தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளன. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறக்கிறது. தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிற பெட்டிக்குத் தகுந்தபடி தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
1967 முதல் இன்றுவரை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறார்கள். இரண்டு கட்சிகளுக்கும் கொள்கையும் கிடையாது… மண்ணாங்கட்டியும் கிடையாது. ஊழல் விவகாரங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. கடந்த தேர்தலில் திமுகவின் ஊழல்களைப் பார்த்து வெறுத்துப் போய் அதிமுகவிற்கு வாக்களித்தார்கள். இப்போது அதிமுகவின் ஊழல்களைப் பார்த்து மீண்டும் ஊழல் திமுகவிற்கு வாக்களிப்பது என்பது பைத்தியக்காரத்தனமாகும். இரண்டு கழகங்களுமே வேண்டாம் என்று முடிவெடுப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.
பாஜகவை மதவாத கட்சி என்று முத்திரையிடும் இவர்கள் முஸ்லிம் லீக்குடனும் மனித நேய மக்கள் கட்சியுடனும் கூட்டு வைப்பதில் வெட்கப்படுவதில்லை. மதுவிலக்குப் பற்றி பேசுவதற்கு இரண்டு கழகங்களுக்குமே கொஞ்சம் கூட யோக்கியதை கிடையாது.
தமிழகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிப்பதில் இருவருக்குமே சமபங்கு உள்ளது. திமுக நேரிடையாக ஹிந்து விரோத போக்கைக் கடைப்பிடித்தால் அதிமுக மறைமுகமாக ஹிந்து விரோதப்போக்குடன்தான் செயல்பட்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற வகையில் ஆட்சி அமைய வேண்டும் என்று நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதுபோன்றே அமைந்தது. அதுபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ அமைய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்று சொல்லும்போது அதில் தே.மு.தி.கவும் ம.தி.மு.கவும் அடக்கம். இரண்டு கட்சி பெயர்களிலும் கழகங்கள் இருப்பதுபோல இரண்டுமே திமுக, அதிமுகவின் நிழல் கட்சிகள்தான். போதாக்குறைக்கு இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. திமுக, அதிமுகவை விட, இது ஆபத்தான கும்பல்.
எனவே, தமிழக மக்கள் வாக்களிக்கும் முன்பு தமிழகத்தில் நல்லதொரு தேசிய கட்சிக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். வெற்றி பெறும் கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்பதற்கு இது ஒன்றும் குதிரைப் பந்தயம் இல்லை. யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பது முக்கியமானது. கழகங்கள் இல்லாத ஆட்சிக்கு பிள்ளையார் சுழி போட முன்வருவோம்.