தேர்தலின் போதுதான் இது நடந்தது, தேர்தலின் போதுதான் இதுவும் நடந்தது

தேர்தலின் போதுதான் இது நடந்தது

ஆண்டு 2017. அஸாமின் காளிதா – ஹிமாக்‌ஷி தம்பதியினருக்கு பிப்ரவரி 26 அன்று பிறந்த குழந்தை மூச்சு விட திணறி வந்தது. உடனடியாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு குழந்தையை அனுமதிக்க மார்ச் 4 அன்று ஹெலிகாப்டரில் குழந்தை அசாமிலிருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.  ஆனால் தலைநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இந்த பிரச்சினை குறித்து முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோடி அப்போது காசியில் உ.பி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார். ஆனாலும் நிலைமையை புரிந்து கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட்ட மோடி, குழந்தையை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், ஆம்புலன்ஸ் செல்லும் சாலையில் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட்டார். இதன் காரணமாக  டெல்லி விமான நிலையம் வந்ததும், சரியான நேரத்தில் சாலை வழியாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. மார்ச் 5 அன்று அந்த குழந்தை ஆபத்து கட்டத்தை  தாண்டிவிட்டதாகவும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தையை காப்பாற்றிய  தெய்வம் மோடி என அந்த பெற்றோர்   நன்றி தெரிவித்தார்கள்.  (தினத்தந்தி 2017 மார்ச் 6 ).

தேர்தலின் போதுதான் இதுவும் நடந்தது

ஆண்டு 2011. ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. ஒரு சம்பவம்: வீடு வீடாக பணம் கொடுத்துச் செல்லும் அனைத்து  அரசியல் வியாபாரிகளும் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் மளிகைக் கடை வைத்திருக்கும் ஸ்வயம்சேவகரான ஹரிஹரன் வீட்டிற்கும் படையெடுத்தனர். வீட்டின் வாக் குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணத்தைக் கையில் திணித்தனர். ஹரிஹரன் பணம் வாங்க மறுத்துவிட்டார். எல்லா அரசியல் கட்சியினருக்கும் ஹரிஹரன் மீது கோபம். பிழைக்கத் தெரியாதவர் என்று தெருவில் உள்ளவர்கள் ஏளனமாகப் பேசினார்கள். 2011 அக்டோபரில் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. காஞ்சிபுரம் நகராட்சியில் 47வது வார்டு ஓரிக்கையில் இருக்கும் ஹரிஹரனிடம் இப்போதும் எல்லா கட்சியினரும் வாக்குக்கு பணம் கொடுத்தனர். சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட அனுபவத்தால் மிகவும் யோசனை செய்த ஹரிஹரன் எல்லா கட்சியினரும் கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டார். தேர்தல் முடிந்த மறுநாளே ஹரிஹரன் தனது வீட்டு வாசலில் தெருச் சாக்கடை மூடிஇல்லாமல் தெருவெல்லாம் ஓடுவதையும் துர்நாற்றம் வீசுவதையும் பார்த்து அந்தப் பணத்தை கொண்டு தேவையான பொருட்கள் வாங்கி சாக்கடையை சரிசெய்து மூடி போட்டு மூடினார். பக்கத்தில் உள்ளவர்களுக்கு வியப்பு. “என்ன ஹரிஹரன், எங்களிடமும் சொன்னால் இந்த பாவப் பணத்தை பொதுக் காரியத்திற்கு செலவிட்டிருப்போமே!” என்று கோரஸாக சொன்னதைக் கேட்டு,ஹரிஹரன் புன்சிரிப்புடன் சென்றார்.
(2011 விஜயபாரதத்தில் ராம. ராஜசேகர்)