பாஸ்கர்: கந்தா, நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக, பொருளாதார அந்தஸ்து நிலைகளில் நிறைய மாற்றங்கள் வந்திருக்கே? எந்த கட்சிக்கு நீ வாக்கு அளிக்கப் போகிறாய்?
கந்தசாமி: பாசு, நீ எனக்கு நெருங்கின நண்பன்தான்.ஆனால் எனது வாக்கு ரகசியம் காக்கப்பட வேண்டியது.
பாஸ்கர்: அப்போ உனது வாக்கை நல்ல நபருக்கு என்று இல்லாமல் வீணாக வேறு யாருக்காவது போட்டு விடுவாயா ?
கந்தசாமி: ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வரும் தேர்தல் அத்தி பூத்த மாதிரி. எனது வாக்கை வீணாக்க எனக்கு என்ன கிறுக்கா பிடித்துள்ளது.?… க்கும், இதோ பள்ளியின் வாக்குச்சாவடி சுவரில் ஒட்டியுள்ள பட்டியலில் யார் எனக்கு சிறந்தவர் என தோன்றுகிறதோ அவருக்கே என் வாக்கு. இதுக்கு மேல ரகசிய வாக்கு பற்றி கேட்காதே.
பாஸ்கர்: அது சரி. யாருமே பிடிக்கலீன்னா, ‘நோட்டா’ வுக்கு சில பேர் வாக்கை போட்டு விடுகிறார்களே. அது என்ன, ரூபாய் நோட்டா, பள்ளிக்கூட நோட்டா ?
கந்தசாமி: சில வருடங்களுக்கு முன்பெல்லாம் 49 ஓ படிவம் கொடுப்பார்கள். இந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் எந்த வேட்பாளரையும் நிராகரிக்கும் உரிமை என்று பெயர். இப்போ நீதிமன்ற உத்தரவின் படி, இந்த உரிமைக்கு ‘நோட்டா’ (None Of The Above) – வாக்குப்பதிவு மெஷினின் கடைசி கட்டத்தில் இருக்கும் என்று பெயர்.
பாஸ்கர்: சரி ‘நோட்டா’ ல வாக்கு போடணும்னா என்ன பண்றது ?
கந்தசாமி: அட, கிறுக்குப் பயலே. அதைப் பத்தி தெரிஞ்சிக்கோ நல்லது தான். ஆனா நீ என்ன கேட்டிருக்கணும், இருப்பவர்களில் ஒரு ஆள் கூட உருப்படியா இல்லையா அப்படின்னு கேளு.
பாஸ்கர்: திடீர்னு நோட்டாவைக்கொண்டு வந்தா, பாதிப்பேருக்கு மேல எந்த ஆள லாயக்கில்லைன்னு நோட்டாவுல போட்டுத் தொலைச்சுருவாரே திருவாளர் பொதுஜனம்?
கந்தசாமி: அரசியல்வாதிகளின் ஊழல் அடாவடி தாங்காமல் அதிக பட்சம் 2014 தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 சதவீதம் (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியிருக்கு. அவ்ளோதான்.
பாஸ்கர்: இப்போதுதான் படித்தவர்கள் பலரும் தேர்தலில் நிற்க ஆரம்பித்து விட்டார்களே. சொல்லப் போனால், ஊழல் பெருச்சாளிகள் பலரின் மகன், மகள்கள் கூடப் பெற்றோர் திரட்டிய பாவ மூட்டைகளை ஒதுக்கி, சுயபலத்தில் நிற்க ஆரம்பித்து விட்டார்களே! திறமையான வேட்பாளர்கள் பலர் இப்போ தேர்தல் சீன்ல வந்தாச்சே. அப்படி இருக்கும்பொழுது நோட்டா ஏன்?
கந்தசாமி: இப்போதுதான் நீ சமர்த்தாக பேசுகிறாய் அரசியல் புரிதல் இல்லாதவர்களுக்கான ஜோக்கர் ஐக்கான்தான் தான் நோட்டா. நோட்டா மூலம் எதிர்ப்பு காட்டுவது நல்லதுதான். ஆனால் நம் வோட்டு குறிப்பிட்ட நல்ல கட்சிக்கோ, குறிப்பிட்ட நல்ல வேட்பாளருக்கோன்னுஇல்லாம விரயமாகிவிடுமே?
பாஸ்கர்: சரியாச்சொன்னே நீ. ஆட்சி அதிகாரத்தை தேர்ந்தெடுப் பதற்குத்தானே நமக்கு வாக்குரிமை கொடுத்திருக்காங்க? பின்பு எதுக்கு நோட்டா?
கந்தசாமி: சரி, சரி இன்னம் பத்து பேர் போயிட்டா நமக்கு வாக்களிக்கும் டர்ன் வந்துரும். அப்போ நாம இதுவரை பேசிக்கிட்டதிலிருந்தே நல்ல வேட்பாளரை செலக்ட் பண்ணியிருக்கணும்.நோட்டாவை ஒதுக்கிருப்பா கொயந்தே.
பாஸ்கர்: படிச்சவங்களோ, படிக்காதவங்களோ, டீக்கடை பெஞ்சில உட்காந்து தினசரி அரசியலை அலச நமக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. அப்போ, யாரோடு அழுத்தமும் இல்லாம, நல்ல வேட்பாளரை நாம செலக்ட் பண்ணி அவருக்கு ஒட்டுப் போட்டுட்டா, மிக விரைவில் நோட்டாவை ஒழிச்சிடலாம்.
கந்தசாமி: மூளையை நல்லா கசக்கத் துணிஞ்சவன் நீ. இந்திய ஜனநாயகம் உலகமே பாராட்டும் அமைப்பு. தேர்தல் கமிஷன் அவ்வப்போது சில சீர்திருத்தங்களை கொண்டு வராங்க. அதில ஜனநாயகம் வெற்றி பெறும் தருணங்கள் பல. அன்னிக்கு சேஷன் அரசியல்வாதிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனாமா விளங்கினார். இன்னைக்கு பாரேன். பூத்களை கைப்பற்றுவது என்ற பேச்சே கிடையாது. பணப்பரிமாற்றம் காணும் தொகுதிகள்ல தேர்தல் ரத்தாகிறது. இப்படி பல முன்னேற்ற நிலைகளை பார்க்கிறோம். ஓட்டு போட எப்படி ஒருவருக்கு உரிமை உள்ளதோ அதேபோல் எந்த நபரும் எனக்கு விருப்பமில்லை என்று கூறவும் மக்களுக்கு கொடுத்த உரிமைதான் நோட்டா. அதே நேரம், நோட்டாவிற்கு அப்பாற்பட்ட அடுத்த முன்னேற்ற சிந்தனை என்ன என்பதை தேர்தல் கமிஷன் கவனித்துக் கொள்ளும்னு எதிர்பார்க்கலாம்.