சுதந்திர பாரத வரலாற்றில் முதல் முறையாக மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருமுடி கட்டி பதினெட்டாம் படி ஏறி சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசித்த நிகழ்ச்சி சென்ற வாரம் தேசத்தின் கவனத்தை ஈர்த்தது. அதையடுத்து மறுநாள், அக்டோபர் 23 அன்று, ஸ்ரீ நாராயண குருவின் மகா சமாதி நூற்றாண்டு நிகழ்ச்சிகளை குடியரசுத் தலைவர் வர்க்கலாவில் தொடங்கி வைத்தார். அதனால் ஹிந்து சமுதாயம் ஸ்ரீ நாராயண குரு பற்றி சிந்தனை செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த குரு யார், எந்த சூழ்நிலையில் அவர் தோன்றினார், என்ன பணி செய்தார் என்பதை அறியாதவர்கள் அறிந்து பயன்பெற இந்த வார அட்டைப்படக் கட்டுரை உதவும் என கருதுகிறோம்.
சுவாமி விவேகானந்தர் 1892ல் கேரளாவிற்குச் சென்றபோது, அந்த மாநிலத்தை “பைத்தியக்கார புகலிடம்” என்று அழைத்தார். அதற்குக் காரணம், அங்கு நிலவிய தீவிரமான தீண்டாமையும் மக்களைப் பிரித்து வைத்த சாதிய பாகுபாடுமே. இந்தப் பாகுபாடுகள் மக்களைப் படிக்க அனுமதிக்காததால், கல்வி மற்றும் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தன, அதையே அவர் விமர்சித்தார்.
“சர்வே பவந்து சுகினஹ, சர்வே ஸந்து நிராமயா, சர்வே பத்ராணி பஸ்யந்து” (எல்லோரும் நலமாக வாழணும், எல்லோரும் நோய் நொடியின்றி திகழணும், எல்லோரும் உன்னதங்களை அடையணும்) என்ற கொள்கைப்படி வாழ்ந்து வந்த ஹிந்து சமுதாயம் அங்கே அப்படி ஒரு இழிநிலைக்கு உள்ளாகியிருந்தது. விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விட்டு ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்க வரலாறு நெடுக ஆன்மீகப் பெருந்தகைகளும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் அரும்பாடு பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் வரும் மகான்தான் ஸ்ரீ நாராயண குரு.
ஸ்ரீ நாராயண குரு 1856 ஆகஸ்ட் 20 அன்று திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி கிராமத்தில், விவசாயி மதன் ஆசான், குட்டி அம்மா ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவர் அன்பாக “நாணு” என்று அழைக்கப்பட்டார். மதன் ஒரு ஆசிரியர்; சமஸ்கிருதத்திலும், ஜோதிடத்திலும் ஆயுர்வேதத்திலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். நாணுவுக்கு மூன்று சகோதரிகள். சிறுவனாக இருந்தபோது, தனது தந்தை ராமாயண, மகாபாரதக் கதைகளை கிராமத்தின் எளிய மக்களுக்குச் சொல்லும்போது நாணு மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்.
இளம் நாணு தனது தந்தை, மாமா கிருஷ்ணன் வைத்தியன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் வீட்டிலேயே கல்வி பயின்றார். அங்கு அவருக்கு தமிழ், சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகள், சித்தரூபம், பால பிரபோதனம், அமரகோசம் போன்ற பாரம்பரிய பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
15 வயதில் அவர் தனது தாயை இழந்தார். நாணு தனது இளமைப் பருவத்தை கல்வி கற்பிப்பதிலும், தனது மாமாவுடன் ஆயுர்வேத பயிற்சியிலும் செலவிட்டார். மீதமுள்ள நேரத்தை கோயில்களில் பூஜாமுறைகளுக்காக அர்ப்பணித்தார்.

உண்மையைத் தேடுபவராக
இளம் நாணு அறிவுக் கூர்மை கொண்டிருந்தார். 21 வயதில் அவரது வீட்டிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் உள்ள கருநாகப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரபல அறிஞர் கும்மம்பிள்ளி ராமன் பிள்ளை ஆசானிடம் அனுப்பப்பட்டார். காயங்குளத்திற்கு அருகிலுள்ள வாரணப்பள்ளியில் ஒரு குடும்ப வீட்டில் விருந்தினராக வசித்தபடி நாணு, மற்ற மாணவர்களுடன் சேர்ந்து சமஸ்கிருதம், கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம், தர்க்கரீதியான சொல்லாட்சி ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார். வேதங்களையும் உபநிடதங்களையும் பயின்றார். அருகிலுள்ள பள்ளியில் கற்பிக்கத் தொடங்கினார். பெற்ற அறிவு அவருக்கு பலரின் மரியாதையைப் பெற்றுத் தந்தது, அப்போது அவர் “நாணு ஆசான்” என்று அழைக்கப்பட்டார்.
மரணப் படுக்கையில் இருந்த தனது தந்தையுடன் சிறிது நேரம் செலவிட நாணு வீடு திரும்பினார். சிறிது காலம், அவர் அக்கம்பக்க குழந்தைகளுக்காக ஒரு கிராமப் பள்ளியை நடத்தினார். கவிதைகள் புனைவார்; பாடல் எழுதுவார். கிராம மக்களுக்கு தத்துவம், தார்மீக விழுமியங்கள் குறித்து சொற்பொழிவு செய்வார். குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில், நாணு பாரம்பரிய கிராம மருத்துவரின் மகள் காளியம்மாவை மணந்தார்.
பரிவ்ராஜக வாழ்க்கையில்
நானு ஆசான் ஒரு சன்யாசியாக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். அவர் ஒரு ‘பரிவ்ராஜகர்’ (சத்தியத்தைத் தேடி ஊர் ஊராக செல்பவர்) ஆனார். இந்த நாட்களில் ஒரு நாள், நாணு குஞ்சன் பிள்ளையைச் சந்தித்தார் (இவர் பின்னர் சட்டம்பி சுவாமிகள் என்று அறியப்பட்டார்). நாணு ஆசானின் தத்துவஞானத்தையும், யோகா மீதான ஆர்வத்தையும் கண்டுபிடித்து பாராட்டிய குஞ்சன் பிள்ளை, திக்கட் அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த யோகியின் கீழ், நாணு ஆசான் ஹட யோகா உட்பட பல்வேறு யோகப் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றார். இந்த அறிஞர்களிடமிருந்து பெற்ற அனுபவம் நாராயண குருவின் பிற்கால வாழ்க்கையிலும் தத்துவத்திலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அருவிப்புரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை
புனித நூல்களிலிருந்து கற்றுக்கொள்வதும், யோகா பயிற்சி செய்வதும் நாணுவின் தாகத்தைத் தணிக்கவில்லை. அவர் சத்தியத்தைத் தேடி தனது பயணத்தைத் தொடர்ந்தார். படிப்படியாக, அவர் அருவிபுரம் என்ற அழகான இடத்திற்கு வந்தார். அது ஒரு காட்டுப் பகுதி. சுற்றி மலைகள்; அங்கு ஒரு சலசலக்கும் ஓடையும் (நெய்யாறு) பாய்ந்தது. குணப்படுத்துதல் அல்லது ஆலோசனைக்காக அதிகமான மக்கள் அவரைத் தேடியதால், அவரும் அவரது சீடர்களும் சிவனை வழிபடுவதற்கு ஒரு வழக்கமான கோயில் தேவை என்று உணர்ந்தனர். சிவனின் சிலையை பீடத்தில் நிறுவினார்.தன்னுடைய செய்தியை மக்களுக்கு வழங்கினார்.
பிறப்பாலோ இனத்தாலோ வேறுபாடு இன்றி,
மற்றைய மதங்களின்பால் வெறுப்பேதும் இன்றி,
அனைவரும் சகோதரர் என்றே நாம் வாழ்வோம்,
இதுவே இனி நமது லட்சியமாக அமையும்,
இதனை நீங்கள் அனைவரும் உணர்வீராக!
புதிய கட்டம் தொடங்கியது
1904 ஆம் ஆண்டு குருவின் வாழ்க்கையில் ஒரு புதிய கட்டம் தொடங்கியது. அவர் தனது அலைந்து திரியும் வாழ்க்கையைத் துறந்து, தனது சாதனாவை (ஆன்மீக பயிற்சி) தொடர ஒரு இடத்தில் குடியேற முடிவு செய்தார். திருவனந்தபுரத்திற்கு வடக்கே இருபது மைல் தொலைவில் உள்ள சிவகிரியைத் தேர்ந்தெடுத்தார்.
வர்க்கலாவில் ஒரு சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கினார். ஏழைச் சிறுவர்களும், அனாதைகளும் அவரது பராமரிப்பில் வளர்ந்தனர். சாதிகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டது. திருச்சூர், கண்ணனூர், தெல்லிச்சேரி, கோழிக்கோடு, மங்களூர் என பல்வேறு இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன. 1912ல், சிவகிரியில் சாரதா தேவிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டது. அத்தகைய கோயில்களில் வழிபாடு அர்த்தமற்ற பழக்கவழக்கங்களைக் குறைக்க பெருமளவில் உதவியது.
திருச்சூரில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்று கூர்க்கஞ்சேரியில் உள்ள ஸ்ரீநாராயண கோயில். இந்தக் கோயிலின் வளாகத்தில் ஸ்ரீ நாராயண பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி, மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், திறமைப் போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடத்தப்படும் இந்தப் போட்டிகள், இளைஞர்கள் எழுச்சி பெற்று தங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்பட தளமாக இருந்து வருகின்றன.
சீர்திருத்தவாதியாக
கோயிலில் இறை வழிபாட்டினை எளிமையான முறையில் அமைத்தல், இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்தல் ஆகிய கோட்பாடுகளுக்காக அவர் பாடுபட்டு வந்தார். எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும், நடைமுறைகளையும் ஒழிக்க வேண்டும் என்பது அவருடைய முதன்மையான நோக்கமாக இருந்தது. “நாராயண தர்ம பரிபாலன யோகத்தின்” உறுப்பினர்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அயராமல் உழைத்தனர். எல்லா சாதி மக்களுக்கும் ஆலயத்திற்குள் சென்று வழிபடும் உரிமையைப் பெற்றுத் தரவேண்டும் என்ற உணர்வுடன் பாடுபட்டனர். மகாத்மா காந்தி கற்றுக் கொடுத்த அஹிம்ஸை முறையிலேயே அந்தச் சீரமைப்பு இயக்கத்தையும் நடத்த முயன்றனர். இதற்குச் சத்தியாக்ரஹப் போராட்டத்தையும் சிலர் மேற்கொண்டனர்.
வைக்கம் சத்தியாக்கிரகம்
சத்யாக்கிரக இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை கேளப்பன், மாதவன், கிருஷ்ணசாமி என்ற மூன்று இளைஞர்கள் ஏற்றனர். அவர்கள் காந்திஜியுடன் தொடர்பு கொண்டு, அவருடைய நல்வாழ்த்துக்களுடன் வைக்கம் என்ற நகரத்தில் சத்யாக்கிரகத்தைத் தொடங்கினர். அந்த ஊரில் சிறப்புமிக்க சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. அதற்குச் செல்லும் தெருவில் பட்டியல் சமூக மக்கள் நடப்பதற்குக் கூட அனுமதி இல்லை. இந்த அநியாயமான நிலைக்கு முடிவு கட்டியது சத்யாக்கிரக இயக்கம். காந்திஜி ஆமதாபாத்தில் இருந்தபடி தொண்டர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வந்தார். நாராயண குரு அந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அதில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவரும் அவருடைய பக்தர்களே, அவர்களை நாராயண குரு ஊக்குவித்தார். பழமையான நடைமுறைகளில் நம்பிக்கை கொண்ட சிலர் அந்த இயக்கத்தை எதிர்த்தனர். அவர்களுடைய செயல்கள் சத்தியாக்கிரகங்களைப் பெரிதும் பாதித்தன. ஆனால் சத்தியாக்கிரகிகளோ பொறுமையுடன் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டனர். இறுதிக் கட்டமாக 1925 ஏப்ரலில் காந்திஜியே வைக்கம் சென்று பிரச்சினைக்கு முடிவு காண வழி வகுத்தார்.
1937ல், திருவாங்கூர் அரசரின் ஆணை ஒன்று ‘ஹரிஜனங்களும் ஆலயங்களுக்குள் சென்று இறைவழிபாடு செய்யலாம்’ என்ற அனுமதியை பாரத நாட்டிலேயே முதன் முறையாக வழங்கியது. சத்தியாக்கிரகம் முடிவுற்றது. அது நடைபெற்ற இடத்தில், அதன் நினைவாக ஏழைக் குழந்தைகளுக்கென நாராயண குரு ஓர் ஆரம்பப் பள்ளியை நிறுவினார்.
மகாசமாதி
1928 செப்டம்பரில் குரு கடுமையாக நோய்வாய்ப்பட்டார். செப்டம்பர் 20 அன்று மகாசமாதி எய்தினார்.