ஒரு குடும்பத்தில் ஒருவர் எப்பொழுதும் எதிர்மறையாக நினைப்பது மற்றும் பேசுவது போன்றவை அந்தக் குடும்பத்தின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பதால், நாம் அவர்களிடமிருந்து என்ன பெறுகிறோம் என்பது முக்கியமில்லை. நாம் நம் வாழ்க்கையில் சிறந்த மனிதராக மாறுகிறோம் என்பது தான் முக்கியம். நம்முடைய வார்த்தைகளால் ஒருவருக்கு மன அமைதி கிடைக்குமானால் அதுவே, இன்று நாம் செய்த மிக பெரிய நற்செயலாகும்.
“மரங்களில் இலைகள் உதிர்ந்து திரும்பவும் முளைப்பது போல், நிலவு முதலில் தேய்ந்து மீண்டும் முழு நிலவாக மாறுவது போல, நாமும் சிறந்த நிலைமைக்கு வரலாம். வாழ்க்கையில் கஷ்டங்களும், துன்பங்களும் யாருக்கும் நிரந்தரமில்லை!”
நம்முடைய எண்ணங்களை செயலாக மாற்றுவதற்கு முன், பலமுறை யோசிப்பது நல்லது. ஏனெனில், நாம் ஒரு செயலை செய்த பிறகு, அதன் பலனை நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் நாம் தான் அனுபவிக்க வேண்டும். ஒருவரது குணம் மற்றும் அவர்களது நடவடிக்கை ஆகியவற்றை வைத்து, இயற்கையாக வருவது தான் அன்பு என்பது.
அழகையும், பணத்தையும் பொறுத்து வருவது அல்ல அன்பு என்பது. அவர்களாக விரும்பினால் மட்டுமே பிறர் மீது அன்பு செலுத்த முடியும். கட்டாயப்படுத்தி அல்லது தொந்தரவு செய்து, யாருடைய அன்பையும் பெற முடியாது. தன்னுடைய தேவைக்காக அன்பு செய்கிற மாதிரி ஒரு சிலர் நடித்தாலும், விரைவில் நடிப்பு தெரிந்துவிடும். நமக்கு தேவையில்லாத விஷயங்களை, மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல், நம்முடைய மனம் என்னும் தோட்டத்தில் நல்ல எண்ணங்கள் என்ற மலர்களை மலரச் செய்து பூந்தோட்டம் போல் வைத்திருப்பது நமக்கு நல்லது.
நாம் மிக வேகமாக சிந்திக்கும் பொழுது, நாம் ரகசியமாக வைக்க வேண்டிய சில விஷயங்களை, நம்மை அறியாமல் பிறரிடம் கூறி விடுவோம். நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் இதை நாம் புரிந்து கொள்ளலாம். மகிழ்ச்சியுடன் பூத்துக் குலுங்கும் மலர்கள் காலையில் மலர்ந்து, மாலையில் உதிர்ந்து விட்டாலும், அதற்காக கவலைப்படாமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் இருக்கும். நாமும் மலர்களைப் போல் நம் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ பழகுவோம்!
ஒவ்வொரு நாளும் பூக்கள் புதிதாய் பூப்பது போல், நாமும் புதிதாய் பிறப்பது போல், மனதளவில் உணர்ந்து பழையவற்றை நினைக்காமல், ஒவ்வொரு நாளையும் மலர்களைப் போல் மகிழ்ச்சியாய் ஆரம்பிப்போம்! நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகள் நம்மை அறியாமல் மற்றவர்களை காயப்படுத்த வழி வகுத்து விடும். மற்றவர்கள் கோபமாக பேசும் பொழுது, நாம் கொஞ்சம் பொறுமையாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி, கோபம் இவையெல்லாம் aஇணைந்தது தான் வாழ்க்கை.
“இந்த விஷயத்தில் தோற்று விடுவோமோ” என்ற பயத்துடன் ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது அந்த பயமே நம்மை தோல்வியடைய செய்து விடும். “எப்படியாவது முயற்சி செய்து நான் ஜெயித்து விடுவேன் என்று நினைக்கும் பொழுது” நமக்கு வெற்றி எளிதாகிவிடும். நம்முடைய நல்ல எண்ணங்கள் நமக்கு பெரிய பலம் மற்றும் தன்னம்பிக்கை அளிக்கும். எண்ணங்களுக்கு வலிமை உண்டு!
ஒரு பிரச்சனையை தைரியமாக எதிர்நோக்கும் பொழுது, நாம் இதற்காகவா பயந்தோம் என்று நாமே ஆச்சரியப்படுவோம். பிரச்சினையை கண்டு பயந்தால் பிரச்சனை நமக்கு பெரிதாக தெரியும். “மனிதனுடைய தைரியத்திற்கு முன்னால் எந்த பிரச்சனையும் ஒன்றும் செய்ய முடியாது” என்பதை உணர்ந்து தைரியமாக இருப்போம்.
ஒரு குறிக்கோளை நிர்ணயித்த பிறகு ஒரே முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சித்தாலும் நமக்கு வெற்றி கிடைப்பது தாமதமாகிறது என்றால் சோர்ந்து போய் விடக்கூடாது. கடந்த முயற்சியின் போது செய்த சில தவறுகளை இந்த முறை தவிர்ப்பதும், நம்முடைய இலக்கில் மட்டுமே கவனம் வைப்பதும் வெற்றிக்கான வழிகள் ஆகும். “முயற்சி செய்து தோற்றால் தவறே இல்லை, முயற்சிக்காமல் இருப்பது தான் தவறு!” நம் பிள்ளைகள் எந்த போட்டிக்கு சென்றாலும் நாம் ஆசீர்வதித்து வாழ்த்தி அனுப்பும் பொழுது, தன்னம்பிக்கையுடன் போட்டியில் கலந்து கொள்ள உதவியாக இருக்கும்.
இன்றைய தினம் நம் வாழ்வில் இறைவனின் ஆசியுடன், நாம் நினைத்தது, எதிர்பார்த்தது எல்லாமே நன்றாக நடக்கும் நாளாக, நேற்று வரை இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீரும் நாளாக, மற்றும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத இனிய நாளாக அமையும் என்று நாம் மனதார ஒவ்வொரு நாளும் நம்புவோம்! நல்லதே நடக்கும்!
நாம் ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது ஒருவேளை வழி தவறி விட்டால் அங்கேயே நின்று விடாமல், யாரிடமாவது வழி கேட்டு சரியான இடத்தை சென்று அடைந்து விடுவோம். அதுபோல ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் நாம் அந்த சிக்கலில் இருந்து வெளி வருவதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போகாமல் இருக்கக் கூடாது. நம் வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களையும், இடையூறுகளையும் சமாளிக்க நமக்கு தைரியமும், மன பலமும் இருந்தால் போதும்.
வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து விடலாம்!
கட்டுரையாளர்: நூலகர்,
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், தமிழ்நாடு