கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் ‘நாரதர் ஜெயந்தி’ யை தேசிய எண்ணம் கொண்ட ஊடக குழுவினர் (விஸ்வ சம்வாத் கேந்திரங்கள்) சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் என்பது செய்தி. நாரத ஜெயந்தியின்போது சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு செய்யும் விதத்தில் ஊடக்கத்துறையில் இயங்கும் அன்பர்களை அழைத்து (இதுவரை 800 பேர்) கௌரவிக்கும் மரபும் தொடங்கியுள்ளது. சென்ற ஆண்டு சென்னை விஸ்வசம்வாத் கேந்திரம் துக்ளக் சத்யா உள்ளிட்ட நால்வரை கௌரவித்தது நினைவிருக்கும். ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் ஊடகத்துறையில் மட்டுமல்ல. எந்தத் துறையில் செயல்பட்டாலும் அதற்கென ஒரு தூய ஹிந்து தேசிய அடையாளத்தை முன்நிறுத்துவது வழக்கமாகியுள்ளது. உதாரணமாக தொழிலாளர் அமைப்பு பாரதிய மஸ்தூர் சங்கம் – விஸ்வ கர்மா; விவசாயிகள் அமைப்பு பாரதிய கிஸான் சங்கம் – பலராமர்; கிரீடா பாரதிஅனுமார். அது சரி, ஏன் நாரதர் ஊடகத்துறைக்கு?
ஜர்னலிஸம், இதழியல், என்றெல்லாம் அழைக்கப்படும் ஊடக செயல்பாடு அதற்கு அழகு சேர்க்கும் எத்தனையோ பண்புகளை தொலைத்துவிட்டு நிற்கிறது என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். என்னென்ன பண்புகள்? செய்தியை நேர்மையாக வழங்குவது; ஒரேதேசம் ஒரே பண்பாடு என்ற எண்ணத்துடன் செயல்படுவது, சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் செய்தி சொல்வது, விவரமானவராக செய்தியாளர் விளங்குவது, தேசத்தின் கலாசாரத்தை, தேசத்தின் ராணுவத்தை மதிப்பது என்று பலப்பல.
நாரதர் இந்த பண்புகளுக்கெல்லாம் உறைவிடம் என்று சொல்வது சற்றும் மிகையல்ல. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மும்மூர்த்திகளில் எவரிடமானாலும் சரி, சகஜமாக சந்தித்து பேசக்கூடியவர் என்று பாரத மரபு கூறுகிறது. நாரதர் தகவல் பரப்பும் விதத்தில் பொதிந்துள்ள குறிக்கோள் ஒட்டுமொத்த சமுதாய நன்மையே. தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த முருகன், பிள்ளையார் மாம்பழ போட்டி கதையை நாரதரே எழுதி வசன கர்த்தாவாகவும் இயக்குநராகவும் செயல்பட்ட விவரம் அறியாதவரும் கிடையாது. நோக்கம் தாய், தந்தையரின் மேன்மையை உலகிற்கு பிரகடனம் செய்வது. பிள்ளையாருக்குத் தெரியும், முருகனுக்குத் தெரியாது என்பதெல்லாம் நாரதர் கட்டிய கதை!
சத்திய ஆவேசத்துடன் அதிகார பீடங்களோடு மோதவேண்டியிருந்தால் மோதுவது செய்தியாளரின் அலுவல்களில் ஒன்று. இப்படித்தான் ஒருமுறை நாரதர் சிவபெருமானை முறைத்துக்கொண்டார். சாபம் பெற்றார். (பார்க்க ‘லட்சிய செய்தியாளர் நாரதர்’ என்ற கட்டுரை).
அடித்தட்டு மக்கள் கதைகள் மூலம் நல்லபண்புகளை உள்வாங்கிக் கொள்ள முடிவதற்காக நாரதர் வால்மீகி மூலம் உலகுக்கு ராமாயணம் கிடைக்கச் செய்தார். வியாசரை சந்தித்து பாகவதம் (கண்ணன் கதைகள்) எழுதச் செய்தார். சாட்சாத் கண்ணனையே சந்தித்து கிருஷ்ணாவதாரத்தில் அவரது பால லீலைகள் என்னவாக இருக்கவேண்டும் என்று விவாதித்தார். அதாவது நாரதருக்கு காலச்சக்கரத்தின் சுழற்சியோ பிரபஞ்சத்தின் தொலைவுகளோ பொருட்டே அல்ல. அதுமட்டுமல்ல, எல்லா தரப்பினரையும் சந்தித்து தகவல் தந்து, தகவல் பெற்று, சமுதாய சேவை செய்வது அவருக்கு கைவந்த கலை.
ஒரு குறிப்பிட்ட சந்திப்பு உபநிடதத்திலேயே அழகாக அமைந்துள்ளது. நாரதர் சனத்குமாரரை சந்தித்து, எல்லாம் தெரிந்திருந்தும் தனக்கு மனக்கவலை இருப்பதாக சொன்னார். அவருக்கு உபதேசம் வழங்குவதற்கு முன் சனத்குமாரர் உனக்கு என்னவெல்லாம் தெரியும் என்று கேட்டார். நான்கு வேதங்கள், வரலாறு, பிரபஞ்ச இயல்பு, இலக்கணம், ஆன்மீகம், கணிதம், நல்லொழுக்கம், அரசியல், தற்காப்புக் கலை, ஜோதிடம், மருத்துவம், புராணம், நாடோடி கலைகள், தர்க்கம், இயற்பியல், துர்தேவதை ஒழிப்பு, சுரங்கம், நடனம், சங்கீதம், ஒப்பிலக்கணம் என்று முழுப்பட்டியலையும் சமர்ப்பித்தார். பலவித்தைகளிலும் கரைகண்ட நீ ஆன்மவித்தை அறியவேண்டும். அதனை உபதேசிக்கிறேன் என்றார் சனத்குமாரர். அவ்வண்ணமே செய்தார். அதாகப்பட்டது, சராசரி செய்தியாளர் இன்னதுதான் தெரிந்து கொண்டிருக்கவேண்டும் என்பதற்கான வரம்பே கிடையாது. அதைத்தான் சாந்தோக்ய உபநிடதத்தில் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பு எடுத்துக்காட்டுகிறது.
பல கலைகளிலும் வித்தகராக இருப்பதோடு மேலும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தாகம் செய்தியாளருக்கு இருப்பது அவரது பணியை மெருகேற்றும். அந்த தாகம் நாரதருக்கு இருந்தது. தொடக்க காலத்தில் சிறந்த சங்கீத நிபுணராக இருந்தபோதிலும் இதயத்திலிருந்து இசை பொழிவது எப்படி என்பதை அனுமாரிடம் கற்றுக்கொள்ளும்படி அவருக்கு கூறப்பட்டபோது அவ்வாறே செய்தார் அந்த மேதை. அவரது சங்கீதமும் சோபித்தது. சும்மாவா பாடினான் பாரதி, நலம் திகழ் நாடு’ என்று? (‘பஞ்ச பாரதீயம்’ என்று நாரதர் தமிழிலேயே ஒரு இசைநூல் இயற்றியதாக பேரகராதி கூறுகிறது).
எனவேதான் தேவரிஷிகளில் நான் நாரதர்” என்று கண்ணன் கீதையிலேயே பதிவு செய்திருக்கிறான் போலிருக்கிறது.
பாரதநாட்டிற்கே உரிய ஹிந்து அடையாளத்தை ஊடக துறையிலும் பிரதிபலிக்க நாரதர் காட்டிய வழி நல்ல வழிதானே?
ஊடகத்தின் ‘உயரங்கள்’!
* ‘தலித்’, ‘ஜாதி ஹிந்துக்கள்’, என்று சொல்லாடல் பிரயோகம் செய்வதுதான் இன்றைய செய்தியாளரின் வாடிக்கை. ஹிந்து சமய அருஞ்சொற்கள் என்றால் வேப்பங்காய் போல.
* தமிழ்நாடு ஒரு மாநிலம். அது பாரத நாட்டின் பிரிக்கப்படமுடியாத அங்கம் – இந்த அரிச்சுவடி சங்கதி தெரியாமல் இருப்பதுபோல் நடந்துகொள்வதுதான் இன்றைய ஊடகவியலாளரின் சாமர்த்தியம்.
* விஞ்ஞானம் ஆரிய திராவிட இனவாதத்தை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டபிறகும் அதுபோல எதுவும் நடந்ததாக காட்டிக்கொள்ளாமல் கடைவிறிப்பது இதழியல் இங்கிதமாம்!
* பயங்கரவாதியை தீவிரவாதி என்று புனுகு பூசுவது ஜர்னலிச பாஷன்.
* சங்கீதம், யோகா போன்ற துறைகளில் ஞானசூனியமாகவே நீடிப்பது ஊடகத் துறையினரின் வாழ்வாதார உரிமை என்பது போன்ற ஒரு சூழல். (ஒரு மாலை நாளிதழில், தம்புராவுடன் காட்சி தந்த ஒரு நடிகையின் படத்தின் கீழே இவர் வீணை வாசிக்கிறார் என்று ஒரு வரி அச்சாகியிருந்தது!)
* நானோ டெக்னாலஜி ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் போன்ற அறிவியல் எல்லைப்புற சங்கதிகள் பற்றி செய்தி தர இயலாது என்ற மூளைச்சோம்பல் பரவலாக காணப்படுகிறது. நியூட்ரினோ என்றால் மட்டும் அது என்ன என்று புரிந்துகொள்ளாமலே வாய்கிழியும். காரணம் வேறு.