தமிழகத்தில் ‘நவோதயா’ பள்ளிகளைத் துவக்க மதுரை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. உடனே ஸ்டாலின் நவோதயா பள்ளி மூலம் மத்திய அரசு ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிக்கிறது என்கிறார். வழக்கம்போல் வைகோ, சீமான், திருமாவளவன் போன்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நவோதயா பள்ளி மூலம் தமிழகத்தை காவி மயமாக்க பாஜக திட்டமிடுகிறது என்று குற்றம் சுமத்துகின்றனர்.
சாதாரண குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஹிந்தி வேண்டாம் என்கிற இந்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்த்து ஹிந்தி படிக்க வைப்பது தமிழக மக்களை ஏமாற்றுவதுதானே! யாராவது அரசியல் தலைவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
இவர்கள் சொல்லுவது போல் காவி என்பது பயங்கரமானதா? நமது தேசியக் கொடியில் காவி தியாகத்தையும் வெள்ளை சமாதானத்தையும் பச்சை பசுமையையும் குறிக்கிறது என்றுதானே இதுவரை விளக்கமளித்து வந்தார்கள். அதனால் தமிழகம் காவிமயமானால் வரவேற்கப்பட வேண்டியதுதானே?
தமிழகத்தை குட்டிச்சுவராக்கியதில் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கும் அண்ணாதுரைக்கும் கருணாநிதிக்கும் பெரும் பங்குண்டு. தமிழகத்தில் திரும்பிய இடங்களில் எல்லாம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து இளைஞர்களை மது போதைக்கு அடிமையாக்கியதுதான் கழக ஆட்சிகளின் சாதனை.
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்கிறார்கள். அதேநேரத்தில் தமிழகத்தில் பா.ஜ.க தான் ஆட்சி செய்கிறது என்கிறார்கள்.
இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கிறதே!
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சுமார் ஒரு லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலங்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் காவிமயமாக காட்சி அளித்ததைப் பார்க்க முடிந்ததே! தமிழகம் காவி மயமாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அது வெகு தூரத்தில் இல்லை.