாத்தியாரை ஞாபகம் வச்சு பேசினதுக்கு ரொம்ப நன்றி. இவர் என் பேரன்! இந்த கல்லூரியிலதான் படிக்கிறார்”  என வசந்தை தாத்தா அறிமுகம் செய்தார்.

உடனே முதல்வர், சார்! நீங்க இன்னும் மாறல.  அப்ப மாதிரியே வயசுல சின்னவங்களா இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசற உங்க பண்புதான் எப்பவும் என் போன்ற மாணவர்களுக்கு உற்சாகம். அதை உங்கக்கிட்ட படிச்ச, போன தலைமுறை மாணவர்களான நாங்க பின்பற்றுகிறோம். ஆனால், இந்த தலைமுறை மாணவர்கள் அதைக் கற்றுக் கொடுத்தாலும், மதிப்பதேயில்லை என்பதுதான் மனசுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு” என முதல்வர் கூற, உடனே தாத்தா, படிப்பு, பணம், அந்தஸ்து எல்லாம் அடுத்தது தான் சார். சிறு குழந்தைகள் முதலில் அனைவரையும் நாம் மரியாதையான அன்பாக பேசுவதுதான் நம் பண்பை எப்பொழுதும் மற்றவர்கள் மனதில் நிற்க வைக்கும். இத்தகைய நல்ல பண்பை இன்றைய தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எடுத்து சொல்லி புரிய வையுங்கள் சார்!” என தாத்தா சொல்லவும் வசந்த் தலைகுனிந்தபடியே நின்றான்.

அவன் மனதில், குருசாமியை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்ற எண்ணம் பதிந்தது.